தேசிய விவசாயிகள் தினம்: சரண் சிங் நினைவும்… மறக்கக்கூடாத நிதர்சனமும்!

தேசிய விவசாயிகள் தினம்: சரண் சிங் நினைவும்… மறக்கக்கூடாத நிதர்சனமும்!

ந்தியாவின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளைச் சிறப்பிக்கும் வகையில், இன்று (டிசம்பர் 23) தேசிய விவசாயிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர்  சரண் சிங்கின் பிறந்தநாளான இன்று, விவசாயிகளின் பங்களிப்பை நினைவு கூரும் அதே வேளையில், அவர்கள் சந்திக்கும் துயரங்களை உரக்கச் சொல்ல வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.

யார் இந்த சவுத்ரி சரண் சிங்?

இந்தியாவை 10-க்கும் மேற்பட்ட பிரதமர்கள் ஆண்டிருந்தாலும், சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளை விவசாயிகள் தினமாகக் கொண்டாடுவதற்கு வலுவான காரணங்கள் உண்டு. உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில், நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், இறுதிவரை எளிய விவசாயத்தை நேசிப்பவராகவே வாழ்ந்தார்.

1979-ல் இந்தியாவின் 5-வது பிரதமராகப் பதவியேற்ற அவர், வெறும் 7 மாதங்களே ஆட்சியில் இருந்தாலும் விவசாயிகளுக்காகச் செய்த முன்னெடுப்புகள் மகத்தானவை. நிலச்சுவான்தார்கள் மற்றும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களின் பிடியிலிருந்து விவசாயிகளை மீட்க ‘ஜமீன்தாரி ஒழிப்பு முறை சட்டத்தை’ தீவிரமாக ஆதரித்தார். விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக ‘வேளாண் விளைபொருள் சந்தை மசோதா’வை அறிமுகப்படுத்தினார். “உழுபவர்களுக்கே நிலம் சொந்தம்” என்பதைப் பல மேடைகளில் முழங்கினார்.

அவரது சேவையை போற்றும் வகையிலேயே புது டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் ‘கிசான் காட்’ (விவசாயிகளின் நுழைவாயில்) என்று அழைக்கப்படுகிறது. 2001 முதல் வட இந்திய விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, டிசம்பர் 23 தேசிய விவசாயிகள் தினமாக அங்கீகரிக்கப்பட்டது.

சாதனைக்குப் பின்னால் இருக்கும் வலி

பசுமைப் புரட்சியின் பக்க விளைவுகளால் மண் வளம் பாதிக்கப்பட்டிருந்தாலும், விவசாயிகளின் இடைவிடாத உழைப்பால் நாடு ஆண்டுக்கு 265 மில்லியன் டன் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இன்றும் இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் விவசாயம் சார்ந்த தொழில்களிலேயே ஈடுபட்டு வருகின்றனர். நெல், கோதுமை உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற்றிருந்தாலும், விவசாயிகளின் வாழ்வில் தன்னிறைவு உள்ளதா என்பது கேள்விக்குறியே.

ஒரு நாள் போதுமா?

வருடத்தின் ஒவ்வொரு நாளும் வெயிலிலும், மழையிலும் சேற்றில் கால் வைத்துப் பாடுபடும் விவசாயிகளை, சம்பிரதாயத்திற்காக ஏதாவது ஒருநாள் மட்டும் நினைத்துவிட்டு கடந்து செல்வது முறையாகாது. நாம் சாப்பிடும் ஒவ்வொரு வேளை உணவின்போதும், அந்தப் பருக்கைக்குப் பின்னால் இருக்கும் விவசாயியின் வியர்வையை நினைக்க வேண்டும்.

அதிர்ச்சியளிக்கும் நிதர்சனம்

விவசாயம் ஆட்சியாளர்களுக்கு இன்னும் முதன்மைத் துறையாக மாறவில்லை என்பதையே புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தியாவில் சராசரியாக அரை மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக வரும் தரவுகள் நெஞ்சை உலுக்குகின்றன. கடன் தொல்லை, பருவநிலை மாற்றம், விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காதது என அவர்கள் படும் துயரம் சொல்லி மாளாதது.

எது உண்மையான விவசாயிகள் தினம்?

விவசாயிகளின் கஷ்டங்களை ஒவ்வொரு நாளும் உணர்ந்து, விவசாய சமூகங்களுக்கு நம்மால் இயன்ற ஆதரவை அளிப்பதே அவர்களுக்குச் செய்யும் உண்மையான மரியாதையாகும்.

எப்போது இந்தத் தற்கொலைகள் போன்ற துயரங்கள் எல்லாம் மறைகிறதோ, எப்போது ஒரு விவசாயி தன் விளைபொருளுக்கு நியாயமான விலை பெற்று, கடனின்றி, நிம்மதியாகத் தன் தொழிலைச் செய்கிறானோ… அன்றுதான் உண்மையான விவசாயிகள் தினம்! அதுவரை இந்த நாள், நமக்கு உணவளிப்பவர்களைக் காக்க வேண்டிய கடமையை நினைவூட்டும் நாளாகவே இருக்கட்டும்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!