செய்தியைக் கேட்க / Listen to News
சுதந்திர இந்தியாவின் விடிவெள்ளியாகவும், அகிம்சை நெறியின் உலகளாவிய குறியீடாகவும் விளங்கிய மகாத்மா காந்தியின் கையெழுத்துப் பிரதிகளும், அவர் பயன்படுத்திய அரிய பொருட்களும் அண்மையில் சர்வதேச ஏலத்தில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையான செய்தி இந்திய அளவில் பெரும் விவாதத்தையும் வேதனையையும் கிளப்பியுள்ளது. காந்தியடிகளின் சிந்தனைகளும், அவரது கரங்களால் எழுதப்பட்ட வார்த்தைகளும் ஒரு சிலரின் தனிப்பட்ட வர்த்தகப் பொருளாக மாறலாமா என்ற கேள்வி இப்போது வலுவாக உருவெடுத்துள்ளது.
வரலாறு காணாத ஏலமும் வரலாற்றுப் பொக்கிஷங்களும்
சமீபத்தில் ‘சாஃப்ரான்ஆர்ட்’ (Saffronart) என்ற பிரபல ஏல நிறுவனம் மூலம் காந்தியடிகளின் 86 அரிய பொருட்கள் மற்றும் கடிதங்கள் ஏலம் விடப்பட்டன. அதில், தனது நெருங்கிய சுதந்திரப் போராட்டத் தோழரான ஆனந்த் டி. ஹிங்கோரானி என்பவருக்கு காந்தியடிகள் சுமார் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து எழுதி வழங்கிய “தினமொரு சிந்தனை” (A Thought for the Day) என்ற 688 அரிய கருத்துக்கள் அடங்கிய கையெழுத்துப் பிரதி தொகுப்பு, யாரும் எதிர்பார்க்காத வகையில் ரூ. 16.20 கோடிக்கு ஏலம் போயுள்ளது.
இந்திய வரலாற்று ஆவணம் ஒன்று சர்வதேச ஏலச் சந்தையில் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையானது இதுவே முதல்முறையாகும். இதுமட்டுமன்றி, காந்தியடிகள் ஆன்மீகப் பயிற்சியாக சுற்றிய ‘பெட்டி ராட்டின’ (Peti Charkha) ரூ. 1.02 கோடிக்கும், பகவத் கீதை மற்றும் கடவுள் குறித்த அவரது பார்வைகளை விவரிக்கும் ‘மெசேஜ் ஆன் காட்’ என்ற கையெழுத்துப் பிரதி ரூ. 1.68 கோடிக்கும், பொருளாதார சுதந்திரம் குறித்து அவர் எழுதிய தபால்கார்டுகள் ரூ. 57.60 லட்சத்திற்கும் ஏலம் போயுள்ளன.

தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் வேதனையும் வேண்டுகோளும்
இந்த ஏலச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, டெல்லியில் இயங்கி வரும் தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநர் ஏ. அண்ணாமலை மிகக் கனமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில், காந்தியடிகளின் வரிகளும் அவர் பயன்படுத்திய பொருட்களும் ஏலப் பொருளாக மாற்றப்பட்டு கோடிகளுக்கு விற்பனையாவது மிகவும் வருத்தத்திற்குரியதும் வேதனையானதுமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
காந்தியடிகள் எழுதிய பல கடிதங்கள் ஏற்கெனவே நூல்களாக அச்சிடப்பட்டு வெளியாகிவிட்ட போதிலும், அவர் சொந்தக் கரங்களால் எழுதிய மூலக் கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாப்பது நமது தேசிய வரலாற்றுப் பொறுப்பாகும். காந்தியுடன் நேரடியாகப் பயணித்தவர்களின் வாரிசுகளான மூன்றாம் அல்லது நான்காம் தலைமுறையினரிடம் தான் தற்போது இந்த அரிய பொருட்கள் இருக்கின்றன. அவசியமான வரலாற்றுப் புரிதல் இன்மையாலும், அவற்றை எவ்வாறு முறையாகப் பாதுகாப்பது என்று தெரியாமலும் தான் பலர் இத்தகைய சர்வதேச ஏல அமைப்புகளிடம் ஒப்படைக்கிறார்கள்.
தனிப்பொருள் அல்ல; பொதுப் பாரம்பரியம்!
காந்தியடிகளின் கடிதங்களோ, கையெழுத்துப் பிரதிகளோ அல்லது அவர் பயன்படுத்திய எளிமையான பொருட்களோ தனிநபரின் சொத்துக்கள் அல்ல. அவை இந்தியாவின் பகிரப்பட்ட கூட்டு வரலாற்றுப் பாரம்பரியத்தின் அங்கங்கள். தேசத் தந்தையின் சிந்தனைகள் உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்களுக்கும், நாளைய தலைமுறையினருக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டும்.
தனி நபர் ஒருவரின் வீட்டின் வரவேற்பறைக்குள்ளோ அல்லது ரகசியப் பெட்டகங்களுக்குள்ளோ அடைபட்டுப் போவதற்கு காந்தியின் தத்துவங்கள் சரக்குகள் அல்ல. சத்தியம், அகிம்சை, பிரம்மச்சரியம், தீண்டாமை ஒழிப்பு, சுயராஜ்யம் மற்றும் கடமை உணர்வு பற்றி அவர் எழுதிய வரிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் பொதுவெளியில் காட்சிப்படுத்தப்பட வேண்டியவை.
வரலாற்றைப் பாதுகாக்கத் தேவைப்படும் அரசின் முனைப்பு
நல்வாய்ப்பாக, இம்முறை இந்த அரிய ஆவணங்களை ஏலத்தில் எடுத்தவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால், அந்த வரிகள் நாட்டிற்குள்ளேயே தங்கும் என்ற நிம்மதி உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு முறையும் இத்தகைய தேசிய சொத்துக்கள் தனியார் ஏலக் கூடங்களுக்குச் செல்வதை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. காந்தியடிகள் மற்றும் நாட்டின் பிற விடுதலைப் போராட்டத் தலைவர்களின் ஆவணங்களைக் கண்டறிந்து, அவற்றை அருங்காட்சியகங்களில் முறையான அறிவியல் நுட்பங்களுடன் பாதுகாக்கும் சட்டப்பூர்வ ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
மகாத்மா காந்தியின் நினைவுகளையும் கடிதங்களையும் கையில் வைத்திருப்பவர்கள், அவற்றை பணத்திற்காக விற்பனை செய்யாமல், டெல்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்க முன்வர வேண்டும். நமது நாட்டின் விலைமதிப்பற்ற வரலாற்றுப் பக்கங்கள் சந்தைப் பொருளாக மாறுவதைத் தடுப்பதே நாம் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்குச் செய்யும் உண்மையான மரியாதையாகும்.
சிவராமகிருஷ்ணன்
