அமைதிக்கான நோபல் பரிசு: நர்கீஸ் முகமதியின் மகன், மகள் பெற்றுக் கொண்டனர்!

அமைதிக்கான நோபல் பரிசு: நர்கீஸ் முகமதியின்  மகன், மகள் பெற்றுக் கொண்டனர்!

ரான் சிறையில் உள்ள நர்கீஸ் முகமதிக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், பரிசை நர்கீஸ் முகமதி மகன், மகள் பெற்றுக் கொண்டனர்.

ஈரானில் அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப ஹிஜாப் அணியாத குற்றச்சாட்டில் கைதான மாஷா அமினி என்ற இளம்பெண், போலீஸ் காவலில் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, ஈரான் முழுவதும் பெரிய அளவில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு தற்போது நர்கீஸ் சிறையில் இருந்து வருகிறார்.

பொறியாளரான நர்கீஸ், ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் கருத்துரிமைக்கான ‘சகரோவ்’ பரிசை கடந்த 2018-இல் பெற்றார். மேலும், இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டது. ஈரானில் பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையிலும் அயராது பணியாற்றி வருவதற்காக, நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. நர்கீஸ் முகமதி அமைதிக்கான நோபல் பரிசு பெறும் 19-ஆவது பெண்ணும் ஈரான் நாட்டைச் சேர்ந்த 2- ஆவது பெண்ணும் இவர் ஆவார்.

ஈரானில் மேற்கத்திய நாடுகளுடன் தொடர்பு உள்ளதாக கைதானவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் தெஹ்ரானின் எவின் சிறையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நார்வேயின் ஆஸ்லோ நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை பாரீஸில் வசித்து வரும் அவரது மகன் அலி ரஹ்மானி மற்றும் மகள் கியானா ரஹ்மானி பெற்றுக் கொண்டனர்.

இதையடுத்து, செய்தியாளர் சந்திப்பில் கியானா ரஹ்மானி கூறியதாவது, ‘எனது தாயை மீண்டும் பார்ப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஒருவேளை, அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில் நான் அவரைப் பார்க்கலாம். ஆனால், அதுகுறித்து எனக்கு கவலை இல்லை. ஏனென்றால், என் இதயத்திலும் போராட்டங்களுக்கான மதிப்பிலும் அவர் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்’ என கூறினார்.

error: Content is protected !!