குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் ஜெகதீப் தங்கர்! – யாரிவர்?
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. குடியரசு தலைவர் தேர்தலை தற்போது உள்ள குடியரசு தலைவரின் பதவி காலம் முடியும் முன்னரே நடத்தி முடிக்க வேண்டும். இதையடுத்து நாட்டின் 15 வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை களம் காண்கிறார்.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளரை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். மேற்கு வங்க ஆளுநராக உள்ள ஜெகதீப் தங்கரை குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த ஜெகதீப் தங்கர்?
ஜெகதீப் தங்கர் 1951ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான கிதானாவில் பிறந்தார். அவர் தனது பள்ளிக் கல்வியை சித்தோர்கரில் உள்ள சைனிக் பள்ளியில் முடித்தார். பின்னர் ஜெய்ப்பூர் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுஹுனு தொகுதியிலிருத்து 1989ம் ஆண்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கர்ஹ் தொகுதியில் இரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். முன்னதாக ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். இவர் கடந்த 2019 ஜூலை 30ல் மேற்கு வங்க ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.