32°C
விளம்பரம்
Advertisement

சராசரியாக தினமும் 360 கி.மீ. தொலைவுக்கு சாலை பணிகள்!

admin சேலம் Published: January 7, 2018 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




நமது நாட்டு சாலைகளை இரண்டு விதமாக பிரிக்கிறார்கள். அவை, சரளை மெருகிட்ட சாலைகள், சரளை மெருகிடா சாலைகள் ஆகியனவாகும். சரளை மெருகிட்ட சாலைகள் என்பது தரமான சாலைகள் என்று அழைக்கப்படுகின்றன. ஜல்லிக்கற்கள், சிமெண்ட், தார் முதலியவை கொண்டு இந்த சாலைகள் அமைக்கப்படுகின்றன. எல்லாவகை சீதோஷ்ண காலத்திலும் இவை பயன்படக்கூடியவை. சரளை மெருகிடா சாலைகள் என்பவை பெரும்பாலும் மண்சாலைகள். கிராமப்புறங்களில் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் இவை பயன்படாது. பிரதமரின் ‘கிராமின் சடக்’ என்ற திட்டம் பல மண் சாலைகளை சரளை மெருகிட்ட சாலைகளாக மாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. தற்போது தங்க நாற்கர திட்டம் என்ற திட்டத்தின்கீழ் காஷ்மீரின் ஸ்ரீநகரிலிருந்து கன்னியாகுமரி வரையிலும், கட்சிலிருந்து காச்சார் வரை ஆறுமுதல் எட்டு வரிசை சாலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அமைத்தல், பராமரிப்பு இவற்றின் அடிப்படையில் நம் நாட்டின் சாலைகளை நான்கு வகைகளாக பிரிக்கலாம். அவை, தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகள், கிராமப்புற சாலைகள். தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய அரசு பொறுப்பில் இருக்கின்றன. இந்தியாவில் 50 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றின் மொத்த நீளம் 52,010 கிலோ மீட்டர். இவை மாநில தலைநகரங்களையும், முக்கிய நகரங்களின் துறைமுகங்களையும் இணைக்கின்றன.

மாநில நெடுஞ்சாலைகளை போடுவதும் அவற்றை பராமரிப்பதும் மாநில அரசுகளின் பொறுப்பாகும். இவை மாவட்ட தலைநகரங்களையும் மற்ற முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி இந்த சாலைகளை வைத்தே உள்ளன. நமது நாட்டில் 11 லட்சம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன.

மாவட்ட சாலைகள், மாவட்ட பஞ்சாயத்து பொறுப்பில் உள்ளன. இவை மாவட்டங்களின் அனைத்து தாலுகாக்களையும், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளையும் இணைக்கின்றன. கிராமப்புற சாலைகள், கிராம பஞ்சாயத்துகளின் பொறுப்பாகும். இந்த சாலைகள் பிற முக்கிய சாலைகளை இணைக்கின்றன.

இந்த நான்குவகை சாலைகள் போக ஐந்தாவதாக எல்லைச்சாலைகள் உள்ளன. இவை எல்லைச்சாலை முன்னேற்ற ஆணையம் பொறுப்பில் உள்ளன. இந்த ஆணையம்தான் உலகத்திலேயே மிக உயரமான சாலையை இமாச்சல பிரதேசத்திலுள்ள மணாலியிலிருந்து காஷ்மீரிலுள்ள லே வரை அமைத்துள்ளது.

இதனிடையே நம் நாட்டின் சாலை வசதிகளை மேம்படுத்த மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து  எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக கிராமங்கள், நகர்ப்புறங்களில் சாலைகள் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு  உள்ளது.  அந்தவகையில், கடந்த 2015 மார்ச் முதல் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், நாடு முழுவதும் 1.31 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது சராசரியாக தினமும் 360 கி.மீ. தொலைவுக்கு சாலை பணிகள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சாலைகளின் நீளம் 56.03 லட்சம் கிமீ தொலைவில் இருந்து 54.72 லட்சம் கிமீ ஆக அதிகரித்துள்ளது. 2013-14 காலகட்டத்தில் நாள் ஒன்றுக்கு 170 கி.மீ. தூர சாலைகளும், 2014-15 காலகட்டத்தில் நாள் ஒன்றுக்கு 190 கி.மீ. தூர சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருவழி, நான்கு வழி சாலைகள் அமைக்கும் பணியும் கடந்த காலங்களை காட்டிலும் கணிசமாக உயர்ந்துள்ளது. 2015-16 காலகட்டத்தில் சாலைப் பணிகளுக்காக ரூ.98,900 கோடி செலவிடப்பட்டு  உள்ளது. வரும் காலங்களில் கிராமப்புறங்களில் சாலைகள் அமைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்