‘மு. க. ஸ்டாலின் ஆகிய நான் எதிர்க் கட்சித் தலைவராகி…!’ – திமுக தலைமை அறிவிப்பு

‘மு. க. ஸ்டாலின் ஆகிய நான் எதிர்க் கட்சித் தலைவராகி…!’ – திமுக தலைமை அறிவிப்பு

சென்னை – அறிவாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில், திமுக சட்டப்பேரவைக் குழு துணைத் தலைவராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். திமுக கொறடாவாக சக்கரபாணியும், துணைக் கொறடாவாக கு.பிச்சாண்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

dmk may 24

அக் கூட்டத்தில் கருணாநிதி பேசிய போது, “தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் ஆற்றிய உரை இதுதான்!

அமைப்புச் செயலாளர் தம்பி பாரதி குறிப்பிட்டதைப் போல நான் உங்களுக்கெல்லாம் இப்போது அறிவுரை எதுவும் கூறப் போவதில்லை. ஏனென்றால் உங்களுக்கெல்லாம் இனிமேல் அறிவுரை எதுவும் சொல்லத் தேவையில்லை என்று கருதுகிறேன். ஏனென்றால் பெற வேண்டிய அறிவுரை களையெல்லாம் இங்கே வீற்றிருக்கின்ற செயற்குழு, சட்டப் பேரவைக்கு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்கள். இனி மேலாவது நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நம்மை நாமே திருத்திக்கொண்டு இடையிலே நுழைந்த துரோகச் செயல்களுக்கு இடம் தராமல், தூய்மையாக திராவிட முன்னேற்றக் கழகத்தை நடத்திச் சென்று, அடுத்தடுத்த வெற்றிகளைப் பெறுவதற்கு நாம் முனைய வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் தோற்காது தோற்கப் போவதுமில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்கலாம் என்று நினைத்தவர்கள் எல்லாம் அழிந்து போய் விட்டார்கள். இதற்கு முன்பே இந்தக் கட்சிகள் தலை தூக்கி ஆடிய காட்சிகளை யெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம்.

அந்தக் காட்சிகள் எல்லாம் மாயமாய் மறைந்ததையும் நாம் பார்த்திருக்கிறோம். எனவே அந்த நம்பிக்கையோடு இப்படிப்பட்ட முடிவுகளைத் தந்த தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தலை நடத்திய அதிகாரிகள், அரசு இவர்களுக்கெல்லாம் பாடம் போதிக்கும் வகையிலே ஏற்பட்டுள்ள இந்த நிலையை எண்ணிப் பார்த்து அடுத்து நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் பலமான அடியாக – யாருக்கும் பயப்படாத அடியாக – துரோகம் விளைவிப்பவர்களுக்கு துணை போகாத அடியாக – எடுத்து வைக்க இந்தச் செயற் குழுவில் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று உங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.” என்றார்

பின்னர் இது தொடர்பாக திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு, திமுக சார்பில் தமிழக சட்டப் பேரவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலும், பொதுச் செயலாளர் தலைமையிலும் நடைபெற்றது. திமுக சார்பில் தேர்தலில் வெற்றி பெற்ற 89 உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.தமிழக சட்டமன்றத்தில் திமுக குழு தலைவராக மு.க.ஸ்டாலினும், துணைத் தலைவராக துரைமுருகனும், திமுக கொறடாவாக சக்கரபாணியும், துணை கொறடாவாக கு.பிச்சாண்டியும் செயல்படுவார்கள்” என திமுக கருணாநிதி அறிவித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில், ”திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக என்னைத் தேர்வு செய்த தலைவர் கருணாநிதிக்கும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.என் மீது நம்பிக்கை வைத்து அளிக்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பில் சிறப்பாக பணியாற்றுவேன். மக்களின் பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமான முறையில் அவையில் விவாதித்து சட்ட மன்ற ஜனநாயகத்தை காப்பாற்ற அரும் பாடுபடுவேன் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதனிடையே இதுவரை அமைந்து இருந்த 14 சட்ட மன்றங்களில் எதிர் கட்சித் தலைவராகப் பணியாற்றியவர்கள் பற்றிய இந்த சிறு குறிப்பு இதோ:

முதல் சட்ட மன்றம் 1952 முதல் 1957 வரை :

இந்த காலத்தில் சட்ட மன்றம் இரண்டு பெரும் கம்யூனிசத் தலைவர்களை எதிர்கட்சிகளாகக் கொண்டிருந்தது. டி நாஹி ரெட்டி அக்டோபர் 1 1953 வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். மார்க்ஸிய கோட்பாடுகள் மீது பற்று கொண்டவர் .பின்னர் தோழர் பி. இராமமூர்த்தி அந்த பொறுப்பினை அலங்கரித்தார். மார்க்ஸிய சிந்தாந்தப் பற்றாளர்களில் மிகக் குறிப்பிடத் தக்கவர் பி.இராமமூர்த்தி. இவர் சட்ட மன்றத்திற்கு தேர்வாகும் போது சிறையில் இருந்தார்

இரண்டாவது சட்ட மன்றம் : 1957 முதல் 1962 வரை

விகே இராமசாமி முதலியார் ; இவர் காங்கிரசாராயினும் சுயேச்சையாக சட்ட மன்றத்திற்கு உத்திரமேரூரிலிருந்து தேர்வானவர். அப்போதைய சட்ட மன்றத்தில் திமுகவுக்கு 16 உறுப்பினர்கள் இருந்த நிலை. அவர்களே எதிர் கட்சி அந்தஸ்த்தை அடைந்திருக்க வேண்டும். ஆனால் மறுமலர்ச்சி காங்கிரஸை ஆதரித்த விகே இராமசாமி முதலியார் அதன் சார்பாக மாறி எதிர் கட்சி தலைவரானார்

மூன்றாவது சட்ட மன்றம் 1962 முதல் 1967 வரை

எதிர் கட்சித் தலைவர் இரா நெடுஞ்செழியன்: முதல்வர் பதவிக்கான போட்டிகளில் மிகச் சுலபமாகத் தோற்றுப் போனவர்

நான்காவது சட்ட மன்றம் 1967 முதல் 1971 வரை

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பில் முதன் முதல் அமர்ந்த கால கட்டம். அண்ணா அவர் மறைவுக்குப் பின் கருணாநிதி என்ற இரண்டு முதல்வர்களில் காலம். இதில் எதிர் கட்சித் தலைவர் பி ஜி கருத்திருமன்

ஐந்தாவது சட்ட மன்றம் 1971 முதல் 1976 வரை

கருணாநிதி முதல்வராக இருந்த காலம். எதிர் கட்சித் தலைவர் பொன்னப்ப நாடார்

ஆறாவது சட்டமன்றம் 1977 முதல் 1980 வரை

கருணாநிதி எதிர் கட்சித் தலைவர்

ஏழாவது சட்ட மன்றம் : 1980 முதல் 1984 வரை

சில காலம் கருணாநிதியும் பின்னர் ஹாஜா ஷெரிஃப்ம் எதிர்கட்சித் தலைவர்கள்

எட்டாவது சட்ட மன்றம் 1985 முதல் 1988 வரை

ஓ. சுப்பிரமணியன் எதிர் கட்சித் தலைவர்

ஒன்பதாவது சட்ட மன்றம் 1989 முதல் 1991 வரை

செல்வி ஜெயலலிதா, எஸ் ஆர் இராதா, கருப்பையா மூப்பனார் என மூவர் இந்த பொறுப்பில் இருந்த காலம்

பத்தாவது சட்ட மன்றம் 1991 முதல் 1996 வரை

எஸ் ஆர் பாலசுப்ரமணியன் எதிர் கட்சித் தலைவர்

பதினோராவது சட்ட மன்றம் 1996 முதல் 2001

எதிர் கட்சி தலைவர் சோ பாலகிருஷ்ணன்

12 வது சட்ட மன்றம் 2001 முதல் 2006 வரை

எதிர் கட்சி தலைவர் க அன்பழகன்

13 வது சட்ட மன்றம் 2006 முதல் 2011 வரை

ஓ பன்னீர் செல்வம், செல்வி ஜெயலலிதா என எதிர் கட்சித் தலைவர் இரண்டு முன்னாள் முதல்வர்களால் அலங்கரிக்கப்பட்ட காலம்

14 வது சட்ட மன்றம் 2011 முதல் 2016 வரை

விஜயகாந்த்

இந்த விபரத்திலிருந்து ஒன்றைத் தெரிந்துக் கொள்ளலாம் எதிர் கட்சி தலைவர் பதவியில் இருந்தவர்கள் முதல்வராகவும் முதல்வராக இருந்தவர்கள் பின்னர் எதிர் கட்சித் தலைவராகவும் இடம் மாறியுள்ளனர்

Related Posts