நாகை :வேளாங்கண்ணி மாதா ஆலய பெருவிழா கொடியேற்ற கோலாகலம்! – வீடியோ!!
கீழ்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கும். இந்நிலையில், இந்தாண்டு பெருவிழா இன்று மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக புனித ஆரோக்கிய மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஆலயத்திலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியே எடுத்துவரப்பட்டு பின்னர் ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர் கொடியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்துவைத்தார். சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.
கொடி உச்சியை அடைந்ததும், ஒரே நேரத்தில் ஆலயத்தின் விளக்குகள் ஏற்றப்பட்டு, வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. கொடியேற்றத்தை காண தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்காண பக்தர்கள் குவிந்தனர்.
வரும் 30ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம், ஆலயம் மேல் கோயில், கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலி நடக்கிறது. வரும் 1ம் தேதி மாலை சிலுவை பாதையும், 7ம் தேதி மாலை தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபமும் நடைபெறும் அதை தொடர்ந்து சிறப்பு பாடல் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.
8ம் தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. காலை 8 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு பெரிய தேர்பவனி நடக்கிறது. இதன்பின்பு கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.