நந்தன் விமர்சனம்!

நந்தன் விமர்சனம்!

“ஏனுங்க இப்போல்லாம் சாதி யாருங்கபாக்குறாங்க” என்று சில கும்பல் எப்பொழுதும் பேசிக் கொண்டு இருக்கிறது. அதே சமயம் ஒருபுறம் சாதி ஆணவப் படுகொலை என்பதும் நடந்த வண்ணம் உள்ளது. பள்ளிகளில் சாதி தீண்டாமைகளினால் மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஊராட்சித் தலைவர்கள் தலித்களாக இருந்தால் அவர்கள் அவமதிக்கப்படுவது மட்டும் இல்லாமல், அவர்கள் வேலைகளையே செய்யவிடாமல் தடுக்கப்படுகின்றனர். இந்த சம்பவங்கள் எதோ ஒரு இடத்தில் நடந்தது என்று மட்டும் விட்டுவிட முடியாது. தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது. இத்தனைக்கும் சமூகநீதி ஆட்சியாக்கும் இங்கே நடக்கிறது என்று பெருமை பீற்றிக் கொண்டு சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டுக் கொண்டு சிலாகித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், இதே வேலையில்தான் தமிழகத்தில் 445 ஊர்களில் தீண்டாமை கொடுமைகள் கடைப்பிடிக்கின்றன என்ற தகவல் ஆர்.டி.ஐ மூலம் சில பல மாதங்களுக்கு முன் வெளிவந்து இப்போதும் மாறவில்லை. இச்சூழலில் தலித்துகள் அரசியல் அதிகாரம் பெற்றாலும், உரிய மரியாதையோ , சுதந்திமோ கிடைப்பதில்லை என்பதை அப்பட்டமாக சொல்லும் படமே ‘நந்தன்.’நம்ம தொழிலான ஜர்னலிஸ்டில் இருந்து டைரக்டர் ஆன இரா.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்பட ஆரம்பத்திலேயே ‘இந்தக் காலத்திலும் இப்படி நடக்கிறதா’ என்று கேட்பவர்களை கை பிடித்து காட்டும் முயற்சிதான் இந்த படம் என்று டைட்டில் கார்டில் இப்பட இயக்குநர் சொல்கிறார். அப்படி இவர் காட்டும் விஷயங்கள் ஒவ்வொன்றும் சுளீர் வலியைக் கொடுப்பதெனனவோ நிஜம்

புதுக்கோட்டை டிஸ்டிரிக்கில் உள்ள பொது பஞ்சாயத்து தொகுதியாக உள்ள ஒரு வில்லேஜில் சில பல அரசியல் காரணங்களால் தலித்துகள் மட்டுமே போட்டியிடும் தனி (Reserved) பஞ்சாயத்து தொகுதியாக மாற்றப்படுகிறது. அதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த ஜாதிய உணர்வு கொண்ட தலைவர் தன்னிடம் அடிமை போல வேலை செய்யும் தலித் சமூகத்தை சேர்ந்த கூழ்பானை என்றழைக்கப்படும் அம்பேத் குமார் (சசிகுமார்) என்பவரை எந்த போட்டியும் இல்லாமல் தலைவராக்குகிறார்.தான் ஆட்டி வைத்தபடி அம்பேத் குமார் ஆடுவார் என்கிற நினைப்பில் அப்படி செய்கிறார்.ஆனால் பஞ்சாயத்து தலையாக செலக்ட் ஆன ஆசாமி அம்பேத் குமார் வில்லேஜ் நிர்வாக அதிகாரியை நேரில் சந்தித்து தன் கிராமத்துக்காக சில நல்லவிஷயங்களைச் செய்கிறார். இதனால் கொலைவெறி கொள்ளும் முன்னாள் தலைவர், தலைவர் அம்பேத் குமாரை ஊர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி அடித்து, அவமானப்படுத்தி, பதவியை ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் வேறொரு தலித் ஆசாமியை போட்டியின்றி தலைவராக்க முயற்சி செய்கிறார். இந்த முயற்சியால் நடக்கும் அடாவடிகளே ‘நந்தன்’ படக் கதை .

இது நாள் வரை நடித்த படங்களில் பெல்பாட்டம், வேட்டி, ஜீன்ஸூடம் ஹேண்ட்ஸமாக வந்து அதிரடி எல்லாம் காட்டிய சசி குமார் , இதில் வழக்கத்துக்கு மாறானசதா வெற்றிலையை குதப்பியபடி , கஷ்டப்பட்டு நடந்தும் புது உடல் மொழிமூலமும் தான் ஏற்றுள்ள கேரக்டருக்கு உரிய பங்களிப்பைக் கொடுத்திருந்தாலும் அவ்வப்போது சசிகுமார் என்ற நிஜ பிம்பத்தை எக்ஸ்போஸ் செய்து உதட்டை பிதுக்க வைத்து விடுகிறார். ஜாதி திமிருடன் உலா வரும் ஊராட்சி தலைவராக, உள்ளே ஒன்று பேசி வெளியே வேறு மாதிரி நடந்துகொள்ளும் பெரிய மனிதன் போர்வையின் வலு அறிந்து அதை கச்சிதமாக போர்த்தி கோப்புலிங்கமாக ஸ்கோர் செய்கிறார் பாலாஜி சக்திவேல்.சசிகுமாரின் ஒய்ப் ரோலில் வரும் ஸ்ருதி பெரியசாமி தேவையான பங்களிப்பை செலுத்துகிறார். சமுத்திர கனியின் சிறப்பு தோற்றம் கவனிக்க வைக்கிறது. கிராமத்து எளிய மனிதர்களை படத்துக்குள் கொண்டு வந்த நடிக்க வைத்திருப்பது பலம் யதார்த்தம் கூட்டுகிறது.

சாதி என்கிற சமூகப் பிரிவினைக் கோட்பாட்டைத் தகர்க்காமல் நம்மால் ஒரு நாகரிகமான, ஜனநாயகமிக்க சமூகத்தை உருவாக்க முடியாது. சாதி வேண்டும்; ஆனால், தீண்டாமை கூடாது. சாதிப் பெருமிதங்கள் வேண்டும்; ஆனால், இழிவுபடுத்தக் கூடாது. தீண்டாமை குற்றம்; ஆனால், சாதி குற்றமல்ல என்பதான சமூகப் பார்வை முற்றிலும் மாற்றப்படாத வரை, ஒவ்வொரு வன்கொடுமை நடந்து முடிந்த பிறகும் அதற்கு எதிர்வினை ஆற்றுகின்றவர்களாகவே நாம் இருப்போம் என்ற கருத்தை மட்டுமே வலியுறுத்த முன்வந்திருக்கும் டைரக்டர் இரா சரவணன் அதை இப்போதைய சினிமா பாணியில் சொல்லாததுதான் குறை

என்றாலும் மேலவளவு, புதுக்கோட்டை என நாம் செய்தித் தாள்களில் படித்த விஷயங்களான வெற்றி பெற்ற வேட்பாளரை அமர நாற்காலி தராமல் அவமானப் படுத்துவதை எல்லாம் சுட்டிக் காட்டுபவர் கடைசி பத்து நிமிடத்துக்கு மட்டும் நாயகனுக்கு முதுகெலும்பை நிமிர்த்து விட்டிருப்பதுதான் ஆசுவாசமாக இருக்கிறது .அது மட்டுமின்றி நந்தன் சாப்டர் முடிந்த பின்பு நம் தமிழகத்தில் இது போன்ற சாதி பிரச்னைக்குள் சிக்கிய தலித் பஞ்சாயத்து தலைவர்களை பேட்டி எடுத்துக் காட்டி இருப்பதுதான் மனதில் தைக்கிறது .

மொத்தத்தில் இந்த நந்தன் – நம்மில் ஒருவன்

மார்க் 3/5

error: Content is protected !!