இந்தியாவில் 40 சதவீதத்திற்கும் அதிகமான முதியோர் எந்தவித வருமானமும் இன்றி மிக ஏழ்மை நிலையில் இருகிறார் – ஐநா சபை ஆய்வறிக்கை!

இந்தியாவில் 40 சதவீதத்திற்கும் அதிகமான முதியோர் எந்தவித வருமானமும் இன்றி மிக ஏழ்மை நிலையில் இருகிறார் – ஐநா சபை ஆய்வறிக்கை!

ந்திய மக்கள் தொகையில் முதியோர் தொடர்பான ஐ.நா சபை நிதியம் அமைப்பு(யூ என் எப். பி. ஏ.) மேற்கொண்ட ஆய்வு முடிவுகள், “இந்திய முதியோர் அறிக்கை 2023” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதித் துறை செயலாளர் சௌரவ் கார்க் மற்றும் ஐ.நா. நிதியம் அமைப்பின் இந்திய நிர்வாகி ஆண்ட்ரியா ஓஜ்னர் ஆகியோர் இந்த அறிக்கையை வெளியிட்டனர். அதன் விவரம் வருமாறு:-

“கடந்த 2021 ஆம் ஆண்டில் பெரும்பான்மையான தென் மாநிலங்கள், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் ஆகியவை முதியோர் மக்கள் தொகையில் தேசிய சராசரியை விட அதிக பங்கை பதிவு செய்துள்ளன. இந்த இடைவெளி 2036- ம் ஆண்டில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகையில் 20% பேர் முதியோர்களாக இருப்பார்கள். 2022 ஆம் ஆண்டு முதல் 2050 ஆம் ஆண்டு வரை 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகை வளர்ச்சி சுமார் 279 சதவீதமாக இருக்கும்.

தற்போதைய நிலையில் இந்திய முதியவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஏழைகளாகவும் அவர்களில் 18.7 சதவீதம் பேர் வருமானம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். முதியவர்களின் சமூக மற்றும் பொருளாதார நல்வாழ்வை பற்றிய கவலையை இந்த புள்ளி விவரங்கள் எழுப்புகின்றன.

மற்ற நாடுகளைப் போல் இந்திய முதியோர் மக்கள் தொகையிலும் கணவரை இழந்து மற்றவர்களை சார்ந்து இருக்கும் வயதான பெண்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. முதுமையில் வறுமை இயல்பாகவே ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

இந்திய முதியோர்களை பொருத்தவரை அதிகமாக எதிர்கொள்ளும் சவால் என்னவென்றால் அவர்களில் பெரும்பான்மையோர் பெண்களாகவும் கிராமப்புறங்களைச் சார்ந்தவர்களாகவும் இருப்பதே ஆகும். இதனை மையப்படுத்தி அரசியல் கொள்கைகள் வருங்காலத்தில் வடிவமைக்கப்பட வேண்டும்.

இந்த ஆய்வின்போது முதியோர்கள் தங்கள் அனுபவத்தில் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இனி வரும் காலங்களில் கொரோனா போன்ற பேரிடர் மீட்பு திட்டங்களில் முதியோர் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

முதியோர்களுக்கான திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் அனைத்து முதியோர் இல்லங்களையும் ஒழுங்குமுறை வரம்புக்குள் கொண்டு வருவதற்கும் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு முடிந்தவரை முதியவர்களுக்கு முதுமை காலத்தை எளிதாக்க அரசு கவனம் செலுத்த வேண்டும் என இந்த அறிக்கையின் மூலம் பரிந்துரைக்கிறது”. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!