கோ- ஆப்ரேட்டிவ் பேங்குகளை விசாரிச்சு சொல்லுங்க!- முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

கோ- ஆப்ரேட்டிவ் பேங்குகளை  விசாரிச்சு சொல்லுங்க!- முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “சேலம் மற்றும் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் அடுத்தடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த கூட்டுறவு வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுக்களை “வைப்புத் தொகையாக” பெரிய அளவில் பெற்றிருப்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியிருக்கிறார்கள். சிறந்த சேவைக்காக நான்கு முறை குடியரசுத் தலைவர் விருது பெற்ற சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த இந்த ரெய்டு அந்தப் பகுதி மக்களிடத்தில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

mk stalin dec 25a

1905 முதல் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள், விவசாயப் பெருங்குடி மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற வங்கிகள் என்பது தமிழகத்திற்கு கிடைத்துள்ள பெருமையாகவே கருதுகிறேன். மாநிலத்தில் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், வட்டார மற்றும் ஒன்றிய அளவில் 794 கிளைகளும், சென்னையில் மட்டும் 47 கிளைகளுமாக பரந்து விரிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இதுவரை மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் மக்கள் “வைப்பு தொகையாக” வைத்திருக்கிறார்கள் என்பதே, இந்த வங்கிகளின் மீது எவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்து மக்கள் வைப்புத் தொகை போடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்தியாவிலேயே ரிசர்வ் வங்கியின் லைசென்ஸ் பெற்று செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கிகளைக் கொண்ட இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்வது தான் இதற்கு காரணமாகும்.மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்ற கூட்டுறவு வங்கிகளை தங்களின் ஊழல் பணத்தை, கறுப்புப் பணத்தை டெபாசிட் செய்வதற்காக அதிமுக முன்னணிப் பிரமுகர்கள், அமைச்சர்கள் சிலர் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக வரும் அதிர்ச்சிக்குரிய செய்திகள் தமிழகத்தில் “கூட்டுறவு இயக்கத்திற்கே” விடப்பட்ட சவாலாகவும், இந்த மத்திய கூட்டுறவு வங்கிகள் மீது மக்கள் வைத்துள்ள நல்லெண்ணத்தைத் தகர்த்து எறியும் விதத்திலும் அமைந்து விட்டது கவலைக்குறியது மட்டுமல்ல, மிகுந்த வேதனைக்குறியதாகும்.

ஆட்சிக்கு வந்ததும் அராஜகமாக, ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்து, கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நடத்தி, அதிமுகவினரை மத்திய கூட்டுறவு வங்கிகளின் தலைவர்களாக ஆளுங்கட்சியினர் அவசர அவரசமாக நியமித்தது இப்படிப்பட்ட காரியங்களை வெட்கமின்றி செய்வதற்காகவே என்ற அடிப்படை சந்தேகம் எழுகிறது. ஆகவே கூட்டுறவுத் துறைக்கு தலைமைத் தாங்கும் கூட்டுறவுத் துறை அமைச்சரும், மத்திய கூட்டுறவு வங்கிகளின் தலைவர்களும் “பழைய ரூபாய் நோட்டுக்களை” வைப்புத் தொகையாக பெற ஏன் அனுமதித்தார்கள் ? நவம்பர் 8 ஆம் தேதிக்குப் பிறகு விவசாயிகளுக்கான “பண பரிவர்த்தனை” செய்யக் கூடாது என்று கூட்டுறவு சங்கங்களே முடக்கப்பட்டு, விவசாயிகள் அனைவரும் பரிதவித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஓசை ஏதுமின்றி இப்படி நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பழைய நோட்டுக்களை கூட்டுறவு வங்கிகளில் மட்டும் “வைப்புத் தொகையாக” பெற்றுக் கொண்டது எப்படி ? என்ற கேள்விகள் குறித்தெல்லாம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு உண்மை விவரங்கள் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

முதலமைச்சர் திரு ஒ. பன்னீர்செல்வம் இந்த மத்திய கூட்டுறவு வங்கி வைப்புத் தொகை விவகாரங்கள் குறித்து உடனடியாக ஒரு உயர்மட்டக் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டு, பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்களை பதவி நீக்கம் செய்து, “கூட்டுறவு இயக்கத்தின்” தலைசிறந்த சின்னமாகத் திகழும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் மாண்பை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்

Related Posts