32°C
விளம்பரம்
Advertisement

காந்தி நடிகர் இல்லை… ஆனால் மோடி?

admin சேலம் Published: August 9, 2016 6 நிமிட வாசிப்பு எடிட்டர் ஏரியா
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



“அடிப்பதானால் என்னை அடியுங்கள், சுடுவதானால் என்னச் சுடுங்கள், தலித்களை அல்ல” என்று மோடி வீரவசனம் பேசியது பக்தர்களுக்கே சிரிப்பை மூட்டியிருக்கும். ஏதோ இப்போதாவது வாய் திறந்தாரே என்று சிலர் நினைப்பார்கள், ஆஹா… தலைவர் என்னமா எச்சரிக்கை விடுத்தார் பாத்தியா என்று அப்பாவிகள் நினைப்பார்கள்.

edeit modi aug 9

இந்த வீரவசனத்தின் (!) மூலம் மோடி என்ன சொல்ல வந்தார்? “கோ ரட்சகர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்பவர்கள்” என்று மோடி சுட்டிய கும்பல்கள் எல்லாமே இவருடைய கட்சியின் சகோதர அமைப்பினர்தானே? இந்தக் கும்பலைத் தூண்டிவிடுகிற வகையில் பேசுகிறவர்களும் இவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள்தானே? மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதானே அடுக்கடுக்காக வன்முறைச் சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன? மாட்டிறைச்சியின் பெயரால் வன்முறைகள் நடைபெறுவதை உண்மையிலேயே இவர் வெறுக்கிறார் என்றால், இவர் தன்னைத்தானே அடித்துக்கொள்ள வேண்டும் அல்லவோ?!

7 அக்டோபர் 2015 – இமாச்சலப் பிரதேசத்தில் மாடுகளை ஏற்றிச்சென்ற வாகனத்தின்மீது காவிப் பரிவாரத்தினர் நடத்திய பெட்ரோல் குண்டு வீச்சில் ஜாஹித் அகமத் உயிரிழந்தார்.

17 அக்டோபர் – அதே இமாச்சலப் பிரதேசத்தில் இன்னொருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

28 செப்டம்பர் 2015 – தில்லிக்கு அருகே தாத்ரியில் முகம்மது அக்லாக் வீட்டில் ஆட்டிறைச்சியை மாட்டிறைச்சி என்று கருதி ஒரு கும்பலால் அடித்துக்கொல்லப்பட்டார்.

2 நவம்பர் 2015 – மணிப்பூரில் முகம்மது ஹஸ்மத் அலி என்ற ஒரு தலைமையாசிரியர் மாட்டிறைச்சி விவகாரத்தில் அடித்துக் கொல்லப்பட்டார்.

15 ஜனவரி 2016 – மத்தியப் பிரதேசத்தின் கிர்கியா ரயில் நிலையத்தில் நசீமா பானு, மொகம்மத் உசேன் ஆகிய இருவரும் ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர்.

15 மார்ச் 2016 – ராஜஸ்தானின் மேவார் பல்கலைக் கழகத்தில் கஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் நான்குபேர் மாட்டிறைச்சி உண்பதாக காவிகள் புகார் பேரில் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் ஆட்டிறைச்சிதான் உண்டனர் என்பது பின்னர் தெரிய வந்த்து.

தில்லியில் உள்ள கேரளா இல்லத்தில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக யாரோ போன் செய்த (!) புகாருக்காக தில்லி காவல்துறை அத்துமீறி உள்ளே நுழைந்த்து. கேரள முதல்வர் காட்டமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

18 மார்ச் 2016 – ஜார்க்கண்டில் ஜாப்ரா கிராமத்தில் கால்நடை வியாபாரிகள் மஜ்லூம் அன்சாரி, இம்தியாஸ் கான் இவரும் அடித்து நொறுக்கப்பட்டனர், அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டன. இருவரையும் கொன்று தூக்கில் தொங்க விட்டனர்.

2 ஏப்ரல் 2016 – ஹரியாணாவின் சஹரன்பூரைச் சேர்ந்த முஸ்தான் என்பவரின் உடல் குருக்ஷேத்திராவில் கிடைத்த்து. காவிப்பரிவாரத்தினர்தான் இதைச் செய்தனர் என்று தெரிகிறது. உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

6 மே 2016 – சோனாவைச் சேர்ந்த வாசிம் என்பவர் கும்பலால் தாக்கப்பட்டார். துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். வாசிம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

10 ஜூன் 2016 – பரீதாபாதில் ரிஸ்வான், முக்தியார் என்ற இருவரை கும்பல் தாக்கி, சாணியைத் தின்ன வைத்த்து. இருவரும் சிறைக்கு அனுப்ப்ப்பட்டனர். தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் காணோம்.

27 ஜூலை 2016 – மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சூர் ரயில் நிலையத்தில்இரண்டு பெண்கள் கும்பலால் தாக்கப்பட்டனர், போலீஸ் வேடிக்கை பார்த்த்து.

27 ஜூலை – நவஸ்ரீ கிராமத்தைச் சேர்ந்த கிரிஷ் சோசா என்பவர் கும்பலால் தாக்கப்பட்டார்.

இத்தனை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பெரும்பாலான சம்பவங்கள் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கவனம் பெற்றன. ஆனால் சமூக ஊடகங்களில் தீவிரமா இயங்கும் மோடி வாய் திறக்கவே இல்லை.

தாத்ரியில் ஹக்லாக் கொல்லப்பட்டதை அடுத்து, பீகார் தேர்தல் நேரத்தில் மோடி பேசியதை மோடியே சிந்தித்திராத கோணத்தில் ஊடகங்கள் எடுத்துப்போட்டு பாராட்டின. “இந்துக்களும் முஸ்லிம்களும் வறுமையை எதிர்த்துப் போராட வேண்டும், தமக்குள் போரிடக்கூடாது” – இதுதான் அவர் உதிர்த்த பொன்மொழி. ஹக்லாக்கை கொன்றது ஒரு கும்பல். இதில் மோதல் ஏதும் நடைபெறவில்லை. ஆனால் மோடிக்கு பீகார் தேர்தலில் வாக்குகள்தான் முக்கியமாக இருந்தன. அதனால்தான் கொலைகாரர்களைக் கண்டிக்காமல், இல்லாத ஒரு மோதலை இருப்பதுபோல சித்திரித்தார்.

காவிக் கும்பலின் படுகொலைத் தாக்குதலை கண்டித்து நவம்பர் 4ஆம் தேதி காங்கிரஸ் பேரணி நடத்தியது. அப்போது மோடி சொன்னது – “இது உருவாக்கப்பட்ட சர்ச்சை.”

அப்போது மோடியின் வலதுகரம் அருண் ஜெட்லி சொன்னது – “இவர்களுடைய நோக்கங்கள் இரண்டு. நாடாளுமன்றத்தை முடக்கி, மோடி அரசுக்கு நற்பெயரைக் கொடுக்க்க்கூடிய சீர்திருத்தங்களை முடக்கவது. மற்றொன்று, திட்டமிட்ட பிரச்சாரத்தின் மூலம் இந்தியாவில் சமூக முரண் இருப்பதாகக் காட்டுவது”

மோடி அரசு அப்படி எந்த சீர்திருத்தஙகளையும் புதிதாகக் கொண்டுவந்துவிடவில்லை, காங்கிரஸ் போட்ட பாதையில்தான் பயணிக்கிறது என்பது ஒருபக்கம் கிடக்கட்டும். இந்தியாவில் சமூக முரண் இல்லை என்றால் மோடி தலித்துகளின் ரட்சகராக காட்ட வேண்டிய அவசியம் ஏன் வந்தது?!

முந்தாநாளின் வீரவசனத்துக்கு முன்பு ஒருமுறை தன் ஆட்களை நாவடக்கிப் பேசுமாறு எச்சரித்தார். ஆனால் அதை யாரும் பொருட்படுத்தவில்லை என்பதை அவரும் கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால், அந்த எச்சரிக்கையும் ஒரு வெற்று நாடகம்தான்.

முஸ்லிம்கள் இந்த நாட்டில் வசிக்கலாம், ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தியாக வேண்டும் என்றார் ஹரியாணா முதல்வர் கட்டார். மாட்டிறைச்சி விவகாரத்தில் தாக்கப்பட்ட ஜம்மு கஷ்மீர் எம்எல்ஏவை அடித்தது சரிதான். இவர்களை நடுத்தெருவில் எல்லாரும் பார்க்கும்படி அடித்தால்தான் புத்தி வரும் என்றார் சாக்ஷி மகராஜ்.
பசுவைக் கொல்பவனைக் கொல்லலாம் என்று வேதங்கள் கூறுகின்றன என்று ஆர்எஸ்எஸ் பத்திரிகை அட்டைப்படக்கட்டுரை எழுதியது. ஆர்எஸ்எஸ்சில் வார்க்கப்பட்ட மோடி இதைப்பற்றியெல்லாம் ஏதும் பேசியதில்லை, பேசவும் மாட்டார்.

எந்த இறைச்சியாக இருந்தாலும் மாட்டிறைச்சிஎன்று சொல்லி யாரும் தாக்கலாம் என்றொரு சூழலை உருவாக்கியவர்கள் இவருடைய கட்சியின் சகோதர அமைப்புகள்தானே?

இப்போது மட்டும் ஏன் திடீரென்று தலித் பாசம் வந்துவிட்டது? அவருடைய மாநிலமான குஜராத்தில் சம்பவம் நடந்தது என்பதாலா? இது உண்மையிலேயே தலித் பாசமா? முஸ்லிம்கள் தாக்கப்பட்டபோதெல்லாம் வாயைத் திறக்காமல் இருப்பேன், ஆனால் தலித்துகள் தாக்கப்பட்டால் பொங்குவேன் என்று சொல்லாமல் சொல்கிறாரா? தலித்களோடு சேர்த்து முஸ்லிம்களையும் தாக்க வேண்டாம் என்று ஏன் சொல்ல முடியவில்லை? தலித்துகள் இந்துக்கள், அதனால்தான் பேசினேன் என்று காட்டிக்கொள்ளவா? தலித்துகளைத் தாக்கினால் இழிவான வேலைகளைச் செய்ய ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதாலா?

மாட்டிறைச்சி விவகாரத்தில் தாக்குகிற கும்பல்கள் எல்லாமே இவர் சார்ந்திருக்கிற அமைப்புகளைச் சேர்ந்தவைதான். பெரும்பாலான சம்பவங்கள் நடந்ததும் இவருடைய கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில்தான். செல்ஃப் புரொக்ளெயம்டு கோ ரட்சகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எப்போதோ தன் கட்சியின் முதல்வர்களுக்கு ஆணையிட்டிருக்க முடியுமே? வீர வசனங்களுக்குத் தேவையே இருந்திருக்காதே?

ஆக, இந்த வீரவசனத்துக்கான காரணங்கள் என்னவாக இருக்கும்? அடுத்து வரவிருக்கும் தேர்தல். இன்னொன்று, இவருடைய பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு நடத்திவரும் கோசாலை ஊழியர்களுக்கு மூன்றுமாதமாக சம்பளம் கொடுக்கவில்லை. ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்திருக்கிறார்கள். பத்து நாட்களில் 500 பசுக்கள் இறந்துபோயிருக்கின்றன. அந்த விஷயத்திலிருந்து திசை திருப்ப வேண்டும். (மூன்றாவதாக இன்னொரு காரணமும் இருக்கலாம் – அதிகரித்துவரும் சகிப்பின்மை குறித்து அண்ணன் அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருக்கிறது. பாத்தீங்களா அண்ணே… நான் பேசிட்டேன் என்று காட்டுவதாகவும் இருக்கலாம்.)

ஆசியாவிலேயே சிறந்தது (!) என்று கூறப்படும் ஹிங்கோனியா கோசாலையில் ஜனவரியிலிருந்து ஜூலை வரை 8122 பசுக்கள் இறந்து போனதாக இப்போது செய்திகள் வருகின்றன. இத்தனைக்கும் பசு பராமரிப்புக்கென்றே ஓர் அமைச்சகம் வேறு அங்கே இருக்கிறதாம்!

ஆக, இவர்களுக்கு பசுக்களின்மீதும் உண்மையான அக்கறையில்லை, தலித்துகள் மீதும் உண்மையான அக்கறை இல்லை. அக்கறை எல்லாம் இதைவைத்து அரசியல் நடத்துவது மட்டுமே.

இதை எழுதி முடிக்கும்போது, காந்தி சொன்னது நினைவு வருகிறது. (மாட்டிறைச்சி அரசியல் என்ற முந்தைய கட்டுரைக்கான இணைப்பு இதோ.)

“ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக – அது எவ்வளவு மேலானதாயினும் – நான் ஒரு பசுவைக் கொல்லமாட்டேன்; அது போலவே ஒரு பசுவைக் காப்பாற்றுவதற்காக ஒரு மனிதனையும் கொலைசெய்ய மாட்டேன். … பசுவதையைச் சட்டத்தின்மூலம் தடுத்து நிறுத்த முடியாது. … இந்தப் பூமிக்குப் பாரமாய் இருக்கின்ற விலங்குகளை பாதுகாப்பது என்பது இயலாது. பாரமாக இருந்தால் மனிதனைப் பாதுகாப்பதுகூட இயலாததுதான். …. பசுவைக் காப்பாற்றுவது இந்து சமயத்தில் முக்கியமானதுதான். ஆனால் பசுவைக் காப்பதற்காக இந்து அல்லாத ஒருவனிடம் பலப்பிரயோகம் செய்வது இந்துமதக் கோட்பாடு ஆகாது.”

 காந்தி நடிகர் இல்லை.

ஷாஜஹான்

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்