இறைவன் – விமர்சனம்!

இறைவன் – விமர்சனம்!

வறு செய்வோரை இறைவன் தண்டிக்கும் வரை காத்திருக்காமல் தன்னையே இறைவனாக எண்ணிக்கொண்டு என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரி ஜெயம் ரவிக்கும், தன்னை இறைவனாக நினைத்துக் கொண்டு அடுத்தடுத்து கொலைகள் செய்யும் ராகுல் போஸூக்கும் இடையே நடக்கும் யுத்தமே இப்படத்தின் அடிப்படை கதையாகும். சைக்கோ கொலைகாரர்கள் பற்றிய படங்கள் ஹாலிவுட்டில் அதிகம் வருவது வாடிக்கை. அதுபோன்றதொரு தமிழ் கதையைத் தேர்வு செய்து அதை ஆங்கிலப்படங்களுக்கு நிகராகவே கொடுக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார் டைரக்டர் அகமத். இவர் வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர்கள் தேர்வு, திரைக்கதையில் நேர்த்தி ஆகியனவற்றைச் சரியாகச் செய்திருக்கிறார்.

அதாவது படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே படம் முழுக்க ரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிகள் இருப்பது போன்று அமைந்திருந்தது. போதாக்குறைக்கு படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் கொடுக்கப்பட்ட நிலையில், குழந்தைகளுடன் படம் பார்க்க வேண்டாம் என ஜெயம் ரவியே வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்படி என்ன கதை எனப் பார்த்தால், “மனிதன் மிகவும் ஆபத்தான விலங்கு” என்ற கேப்ஷனுடன் தொடங்கும் படத்தின் முதல் காட்சியே மொத்த கதையையும் சொல்லி விடுகிறது. சிங்காரச் சென்னையில் அடுத்தடுத்து இளம் பெண்கள் மிக மிக மிகக் கொடூரமான முறையில் கண்களை பறித்தும், கால்களை அறுத்தும் கொலை செய்யப்படுகிறார்கள். இதனையெல்லாம் பிரம்மா எனும் சைக்கோ கொலைகாரன் செய்யும் நிலையில், அந்த ஆசாமியைப் பிடிக்க காவல்துறை அதிகாரிகளான அர்ஜூன், அவருடைய நண்பர் ஆன்ட்ரூ டீம் முயற்சிக்கிறது. இதில் பிரம்மா சிக்க, ஆன்ட்ரூ உயிரிழக்கிறார். இதனால் மன அழுத்தம் காரணமாக போலீஸ் வேலையில் இருந்து அர்ஜூன் ஒதுங்குகிறார். ஒரு கட்டத்தில் போலீசில் இருந்து தப்பிக்கும் பிரம்மா மீண்டும் முன்பை விட சீரியல் கொலைகளை கொடூரமாக செய்கிறார். இதில் ஜெயம் ரவியை சுற்றியிருப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் போலீஸ் துறை விழி பிதுங்கி நிற்கிறது. இறுதியாக பிரம்மா சிக்கினாரா.. அவரின் நோக்கம் தான் என்ன… என்பதை பதைபதைக்க வைக்கும் அளவுக்கு எதிர்பாராத திரைக்கதையோடு த்ரில்லர் விருந்து படைத்துள்ளார் ஐ.அஹமது.

பயம் என்பதே இல்லாத ஒரு போலீஸ் ஆபீசர் ரோலில் ஜெயம் ரவி உடல் மொழியிலும், முக பாவனைகளிலும் அவருடைய கம்பீரம் அவ்வளவு பொருந்திப் போகிறது.கிடைத்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தும் ஒரு சில தமிழ் ஹீரோக்களில் ஜெயம் ரவி முதன்மையானவர் என்பதை மீண்டும் ஒருமுறை காட்டி இருக்கிறார். கம்பீரம் மட்டுமல்லாமல் தன் ஃப்ரண்டுக்காக ஏங்கும் இடங்களிலும், நண்பனின் குடும்பத்துக்காக போராடும் இடங்களிலும் கை தேர்ந்த நடிப்பை கொடுத்து ஸ்கோர் செய்திருக்கிறார். ஜெயம் ரவியின் ஃப்ரண்டாக வரும் நரேனின் கேரக்டர் பெரிய அளவில் இல்லை என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். நயன்தாராவிற்கு நடிப்பதற்கான வேலை இல்லை என்றாலும் ஆங்காங்கே வந்து போகிறார். வில்லனாக வரும் ராகுல் போஸின் கதாபாத்திரம் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தன் நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார். இரண்டாவது சைக்கோ வினோத் கிஷன் ஓவர் ஆக்டிங் .

கேமராமேன் ஹரி கே வேதாந்தின் இருள் ஒளிக்காட்சிகள் சிறப்பாக அமைந்து ஒரு சைக்கோ கில்லர் கதையை அவ்வளவு அருமையாக உயர்த்தி இருக்கிறது. . ஜாக்கியின் கலை இயக்கமும் அப்படியே அட்டகாசம் . யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை மட்டும் பரவாயில்லை ரகம்.

இயக்குனர் அஹமது மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார் . கதை வழக்கமான சைக்கோ திரில்லர் படங்களில் வரும் அதே கதைதான் என்றாலும், தன்னால் முடிந்த அளவு திரைக்கதையில் ரத்தத்தை ஓவராக தெளித்து சமாளித்து இருக்கிறார். மேலும் இடைவேளை ட்விஸ்ட்டும் சரியாக அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இளம்பெண்கள் கொல்லப்படுவதையும் சித்திரவதை செய்யப்படுவதையும் கொடூரமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் . . மிக பலவீனமான திரைக்கதை. குடும்பம் செண்டிமெண்ட் காதல் என்று சில காட்சிகள் தன் பாட்டுக்கு வருகின்றன .

நம் தமிழ் நாட்டில் சைக்கோ மரணங்கள் இதுவரை நிகழவில்லை என்றாலும் ஏகப்பட்ட சைக்கோ திரில்லர் தமிழ் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்த திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு காட்ட முயன்றிருக்கிறார்.. அதில் பாஸாக தவறி விட்டார் என்றாலும் இது ஒரு டைப்பான கிரைம் மூவிதான்

மார்க் 3/5

error: Content is protected !!