மைசூரு தசராவை முன்னிட்டு 90 நாட்களுக்கு கண்காட்சி!

நாடெங்கும் தசரா விழாவைக் கொண்டாடினாலும், மைசூர் தசராவுக்கு தனிச் சிறப்பு உண்டு. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் உலகப் புகழ் பெற்ற நிகழ்வாகவும் மாறியுள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வரும் மைசூர் தசரா விழாவைக் கண்டு களிக்க இந்தியா மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பெருமளவில் கூடுகின்றனர்.
ஒன்பது நாள்கள் நவராத்திரி நோன்பிருந்து, பத்தாவது நாளில் விஜயதசமி கொண்டாடுவதை தசரா என்று அழைக்கிறார்கள். தீமையை வீழ்த்தி நன்மை வெற்றி கொண்டதை விஜயதசமி குறிக்கும் என்றாலும், மைசூர் நகரை ஆண்ட மகிஷாசுரன் என்ற அரக்கனை சாமுண்டீஸ்வரி அம்மன் வதம் செய்து கொன்றதன் வெற்றி விழாவாகத்தான் மைசூரில் தசரா கொண்டாடப்படுகிறது. கர்நாடகத்தின் பெரும் பகுதியை தங்கள் வசம் வைத்திருந்த விஜயநகரப் பேரரசர்கள் 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தசரா விழாவைக் கொண்டாடும் வழக்கத்தை சிறிய அளவில் தொடங்கினர்.
விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, இது நின்று போனது. கி.பி.1578 முதல் கி.பி.1617-ஆம் ஆண்டு வரை சுமார் 39 ஆண்டுகள் மைசூரை ஆண்ட ராஜா உடையார், தலைநகரத்தை ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு மாற்றிய பிறகு, கி.பி. 1610-ஆம் ஆண்டில் முதல்முறையாக அரச விழாவாக தசரா விழா நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தசரா விழா கர்நாடகத்தில், குறிப்பாக மைசூரில் கோலாகலமாக இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படி புகழ்பெற்ற மைசூரு தசராவிழா வருகின்ற அக்டோபர் 1ம் ேததி விமர்சையாக தொடங்க உள்ளது. இந்த பண்டிகையொட்டி மைசூருவில் 90 நாட்கள் நடக்கும் கண்காட்சிக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து கண்காட்சி ஏற்பாட்டளரின் முதன்மை அதிகாரி கூறுகையில், மைசூரு தசராவை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 1ம் தேதி முதல் 90 நாட்களுக்கு கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியை முதல்வர் சித்தராமையா தொடங்கி வைக்கிறார். 90 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில் அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும். கண்காட்சியில் 136 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் காலை 9மணி முதல் இரவு 9வரை கண்காட்சியில் உள்ள கடைகள் திறந்து இருக்கும். சுமார் 800பைக், 500 கார் மற்றும் 30 பஸ் உள்ளிட்டவைகள் நிறுத்தும் அளவிற்கு பிரமாண்ட பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக இந்தாண்டு ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.