மர்மர் – விமர்சனம்!

மர்மர் – விமர்சனம்!

ம் கோலிவுட்டில் மர்மம், திகில், பேய் படங்கள் எதுவும் புதுசு கிடையாது. ஆனால், ‘ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர்’ பாணியில் ஒரு கதையை ‘மர்மர்’ என்றொரு புது தலைப்பில் தமிழுக்கு டைரக்டர் கொண்டு இருப்பது பாராட்டுக்குரிய விஷயம். ஹாலிவுட், இந்தி சினிமாவில் இந்த மாதிரியான படங்கள் வந்திருந்தாலும் தமிழில் இதுதான் முதல் முறை. திகிலூட்டவென்றே பெரும்பாலும் இரவு நேர காட்சிகளை தான் காண்பிப்பார்கள். பெரும்பாலும் பகல் நேர காட்சியை எடுத்து இரவு நேரம் மாதிரி லைட் போட்டு விடுவார்கள். ஆனால், இந்த படத்தில் அப்படி இல்லாமல் உண்மையாகவே இரவு நேரத்தில் மிக குறைந்த வெளிச்சத்தில் காட்சிகளை படமாக்கி அசத்த முயன்றிருக்கிறார்கள். அதே சமயம் அடுத்தடுத்து காட்சிகள் வேகமாக நகரும் என்று எதிர்பார்த்தால் காட்டுக்குள் ஒரு இடத்தில் முகாம் உருவாக்கி கேமராவையும் ஒரு இடத்தில் வைத்துவிட்டு பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். தம்மடிக்கிறார்கள், தண்ணி அடிக்கிறார்கள் மறுபடியும் தம்மடிக்கிறார்கள்.. இடையிடையே காது கூசும் கெட்டவார்த்தையும் பேசி முகம் சுழிக்க வைத்து விட்டார்கள்.

அதாவது நான்கு யூடியூப் சேனல் இளைஞர்கள் காத்தூர் என்ற பேர் கொண்ட வில்லேஜின் அமானுஷ்ய கதையை கேட்டு தெரிந்து அதை வீடியோ டாக்குமெண்டிரியாக எடுக்கும் நோக்கி அந்த கிராமத்திற்கே செல்கிறார்கள். அக் கிராமத்தில் மங்கை என்ற பெண்ணினுடைய ஆவி கிராமமக்களை பழிவாங்குகிறது. இன்னொரு பக்கம் பௌர்ணமி அன்று ஆற்றில் கன்னிமார்கள் குளிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இப்படி இந்த இரண்டு மர்மமான கதை உண்மையா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்க தான் இந்த நான்கு இளைஞர்களும் கிராமத்திற்குள் செல்கிறார்கள்.அதில் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள். இவர்களுக்கு அந்த கிராமத்தில் உதவ வழி காட்டியாக வரும் நபர் எதிர்பாராத விதமாக பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பின் அவருடைய மகள் காந்தா தான் இவர்களுக்கு உதவி செய்கிறார். ஆரம்பத்தில் இந்த இளைனர்கள் கிராமத்திற்குள் செல்லும் பயணம் ஜாலியாகத்தான் இருக்கிறது. உள்ளே நுழையும்போது மக்கள் ஒவ்வொருவரும் எச்சரிக்கையும், பயத்தையும் கொடுக்கிறார்கள்.அவர்கள் பெரிதாக அதை கண்டுகொள்ளவில்லை. இருந்தாலும் அதையும் மீறி இரவு நேரத்தில் பல அமானுஷ்ய அசைவுகளும், காலடி சத்தங்களும் தொடர்ந்து நடக்கிறது. இதனால் இவர்கள் பேய் இருக்கிறதா என்பதை ஆராய ஒய்ஜா போர்டை வைத்து விளையாட ஆரம்பிக்கிறார்கள். அதற்குப் பின்னால் இவர்கள் கேட்ட கதை உண்மையா? இல்லையா? என்பது தான் மர்மர் படக் கதை.

மெயின் ரோலில் வரும் மெல்வின் (தேவ்ராஜ் ஆறுமுகம்), ரிஷி (ரிச்சி கபூர்), அங்கிதா (சுகன்யா ஷண்முகம்), ஜெனிஃபர் (அரியா செல்வராஜ்), (காந்தா (யுவிகா ராஜேந்திரன்) வை தவிர ஏனையோர் அனைவரும் இன்றைய நவநாகரீக யூத்களின் பிரதிபலிப்பு என்ற பேரில் (அசட்டு துணிச்சல், கஞ்சா, மது, மற்றும் பொது வெளியில் அச்சமற்ற செக்ஸ்) அப்படியே வெளிப்படுத்தி முன்னரே சொன்னபடி எல்லை மீறிய காட்சிகளில் வாழ்ந்திருக்கிறார்கள். கூடவே காட்டுக்குள் ஏதோஒ மர்மம் ஒன்று இருப்பதை உணரும் போது பயம், பதற்றம் என அனைத்தையும் முகபாவனை மூலம் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர். குறிப்பாக ரிஷி (ரிச்சி கபூர்) மற்றும் கிராமத்து பெண் காந்தா (யுவிகா ராஜேந்திரன்) ஆகிய இருவரின் நடிப்பு பலே சொல்ல வைத்து விடுகிறது

படத்தின் முக்கிய பங்காளரான சவுன் இன்ஜினியர் கேவ்ய்ன் பிரெடெரிக் மியூசிக் டைரக்டர் மிஸ்ஸிங் என்ற ஃபீலிங்கே ஏற்படாத வகையில் நேர்த்தியாக பணியாற்றியிருக்கிறார். ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியின் பகல் மற்றும் இரவு நேரங்களில் கேட்கப்படும் ஓசைகளை துல்லியமாக பதிவு செய்திருப்பவர், நடுநடுவே வரும் அமானுஷ்ய ஒலிகள் மூலம் படத்தின் தரத்தை உயர்த்த முயல்கிறார்

எழுதி டைரக்ட் செய்திருக்கும் ஹேம்நாத் நாராயணன், டெக்னிக்கலாக வித்தியாசமான திகில் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். அதில் மட்டும் வெற்றி பெற்றிருந்தாலும், படத்தின் திரைக்கதையிலும், காட்சி மற்றும் வசனங்களில் அத்து மீறி இருப்பதுடன் எடிட்டரும் சொத்தப்பி இருப்பதால் மர்மர் – புர்புர் ஆகி ஆகிவிட்டது.

மார்க் 2.5

error: Content is protected !!