காந்தி படுகொலை வழக்கை, மீண்டும் விசாரிக்க வேண்டியதில்லை!?
மகாத்மா காந்தியை கோட்சே-வை தவிர வேறு யாரும் சுட்டதற்கான ஆதாரமில்லை என்று வழக்கறிஞர் அமரேந்தர் சரண் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.காந்தி படுகொலை வழக்கை, மீண்டும் விசாரிக்க வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.மகாத்மா காந்தி, 1948 ஜனவரி 30-ஆம் தேதி, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சே-வால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, 15.11.1949 அன்று அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இந்நிலையில், காந்தி கொல்லப்பட்டு 69 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மும்பையைச் சேர்ந்த ‘அபினவ் பாரத்’ என்ற அமைப்பின் அறங்காவலர் டாக்டர் பங்கஜ் பத்னிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், “காந்தி மீது 4 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. கோட்சே சுட்டது 3 குண்டுகள்தான். 4-ஆவது குண்டு எங்கிருந்து வந்தது? என்று முறையாக விசாரிக்கவில்லை; அந்த 4-வது குண்டுதான் காந்தி உயிரிழக்க காரணம்; மேலும் 1966-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி கே.எல். கபூர் ஆணையம் உண்மையை வெளிக்கொண்டு வரவில்லை; கோட்சே பயன்படுத்திய இத்தாலி பெரட்டா ரக சிறிய துப்பாக்கியை அவருக்கு கங்காதர் தண்டவதே என்பவர் கொடுத்துள்ளார்; அவருக்கு ஜெகதீஷ் பிரகாஷ் கோயல் என்பவர் துப்பாக்கியை கொடுத்துள்ளார்.இதற்கு மேல் துப்பாக்கி எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்கவில்லை; சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியின் பதிவு எண் 606824; இது குவாலியரைச் சேர்ந்த டாக்டர் தத்தாத்ரேயா பர்சுரேவுக்கு சொந்தமானது என்று சந்தேகம் எழுப்பப்பட்டது.
அவரைக் கண்டுபிடித்தபோது அவரிடம் அதே பெரட்டா ரக துப்பாக்கி இருந்தது; அதன் பதிவு எண் 719791; ஆனால், அதே பதிவு எண்ணில் குவாலியரைச் சேர்ந்த உதய் சந்த் என்பவரிடமும் ஒரு துப்பாக்கி இருந்துள்ளது; காந்தியின் உயிரைப் பறிக்க காரணமாக இருந்த அந்த நான்காவது குண்டு, பதிவு எண் 606824 மற்றும் 719791 ஆகிய இரண்டு துப்பாக்கிகளில் இருந்தும் வந்தது அல்ல என்று 48-ஆம் ஆண்டு வெளிவந்த போலீஸ் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த 4-ஆவது குண்டு எங்கிருந்து வந்தது? என்ற மர்மத்தை கண்டறிய மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விஷயத்தில் மூத்த வழக்கறிஞர் அமரேந்தர் சரணை உச்ச நீதிமன்றத்திற்கு உதவி செய்ய நியமித்தனர்.இந்நிலையில், வழக்கறிஞர் அமரேந்தர் சரண், காந்தி படுகொலை தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமா? என்பது தொடர்பாக தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ளார்.தற்போது தனது ஆய்வை முடித்து அமரேந்திர சரண் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறார்.அதில் “மகாத்மா காந்தியை கோட்சேவை தவிர வேறு யாரும் சுட்டதற்கான ஆதாரமில்லை; கோட்சே மட்டுமே காந்தியை கொலை செய்து இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் காந்தி படுகொலை வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.