தேசிய தபால் வாரம்: இந்தியாவின் தபால் துறையின் வரலாறு, வளர்ச்சி மற்றும் நவீன சவால்கள்!

தேசிய தபால் வாரம்: இந்தியாவின் தபால் துறையின் வரலாறு, வளர்ச்சி மற்றும் நவீன சவால்கள்!

வ்வோர் ஆண்டும் அக்டோபர் 10 முதல் 15 ஆம் தேதி வரை இந்தியாவில் தேசிய தபால் வாரம் (National Postal Week) கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தின் முக்கிய நோக்கம், அஞ்சல் அமைப்பின் ஒருங்கிணைந்த சேவையைக் கௌரவிப்பதுடன், இந்திய அஞ்சல் துறையின் நோக்கத்தையும், குறிக்கோளையும் மக்களிடையே பிரபலப்படுத்தி, பொதுமக்களுக்கான தபால் சேவைகளை மேம்படுத்துவதாகும். குறிப்பாக, மக்களை இணைப்பதிலும், வணிகங்களை ஆதரிப்பதிலும், நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்பதிலும் அஞ்சல் சேவைகளின் முக்கியத்துவத்தை இந்த வாரம் எடுத்துக் காட்டுகிறது. அக்டோபர் 10 ஆம் தேதி தேசிய அஞ்சல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவின் அஞ்சல் துறையின் வரலாறு (1774 முதல் 1947 வரை)

இந்திய அஞ்சல் துறையானது உலகின் மிகப்பெரிய அஞ்சல் வலையமைப்பைக் கொண்டுள்ளது. இதன் வரலாறு சுமார் 250 ஆண்டுகளுக்கு மேலானது.

1. ஆரம்ப காலத் தொடக்கம்

  • இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1764-1766 காலகட்டத்தில் பம்பாய், சென்னை மற்றும் கல்கத்தா நகரங்களில் அஞ்சல் சேவை முதன்முதலாகத் துவங்கப்பட்டது.
  • 1774 ஆம் ஆண்டு, அப்போதைய வங்காள ஆளுநராக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren Hastings) முதல் தபால் நிலையத்தைத் திறந்து வைத்ததோடு, அஞ்சல் சேவையை பொது மக்களுக்காகவும் செயல்படத் துவங்கினார்.
  • முறையாகக் கட்டமைக்கப்பட்ட நவீன தபால் சேவையானது 1854 ஆம் ஆண்டில் டல்ஹெளசி பிரபுவால் (Lord Dalhousie) அறிமுகப்படுத்தப்பட்டது.

2. அஞ்சல் தலைகளின் வருகை மற்றும் முக்கியச் சீர்திருத்தங்கள்

  • ஜூலை 1, 1852 அன்று சிந்து மாவட்டத்தில் முதன்முதலில் வட்டவடிவில் அஞ்சல் தலைகள் (Sindh Dawk) அறிமுகப்படுத்தப்பட்டன.
  • 1854 ஆம் ஆண்டில், பேரரசி விக்டோரியாவின் உருவம் பொறிக்கப்பட்ட தபால்தலைகள் கல்கத்தாவில் அச்சிடப்பட்டு EAST INDIA POSTAGE என்ற பெயருடன் இந்தியா முழுவதும் பயன்பாட்டிற்கு வந்தன.
  • 1859 ஆம் ஆண்டு கல்கத்தாவிலிருந்து போர்ட் பிளேர் வரை கப்பல் அஞ்சல் சேவை தொடங்கப்பட்டது.
  • பிப்ரவரி 18, 1911 அன்று உலகின் முதல் ஏர்மெயில் விமானம் அலகாபாத்தில் இருந்து நைனிக்குச் சென்றது.

சுதந்திரத்திற்குப் பிந்தைய வளர்ச்சி மற்றும் அமைப்பு

சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அஞ்சல் துறை மகத்தான வளர்ச்சியை அடைந்தது. இது தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டது.

1. அஞ்சல் குறியீட்டு எண் (PIN Code)

  • அஞ்சல்கள் வேகமாகவும், குழப்பமின்றிப் பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்பவும் வசதியாக, 1972 ஆம் ஆண்டில் 6 இலக்க அஞ்சல் குறியீட்டு எண் (PIN – Postal Index Number) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்த 6 இலக்கங்களில், முதல் இலக்கம் அதன் மண்டலத்தையும், கடைசி மூன்று இலக்கங்கள் அஞ்சல் நிலையத்தையும் குறிக்கும்.

2. உலகளாவிய பரவலும் நவீனமயமாக்கலும்

  • இந்திய அஞ்சல் துறை உலகிலேயே அதிக அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட முதல் நாடாக உள்ளது. தற்போது நாடு முழுவதும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான அஞ்சலகங்கள் செயல்படுகின்றன.
  • இதில் சுமார் 89% அஞ்சலகங்கள் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன. கிராமத்து மக்களை ஒன்றுசேர்க்கும் மிகப்பெரிய நிறுவனமாக இது செயல்படுகிறது.
  • இந்தியா முழுவதும் மொத்தம் 23 அஞ்சல் வட்டங்களாகப் (Circles) பிரிக்கப்பட்டுள்ளதுடன், இந்திய இராணுவத்தின் அஞ்சல் சேவைக்காக ஒரு சிறப்பு அஞ்சல் வட்டமும் செயல்படுகிறது.

அஞ்சல் துறையின் தற்போதைய நிலை மற்றும் சேவைகள்

டிஜிட்டல் யுகத்தில் பல சவால்களை எதிர்கொண்டாலும், இந்திய அஞ்சல் துறை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தன்னைத் தகவமைத்துக்கொண்டுள்ளது.

1. முக்கிய அஞ்சல் சேவைகள்

  • விரைவு அஞ்சல் சேவை (Speed Post): உள்நாடு மற்றும் உலக அளவில் 99 நாடுகளில் விரைவு அஞ்சல் சேவை மூலம் பார்சல்களை அனுப்பலாம். பாதுகாப்பாகச் சென்று சேர வேண்டிய அஞ்சல்களை அனுப்ப இதுவே தற்போது முதன்மை முறையாக உள்ளது.
  • பதிவு அஞ்சல் நீக்கம்: செப்டம்பர் 1, 2025 முதல், சுமார் 150 ஆண்டுக்காலப் பாரம்பரியம் மிக்க பதிவு அஞ்சல் (Registered Post) சேவை, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது.
  • லாஜிஸ்டிக் சேவை: 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தச் சேவை மூலம் வீட்டு உபயோகப் பொருட்களைக்கூட அனுப்ப முடியும்.
  • கப்பல் மற்றும் மின்னணுப் பணவிடை (Money Order): உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பணப் பரிமாற்ற வசதிகளை வழங்குகிறது.

2. நிதிச் சேவைகளும் டிஜிட்டல் வளர்ச்சியும்

  • வங்கிச் சேவை: வங்கிக் கிளைகள் இல்லாத கிராமங்களிலும் அஞ்சலகக் கிளைகள் உள்ளன. இதன் மூலம் சேமிப்புக் கணக்குகள், காப்பீடு மற்றும் நேரடிப் பணப் பரிமாற்றப் பயன்கள் (DBT) போன்ற அடிப்படை வங்கிச் சேவைகளையும் அஞ்சல் துறை வழங்கி கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது.
  • டிஜிட்டல் மாற்றம்: இந்திய அஞ்சல் துறை ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை நோக்கிப் பயணிக்கிறது. இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் ஐடி 2.0 (IT 2.0) மேம்பட்ட அஞ்சல் தொழில்நுட்பத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இ-காமர்ஸ் (மின் வணிகம்): அஞ்சல் நிலையங்கள் இப்போது இ-காமர்ஸ் விநியோகச் சேவைகளை வழங்கி, வணிகர்கள் தங்கள் தயாரிப்புகளை உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப உதவுகின்றன.

தனுஜா

Related Posts