32°C
விளம்பரம்
Advertisement

தேரோடும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலினிலே…

admin சேலம் Published: July 12, 2014 4 நிமிட வாசிப்பு Updated: July 7, 2017 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




பால்யத்தில் என்னை பெரிதும் மிரட்சிக்கும், சந்தோசத்துக்கும் உள்ளாக்கியது நெல்லையப்பர்கோயில் தேரோட்டம் தான். திருநெல்வேலி டவுணில் வீடு இருந்தது.கொஞ்ச நேரத்தில் நடந்தே நெல்லையப்பர் கோயிலை அடைந்து விடும் துõரத்தில். ஆனி மாதம்தான் “சீசனுடன்’ தேரோட்ட வேலைகள் தொடங்கும். ஆம்…அந்த மாதத்தில் குற்றால சீசனும் களை கட்டும். நெல்லையில் விட்டு விட்டு சாரல் அடிக்கும். சாரம் என்பது மழை அல்ல. கல்யாண வீட்டு வாசலில் நின்று பன்னீர் தூவுவார்களே..அந்த மாதிரி அவ்வப்போது வானத்தில் இருந்து துõவுகிற விஷயம்.
nella thear

nella thear. 2
முதலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன், பிள்ளையார், முருகன், சண்டிகேஸ்வரர் தேர்களை மூடிஇருக்கும் தகர கொட்டகையை பிரித்து தேரை பழுது பார்ப்பார்கள். அப்புறம், வடத்தை பொறுத்துவார்கள். வடம் என்பது தேங்காய் நாரால் செய்யப்பட்டது. அதாவது தேரை இழுக்கும் மெகா கயிறு. அதை ஒருவரால் இழுக்கவோ, புரட்டி போடவோ முடியாது. அவ்வளவு பிரமாண்டமாக இருக்கும்.

அப்புறம், தேருக்கு தட்டு எனப்படும் வேலையை செய்வார்கள். குதிரை, பிரம்மா மர சிற்பங்களை பொறுத்துவார்கள். அப்புறம் நெல்லையப்பர் கோயில் கொடி ஏறும். முதல் நாள் திருவிழா, இரண்டாம் நாள் திருவிழா என ஒவ்வொரு திருவிழாவும் ஒவ்வொருவர் கட்டளையாக நடக்கும். காலையிலும் மாலையிலும் சாமி புறப்பாடு இருக்கும். குடவாசல் தீபாரணையை பார்க்க, சாமி சன்னதி வாசலில் ஒரு கூட்டம் இருக்கும். கோயில் வாசல் வழியே நெல்லை யப்பர் வரும்போது தீபாரணை காண்பித்துக்கொண்டே வருவார்கள். அதற்கு குடவாசல் தீபாரணை என்ற பெயர். கோயில் உள்ள நின்றசீர்நெடுமாறன் கலையரங்கத்தில் தினமும் மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.

நெல்லையப்பர் கோயிலை பெரியளவில் விரிவு படுத்தி கட்டியவன் பாண்டியமன்னன் நின்றசீர் நெடுமாறன் என அழைக்கப்படும் கூன் பாண்டியன். அதனால், அந்த மன்னனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அந்த பெயர். பிற்காலத்தில் நாயக்க மன்னர்களும், நாயக்க மன்னர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமை பெற்ற தளவாய் என்பவர்களும் கோயிலை பாதுகாத்ததாக வரலாறு.

8ம் நாள் திருவிழா சிறப்பானது. அன்றுதான் கங்காளநாதர் என்பவர் தங்க சப்பரத்தில் பிச்சை எடுத்தபடி மாலை நேரத்தில் வருவார். மற்ற ஊரில் இருந்து வியாபாரிகள் நெல்லை டவுண் சுற்றி வட்டாரங்களில் கடை விரித்து விடுவார்கள். பெரும்பாலும் பொருட்காட்சி தொடங்கி இருக்கும். ஊரே ஜே. ஜே என இருக்கும். கங்காளநாதரின்  பிச்சை பாத்திரத்தில் பக்தர்கள் பயபக்தியுடன் துட்டு போடுவார்கள். அப்புறம், லாலா சத்திர முக்கில் இசை நிகழ்ச்சி கச்சேரி நடக்கும். அது முடிய இரவு 1 மணி ஆகிவிடும். அப்புறம், நள்ளிரவில் தேரடி மாடனுக்கு பூஜை போடுவார்கள். தேரடி மாடன் என்பவன் ஒரு காலத்தில் அந்த ஏரியாவில் வாழ்ந்து, தனது உயிரை தியாக செய்தவராக இருக்கலாம். தென்மாவட்டங்களில் மாடன், மாடசாமி போன்ற பெயரில் சிறு தெய்வங்கள் நிறைய இருக்கின்றன. அவர்கள் அனைவரும் மனிதர்களாக இருந்து ஏதோ ஒரு தியாக செய்து உயிரை விட்டு தெய்வங்களாக்கப்பட்டனர்.  காரை யாறில் இருக்கும் சொரிமுத்தையன் மற்றும் பரிவார தெய்வங்கள்தான் இந்த சிறு தெய்வங்களுக்கு ஹைட் ஆபீஸ் மாதிரி. அங்கிருந்து பிடி மண் எடுத்து பிற்காலத்தில் ஒவ்வொரு ஊரிலும் தங்கள் வசதிக்கு ஏற்ப சிறுதெய்வ வழிபாடு கோயில் கட்டிக்கொண்டனர்.

சரி, மேட்டருக்கு வருவாம். 9ம் நாள் காலையில் நல்ல நேரம் பார்த்து நெல்லையப்பர், காந்திமதிமதி அம்மன் மற்ற தெய்வ ஐம்பொன் சிலைகளை தேரில் வைப்பார்கள். முதலில், பிள்ளையார், முருகன் தேர் புறப்படும். முன்னதாக தேர் திருவிழா பார்க்க வரும் பக்த கோடிகளை வருக..வருக என வரவேற்கிறோம் என்று தினமலர் போஸ்டர் ஊர் முழுக்க ஒட்டப்பட்டு இருக்கும். காலையில் மாவட்ட கலெக்டர், உள்ளூர் மந்திரி, விஐபிகள் வடம் பிடிக்க தேர் நிலையை விட்டு புறப்பட ஆரம்பிக்கும். நிலை என்பது தேர் நிறுத்தும் இடம். தேரை இழுக்கிற நேரம் வரும் “”இப்போது தேருக்கு தடி போட போகிறார்கள். வடத்தை நன்று துõக்கி பிடித்துக்கொள்ளுங்கள். அம்மையப்பன் தேர் வடம் பிடித்து இழுத்தால் நோயின்றி வாழலாம்’ என்று தெய்வீக குரலுடன் ஒருவர் தேரில் பொருத்தப்பட்ட ஸ்பீக்கரில் சொல்வார்..”அடி…அடி’ என்பார். முரசு சத்தம் கேட்கும். உடனே ஆரவாரத்துடன் மக்கள் தேர் இழுப்பார்கள். தேர் நகரும். தேர் ஆடி அசைந்து வரும் அழகை கண்கோடி வேண்டும்.

நான்கு வடம் உண்டு. அதில் ஒரு வடம் பெண்களுக்கு கொடுப்பார்கள். அப்புறம், நேரம் செல்ல, செல்ல நான்கு வடமும் ஆண்கள் கைவசம் வந்துவிடும். தேர் இழுப்பது என்பது அலாதியான அனுபவம். அப்போது உற்சாகம் பீறிட்டுகொண்டு வரும். நாம் இழுக்க தேர் நகரும்போது…. அதை சொல்ல வார்த்தைகள் கிடையாது. ஒருவழியாக மாலைக்குள் தேர் நிலைக்கு சென்றுவிடும். அப்புறம் காந்திமதி அம்மன் தேரை இழுப்பார்கள். நான்கு ரத வீதிகளிலும் லட்சக்கணக்கான மக்கள் இருப்பார்கள்.

அந்த காலத்தில் ஒரு வாரம் கூட தேர் நிலைக்கு வராதாம். இப்போது ஒரே நாளில் தேர் நிலைக்கு வந்துவிடுகிறது. திருவாரூர், ஸ்ரீவில்லிப்புத்துõர் தேருக்குபின் தமிழகத்தில் மிகப்பெரிய தேர் நெல்லையப்பர் தேர். 500 ஆண்டுகளுக்கு மேலாக இழுக்கப்பட்டு வருகிறது. தேரை இழுக்க இயந்திரங்கள் மத்த ஊர் போல நெல்லையில் பயன்படுத்தப்படுவது இல்லை. என்னை பொறுத்தவரையில் பிறந்ததில் இருந்து இருபத்தி மூன்று ஆண்டுகள்…அதாவது நெல்லையில் இருந்தவரை தேர்திருவிழாவை மிஸ் பண்ணியது இல்லை. சென்னை வந்தபின் சில சமயம் போய் வந்திருக்கிறேன். கடைசியாக என் மகள் பிறந்தபின் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்றேன். இதுதான் தேர் பாரும்மா என்று வாகையடி முனையில் இருந்து காண்பித்தேன்.

ஹும்..இன்னைக்கு நெல்லையப்பர் தேர்த்திருவிழா….

Meenakshi Sundaram
·

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்