இஸ்ரேல் புதியது என்று சொல்ல வருகிறார்கள்!

இஸ்ரேல் புதியது என்று சொல்ல வருகிறார்கள்!

‘உங்கள் தேசத்தை விட நான் மூத்தவள்,’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஒரு தட்டியை பிடித்துக் கொண்டு ஒரு பாலஸ்தீனிய மூதாட்டி நின்று கொண்டிருக்கும் படம் வைரல் ஆகி இருக்கிறது. பல முஸ்லிம்கள் உற்சாகமாக அதைப் பகிர்ந்து வருகிறார்கள். அதாவது அந்த அளவுக்குப் இஸ்ரேல் புதியது என்று சொல்ல வருகிறார்கள்.இது ஒரு வசீகரமான பன்ச் டயலாக் என்பதைத் தாண்டி இதில் ஒன்றுமில்லை. இளைய நாடு என்பதற்காக ஒரு நாட்டின் சட்டபூர்வ நிலையை மறுதலிக்க முடியுமா என்ன? ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா தவிர்த்து இந்த உலகில் பெரும்பாலான நாடுகள் 1940களுக்குப் பின்னர்தான் உருவாகி இருக்கின்றன. பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தில் இருந்து மட்டுமே மொத்தம் 65 நாடுகள் விடுதலை பெற்று புதிய நாடுகளாக ஆகி இருக்கின்றன.

அந்தப் பாட்டி சொல்லும் அதே விஷயத்தை தெற்காசியாவிலும் நாம் சொல்லலாம். இந்தியாவில் நிறைய தாத்தா, பாட்டிகள் பாகிஸ்தானை விட மூத்தவர்களாக இருப்பார்கள். பாட்டி தாத்தா கூட வேண்டாம். பாகிஸ்தானில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பங்களாதேஷை விட வயது அதிகமானவர்களாக இருப்பார்கள்.

1990 முதல் இன்று வரை மட்டுமே 34 புதிய நாடுகள் தோன்றி இருக்கின்றன. கடைசியாக உருவாக்கப்பட்ட நாடு தெற்கு சூடான் – ஜூலை 2011ல்தான் அது தனி நாடாக ஆனது. அதாவது இன்று வாழும் பாதி டீன் ஏஜ் பசங்களை விட அது இளையது. இதையெல்லாம் சுட்டிக் காட்டி அந்தந்த நாடுகளின் உருவாக்கத்தை மறுதலிக்க முடியுமா என்ன?

இஸ்ரேல் எனும் நாட்டின் சட்டபூர்வ அமைப்பையே கேள்வி கேட்கும் இந்த மாதிரி அணுகுமுறைகள்தான் பாலஸ்தீனத்தில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடக் காரணம். அதற்கு இது போன்ற அர்த்தமற்ற பன்ச் டயலாக்குகள் உதவுகின்றன.

நான் முன்பே சொன்ன விஷயம்தான்: ஜியோனிசத்துக்கு எதிராக இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்வதற்கும் யூதர்களுக்கு எதிராக இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. Anti-Zionism is actually antisemitism in disguise.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

error: Content is protected !!