ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் பொதுமக்கள் பார்வையிட அனுமதி!

ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் பொதுமக்கள் பார்வையிட அனுமதி!

ஜனாதிபதி  மாளிகை வளாகத்தில் உள்ள முகலாய தோட்டம், இன்று முதல் மார்ச் 9-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1911-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசு கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்குத் தலைநகரை மாற்றியபோது `வைஸ்ராய் மாளிகை’-யாகத்தான் ஜனாதிபதி மாளிகை உருவாக்கப்பட்டது. தற்போது ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாகத் திகழும் இம்மாளிகை, இந்தியா சுதந்திரம் பெற்ற போது `அரசு இல்லம்’ என்று மறுபெயர் சூட்டப்பட்டது. நாடு 1950-ல் குடியரசானபோது `ராஷ்டிரபதி பவன்’ என்று மாற்றப்பட்டது. அன்று முதல் ராஷ்டிரபதி பவன் என்று அழைக்கப்பட்டு வருகிறது.  ஒரு சினிமா தியேட்டர், பொழுதுபோக்குக் கூடம், நீச்சல் குளம், கோல்ப், டென்னிஸ், போலோ விளையாட்டு மைதானங்கள், பள்ளிக்கூடம், பெட்ரோல் விற்பனை நிலையம், அச்சகம், பேக்கரி மிகப்பெரிய சமையற்கூடம் என சகலமும் இங்கு உள்ளது.மொத்தம் முந்நூற்று நாற்பது அறைகளும், முப்பத்தியேழு செயற்கை நீரூற்றுகளும் உள்ளன.

ராஷ்டிரபதி பவனில் உள்ள பிரமாண்டமான கலைநுணுக்க வேலைப்பாடுகளுடன் கூடிய தர்பார் மண்டபத்தில்தான் விழாக்கள் நடைபெறும்.மத்திய அரசு பொறுப்பேற்பது, சாதனையாளர்களுக்கு விருது வழங்குவது உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறும்.ராஷ்டிரபதி பவனின் மைய நுழைவு வாயிலின் கதவுகள் முக்கியமான நிகழ்ச்சிகளின்போதுதான் திறக்கப்படும். ஜனாதிபதி பாராளுமன்றம் செல்லும் நாட்களிலும், வெளிநாட்டு அரசு தலைவர்கள் வருகையின்போது, இக்கதவு திறக்கப்படும் பிறவேளைகளில் வேறு சில வாயில்களே திறக்கப்படும்.
ஜனாதிபதி மாளிகையின் சிறப்பு அம்சங்களில் குறிப்பிடத்தக்கது மொகல் தோட்டம்,

இந்த ஜனாதிபதி மாளிகை வளாகத்தில், சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் முகலாய தோட்டம் அமைந்துள்ளது. இதில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மலர் வகைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக டாலியா, லில்லி, ஆப்ரிக்கன் டெய்சி, 70 பூச்செடி வகைகளும், 135 வகையான ரோஜா வகைகளும் நிறைந்து காணப்படுகின்றன. ஆனாலும் முகலாய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் அமைக்கப்பட்ட தோட்டம் என்பதால் முகலாய தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் வாரம் முதல் 30 நாட்கள் வரை பொதுமக்கள் கண்டு ரசிக்க அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு, இன்று முதல் மார்ச் 9-ம் தேதி வரை, பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு காரணமாக ஒவ்வொரு திங்கட்கிழமைகளும், ஹோலி பண்டிகை காரணமாக மார்ச் 2ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இந்த `உத்யாநோத்சவ்’ கண்காட்சிக்காக நெதர்லாந்தில் இருந்து எட்டு வண்ணங்களில் 10ஆயிரம் வகையான அல்லிப்பூக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் 70 வகையான பருவகால பூக்கள் மற்றும் 135 வகையான ரோஜாப் பூக்கள் கொண்டு முகலாயத் தோட்டத்தை அலங்கரித்துள்ளனர். இதில் பச்சை ரோஜா, கருப்பு ரோஜா, ஏஞ்சலிக் போன்ற அரிதான ரோஜா வகைகளும் அடங்கும். முகாலய தோட்டத்தை காலை 9 முதல் மாலை 4 மணி வரை சென்று கண்டு ரசிக்கலாம்.

இதேபோல் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்தையும், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!