மு.க.ஸ்டாலின் போலியான ஒரு அரசியல் ஆளுமை!

மு.க.ஸ்டாலின் போலியான ஒரு அரசியல் ஆளுமை!

த்திரிகையாளர்கள் எல்லா நேரத்திலும் கண்ணியமாகக் கேள்வி கேட்கவேண்டும் என்று அவசியம் இல்லை. சீண்டுவது போலவும் கேட்பார்கள். கேட்கவும் வேண்டும். அதுதான் பத்திரிகையாளர்களின் வேலை. நாட்டில் நிலவும் குற்றங்களில் பெரும்பான்மை அது நிகழ்ந்த பிறகு சமூக ஊடகங்களில் வருபவை. மக்களுக்கு அது கடைசியாகத்தான் தெரிய வரும். அது போதும். ஒவ்வொரு குடிமகனும், நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் பின் தொடர வேண்டியதில்லை. அதற்குத்தான் அரசு என்கிற ஒரு நிறுவனம் இருக்கிறது. வேலை பார்க்கிற ஒவ்வொரு குடிமகனும் வரி செலுத்துகிறான். இந்த அரசை நடத்துகிறான்.தலைமை அமைச்சராக இருக்கிற முதலமைச்சருக்கு எல்லாத் தரவுகளும் முன்னமே தெரியும். தெரிந்திருக்க வேண்டும். அதற்குப் பெயர்தான் முதலமைச்சர். எனக்கும் உங்களுக்கும் தெரிந்திருக்க அளவுக்குத்தான் மந்திரிகளுக்கும் நாட்டு நடப்புத் தெரிகிறது என்றால் அது அயோக்கியத்தனம். வெறும் நிர்வாகக் குறைபாடு என்று நான் சொல்ல மாட்டேன். வகிக்கும் பதவிக்குத் தகுதியற்ற தன்மை என்று பொருள். ஒரு சிறிய கார்ப்பரேட் நிறுவனத்தில் கூட இத்தகைய தகுதிக் குறைபாட்டுடன் வேலையில் நீடிக்க முடியாது. Accountability என்பது நிர்வாகத்தின் பிரதானத் தகுதி.

அது மோடியாக இருந்தாலும் சரி, ஸ்டாலினாக இருந்தாலும் சரி. ஊடகத்தை எதிர்கொள்ள யோக்யதை இல்லை என்றால் அவர்கள் ஆள்வதற்கு யோக்யதை இல்லாதவர்கள் என்றே பொருள். ஒரு விஷயத்தை ஆழ்ந்து கற்கும் பண்பு இருக்கிறதா, அதை எதிர்கொள்ளும் நேர்மை இருக்கிறதா என்பதே ஊடகத்தை எதிர்கொள்ளும்போது ஒரு அரசியல்வாதியிடம் இருந்து நாம் தெரிந்து கொள்வது.உதாரணத்துக்கு நீங்கள் ட்ரம்பின் பிரஸ் மீட்டைப் பாருங்கள். ட்ரம்ப் மோசமான சர்வாதிகாரி என்று அம்பலப்படும் நேரத்தில் அவரது மற்ற குண நலன்களும் வெளிப்படும் இடமாக அது இருக்கிறது. சீமான் ஒரு பிற்போக்குவாத காமெடியன் என்பது அவர் மீடியாவை எதிர்கொள்வதன் வழியாகவே நமக்குத் தெரியும். மேடையில் நரம்பு தெறிக்கப் பேசுவதன் வழியாக அல்ல.

ஸ்டாலின் அளவுக்கு போலியான ஒரு அரசியல் ஆளுமை தமிழக அரசியலில் இல்லை. கருணாநிதியை போலச் செய்வது, கட்சி அரசியலில் ஜெயலலிதாவை அவரது சர்வாதிகார அணுகுமுறையை போலச் செய்வது என்பதே அவரது வழிமுறையாக இருக்கிறது. ஊடகங்களை எதிர்கொள்வது என்றால் வெறுமனே எதுகை மோனையாக அந்தக் குறிப்பிட்ட பத்திரிகையாளனை எதிர்கொள்வது அல்ல. மாறாக அப்பத்திரிகையாளனின் வழியாக ஒரு குடிமகனின் பிரதிநிதியை எதிர்கொள்ளும் பொறுப்பு அது. அரசியல்வாதிக்கு இருக்க வேண்டிய முதல் தகுதியும் திறனும் அது. எவன் மீடியாவைப் பார்த்து ஓடுகிறானோ அவன் மக்களைப் பார்த்து ஓடுகிறான் என்றே அர்த்தம்.கருணாநிதிக்கு, சோ போன்ற முழுக்கவும் எதிரான முகாமில் உள்ள ஆட்களுடன் நல்லுறவு இருந்தது. ஆனால் விமர்சனம் என்று வந்தால் மிகவும் கூறாக எதிர்வினை செய்பவராக அவர் இருந்தார். எல்லாவற்றுக்கும் கருத்து சொல்பவராக இருந்தார் என்பது முக்கியம்.

ஆனால் ஸ்டாலின், முழுக்கவும் PR களையே நம்பியிருக்கிறார். கூட்டணிக் கட்சிகள், ஒத்த கருத்துடைய தோழமை இயக்கங்கள் அனைத்தும் PR ஏஜன்சிகளாக மாறி ஸ்டாலினுக்கு சொம்படிப்பதை இலக்காகக் கொண்டு செயல்படுகின்றன. தமிழக அரசியலில் எதிர்க்கட்சி அரசியல் என்பதே இல்லை. இந்த விஷயத்தில் எடப்பாடியைப் பாராட்ட வேண்டும். அவர் தைரியமாக மீடியாவை எதிர்கொள்கிறார். அவரது ஆட்சிக்காலத்திலும் மெய்ன் லைன் மீடியாக்கள் முக்கியமான பிரச்சினைகளைத் தவிர்த்துவிட்டு உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தன. ஆனால் திமுக ஆதரவு ஊடகங்கள் தீவிரமாக இயங்கின. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ஜல்லிக்கட்டு போன்ற விஷயங்களில் மக்களைக் கொதி நிலையில் வைப்பதற்கு அவற்றால் இயன்றது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மோடி எதிர்ப்பைத் தீவிரமாக முன்னெடுத்த போது அதற்கும் வெளி இருந்தது. இன்று என்ன நிலைமை?

கவர்னர் கல்லூரி கல்லூரியாகப் போய் RSS க்கு பிரச்சாரம் பண்ணுகிறார். அங்கு எவனாவது கறுப்புக் கொடி காட்டி விடுவானோ என்று பயந்து மாணவனின் உள்ளாடை வரைக் கழட்டி பரிசோதனை செய்கிறது முதல்வரின் தலைமையில் இருக்கும் காவல்துறை. இன்னொரு பக்கம் சீமான் வீட்டை முற்றுகையிடுவோம் என்று சொன்ன பெரியார் திராவிடக் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

எப்போதும் முகநூலிலும், வாட்சப்பில் சுற்றிக்கொண்டு நேரத்தைச் செலவழிக்கும் முதல்வருக்கு, என்னைக் கொன்று விடுவார்கள் என்று அவரை tag செய்து போடும் வீடியோ கண்ணில் படுவதில்லை.அந்தக் கொலையும் நடந்துவிடுகிறது. உடனே கொலையில் தொடர்புடையவரைப் பிடித்து அவரது முட்டியில் சுட்டு கட்டு போட்டு போட்டோ வெளியிடுகிறது காவல்துறை. ஏன்டா மொத்த நிர்வாகமும் PR வேலையிலேயே இருந்தால் அப்புறம் எவன்தான்டா ஆட்சி நடத்துவது என்று மக்கள் சோர்வடைகிறார்கள்.

கார்ல் மார்க்ஸ் கணபதி

error: Content is protected !!