தேசிய ஊட்டச்சத்து வாரம்!
‘உங்கள் உணவில் ஊட்டச்சத்து இருக்கா?’என்ற கேள்வி? இந்தக் கேள்வியை கட்டாயம் கேட்டுக்கொள்ள வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் பெருமளவு மாறிப்போய் விட்டது. நா ருசிக்காக விதவிதமான உணவுகளைத் தேடித்தேடி சாப்பிடும் கலாச்சாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. தெருவுக்கு தெரு ஏராளமான உணவு விடுதிகள் அதிகரித்துள்ளன. சரி, இப்படி ரசித்து ருசித்துச் சாப்பிடும் உணவு நமது உடல் நலத்துக்கு ஏற்றதா? உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் உள்ளதா? இந்தக் கேள்வியின் அவசியமும் முக்கியத்துவமும் நமக்குத் தெரிந்தாலும், பெரும்பாலும் இந்த ஒரு கேள்வியை நம்மில் பலர் கேட்பதுமில்லை, கேட்க விரும்புவதுமில்லை. ஆரோக்கியமான உடல்நலனுக்கு ஊட்டச்சத்து மிக அவசியம். இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1982 முதல் மத்திய அரசு சார்பில் தேசிய ஊட்டச்சத்து வாரம் (செப். 1 – 7) கடை பிடிக்கப்படுகிறது. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது போல நலமுடன் இருப்பதற்கு இயற்கை, சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். உணவில் பழங்கள், காய்கறி, புரதம், இறைச்சி என அனைத்து வித சத்துகளும் சமச்சீரான அளவில் இடம் பெறவேண்டும். பாரம்பரிய இயற்கை உணவில் கவனம் செலுத்துவது நல்லது.

இது தொடர்பான ஆய்வு ஒன்றில் வெளிப்பட்ட தகவல் அதிர்ச்சியளிக்கிறது. நம் நாட்டில் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வறுமை மட்டும் காரணமல்ல. எது சரியான, ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்பதே பலருக்கும் தெரியாத அறியாமையே முக்கியக் காரணம். அடிப்படையில் உடல் இயக்கத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தி, மூளை செயல்பாடு மற்றும் உடல் எதிர்ப்பு சக்திக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. போதுமான இரும்புச்சத்து கிடைக்காமல் போகும்போது ரத்த சோகை ஏற்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளும் இரும்புச்சத்து பற்றாக்குறையினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ரத்த சோகையால் குழந்தைப்பேறு காலத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடுடைய தாயின் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளின் எடை குறைகிறது. இந்தக் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. எனவே ஊட்டச்சத்து நிறைந்த சமச்சீர் மற்றும் சத்தான உணவு நமது ஆரோக்கியத்திற்கு நீண்ட கால நன்மைகளைக் கொடுக்கும்.இது உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு, இதயக் கோளாறுகள், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து தங்களை பாதுகாக்கிறது. எனவே, ஒவ்வொரு வயதினரும், ஒவ்வொரு விதமான டயட் முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.
அந்த வகையில் –குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து
தாய்ப்பால், பால், விட்டமின் கே நிறைந்த உணவு (காய்கறிகள், கீரைகள்), பழங்கள், இறைச்சி, மீன், முட்டை, தானியங்கள் உள்ளிட்டவை அடங்கிய உணவே பலதரப்பட்ட சத்துகளைக் கொண்ட உணவு என அழைக்கப்படுகிறது. பிறந்து 6 மாதம் முதல் 23 மாதங்கள் வரையுள்ள குழந்தைகளுக்கு மேற்கூறிய உணவை அளிக்க வேண்டும் என மருத்துவர்களும் பரிந்துரைக் கின்றனர். குறிப்பாக வைட்டமின் சி, வைட்டமின் டி, இரும்புச் சத்து போன்ற உணவுகள் சேர்ப்பதன் மூலம் உணவின் தோற்றத்தை அழகுபடுத்தி அதன் மூலம் அவர்கள் நலமுடன் வாழ வழிவகுக்கும்.
பதின் பருவத்தினருக்கான ஊட்டச்சத்து
பதின்ம வயதிலிருந்து டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளில் 40% பேர் ஊட்டச்சத்து குறைபாட்டை கொண்டிருக்கலாம் என்கிறது ஆராய்ச்சி ஒன்று. குறிப்பாக 14-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி அதிகமாக உள்ளது. இதனால் பதின்ம வயதில் பாதிக்கும் ஊட்டச்சத்து குறைபாடு டீன் ஏஜ் வயதில் மேலும் தீவிரமடையலாம்.
எனவே இந்த டீனேஜ் பருவத்தில் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் எப்போதும் ஒரு கண் இருக்க வேண்டும் என்பார்கள். ஏனெனில் வளரும் குழந்தைகளுக்கு வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் , அந்த வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க வேண்டியதும் அவசியம். எனவே, இந்த வயதில் இளம் பருவத்தினரின் உணவில் ஊட்டச்சத்துக்கள், புரதங்கள், இரும்புச்சத்து தானியங்கள், பழங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
20-முதல் 50 வயது வரை ஊட்டச்சத்து
இந்த வயதில் இருக்கும் போது தான் நமக்கு, ஆரோக்கியமான உணவுத் தேவைகளைப் புறக்கணிக்கவும், ருசியான ஆரோக்கியமற்ற அல்லது துரித உணவுகளில் ஈடுபடவும் வழிவகுக்கிறது. எனவே, இந்த வயதில் ஒருவர் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்..இந்த வயதினர் உணவில் பைட்டோநியூட்ரியன்கள, புரதங்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகளை சேர்ப்பது மிகவும் அவசியம். ஏனெனில், இவை உடலின் செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புகளை மேம்படுத்த உதவுகிறது.
முதுமை காலம்
முதுமை காலத்தில் ஒருவர் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்..ஏனெனில், முதுமையில், ஒருவர் முறையற்ற உணவுப்பழக்கம் இருந்தால் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் வந்து சேரும். இந்த வயதில் சத்தான, சரியான உணவை சாப்பிடுவது மிகவும் அவசியமாகும். எனவே , இந்த நேரத்தில் மெல்லுவதில் சிரமம் இருக்கும். ஆகையால், வழக்கமான உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்து கிடைக்காமல் போகலாம். எனினும், திரவ உணவுகள் எடுத்து கொள்வதன் மூலம் இதை ஈடுசெய்ய முடியும்.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்


