தேசிய நுகர்வோர் தினமின்று:விழிப்புணர்வே நுகர்வோரின் கவசம்!
“நீரின்றி அமையாது உலகு” என்பது போல, நுகர்வின்றி எந்த மனித வாழ்வும் அமையாது. காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் நுகர்வோராகவே இருக்கிறோம். இந்த நுகர்வோரின் நலனைப் பேணவும், வணிகச் சுரண்டல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 24-ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

வரலாற்றுப் பின்னணி: போராட்டமும் அங்கீகாரமும்
நுகர்வோர் பாதுகாப்பு என்பது இன்று நேற்றல்ல, 1800-களிலேயே அமெரிக்காவில் இதற்கான விழிப்புணர்வுத் தீப்பொறி உருவானது.
-
1899: அமெரிக்காவில் தேசிய நுகர்வோர் இயக்கம் உருவானது.
-
1936: டாக்டர் கால்ரூடன் வார்டன் நுகர்வோர் ஒருங்கமைப்பை நிறுவினார்.
-
நவீன நுகர்வியலின் தந்தை: ரால்ப் நடார் என்பவர் நவீன நுகர்வோர் இயக்கத்தைத் தொடங்கி, இதனை உலகளாவிய நிலைக்குக் கொண்டு சென்றார்.
-
ஐக்கிய நாடுகள் சபை: 1985 ஏப்ரல் 9 அன்று ஐநா சபை நுகர்வோர் பாதுகாப்பிற்கான 8 உரிமைகளை அங்கீகரித்து, உறுப்பு நாடுகளுக்கு வழிகாட்டு நெறிகளை வழங்கியது.
இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
ஐநா சபையின் வழிகாட்டுதலின்படி, இந்தியாவில் 1986 டிசம்பர் 24 அன்று நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இது நுகர்வோருக்கான ஒரு ‘மகா சாசனம்’ (Magna Carta) என கருதப்படுகிறது.
மூன்றடுக்கு குறைதீர்ப்பு அமைப்பு
நுகர்வோர் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நீதி பெற இந்தியாவில் சிறப்பான மூன்றடுக்கு கட்டமைப்பு செயல்படுகிறது:
-
மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம்: மாவட்ட நீதிபதி தலைமையில் இயங்குகிறது.
-
மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம்: ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் செயல்படுகிறது.
-
தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம்: ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் டெல்லியில் செயல்படுகிறது.
நவீன மாற்றங்களும் நுகர்வோர் உரிமைகளும் (2015-2016)
தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆன்லைன் வர்த்தகம் பெருகியுள்ள நிலையில், சட்டத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இ-ஃபைலிங் (E-filing) மூலம் ஆன்லைனில் வழக்கு பதிவு செய்தல், வழக்குகளை விரைந்து முடித்தல், இழப்பீடு வரம்பை உயர்த்துதல் போன்ற பல சிறப்பம்சங்கள் நுகர்வோருக்குச் சாதகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
சட்டம் வழங்கும் 6 முக்கிய உரிமைகள்:
-
பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை.
-
அபாயகரமான பொருட்களிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை.
-
பொருளின் தரம் மற்றும் விலை பற்றித் தெரிந்துகொள்ளும் உரிமை.
-
முடிவெடுக்கும் நடைமுறைகளில் கேட்கப்படும் உரிமை.
-
உரிமை மீறப்படும்போது தீர்வு பெறும் உரிமை.
-
நுகர்வோர் கல்வி பெறும் உரிமை.
மத்திய அரசின் நுகர்வோர் உதவி மையம்
நுகர்வோர் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண மத்திய அரசு தேசிய நுகர்வோர் உதவி மையத்தை (National Consumer Helpline) ஏற்படுத்தியுள்ளது. இது 325-க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்களுடன் இணைந்து, நுகர்வோரின் புகார்களுக்கு விரைவான தீர்வுகளைப் பெற்றுத் தருகிறது.
மொத்தத்தில் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சில வணிகர்களின் ஏமாற்று வேலைகளிலிருந்து தப்பிக்க ‘விழிப்புணர்வு’ ஒன்றே சிறந்த வழி. இந்நாளில் பள்ளி, கல்லூரி மற்றும் நுகர்வோர் மன்றங்கள் வழியாக நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, நமது உரிமைகளை அறிந்துகொள்வோம். தரமான பொருட்களைக் கேட்டுப் பெறுவது நமது உரிமை மட்டுமல்ல, கடமையும்கூட!
நிலவளம் ரெங்கராஜன்


