30 கோடி வாகனங்கள் RC காலி: மத்திய அரசின் டிஜிட்டல் வேட்டை!
இந்திய சாலைகளில் முறையான ஆவணங்களின்றி இயங்கும் வாகனங்களைக் கட்டுப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இப்போது நவீனத் தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்துள்ளது. மத்திய அரசின் ‘வாகன்’ (Vahan) தரவுத்தளத்தைச் சீரமைக்கும் நோக்கில், மனிதத் தலையீடு இல்லாத ஒரு தானியங்கி முறையை (Automated System) அரசு அறிமுகம் செய்கிறது. இதன் மூலம் ஆவணங்களைப் புதுப்பிக்காத வாகனங்கள் இனி சாலைகளில் சட்டப்பூர்வமாக இயங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
விதிமுறைகளும் புதிய கட்டுப்பாடுகளும்
வாகனத் தரவுத்தளத்தைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிகள் மிகவும் கடுமையானவை:

-
ஓராண்டு எச்சரிக்கை: காப்பீடு, புகைச்சான்றிதழ் அல்லது தகுதிச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை ஓராண்டு வரை புதுப்பிக்காமல் வைத்திருக்கும் வாகனங்கள், தானாகவே ‘தற்காலிகமாகப் பயன்படுத்த முடியாதவை’ (Non-use status) என்ற நிலைக்கு மாற்றப்படும்.
-
இரண்டாண்டு கெடு: இரண்டு ஆண்டுகள் கடந்தும் ஆவணங்களைச் சரிசெய்யாத வாகனங்களின் தரவுகள், ‘வாகன்’ தளத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும். அத்தகைய வாகனங்கள் சாலையில் பிடிபட்டால் அவை சட்டவிரோதமானவையாகக் கருதப்பட்டு பறிமுதல் செய்யப்படும்.
அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்
மத்திய அமைச்சகத்தின் ‘வாகன்’ தளத்தில் பதிவாகியுள்ள தரவுகள், நாட்டின் சாலைப் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன:
-
மொத்த வாகனங்கள்: 40.7 கோடி.
-
விதிமீறுபவர்கள்: சுமார் 30 கோடி வாகனங்கள் (70% க்கும் மேல்) முறையான காப்பீடு, புகைச்சான்றிதழ் அல்லது தகுதிச் சான்றிதழ் இன்றி இயங்குகின்றன.
-
சரியான வாகனங்கள்: வெறும் 8.2 கோடி வாகனங்கள் மட்டுமே அனைத்து விதிகளையும் பின்பற்றி முறையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இருசக்கர வாகனங்களின் நிலை
விதிமீறல் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இருசக்கர வாகனங்கள்தான். சுமார் 23.5 கோடி இருசக்கர வாகனங்கள் எவ்வித முறையான ஆவணங்களும் இன்றிச் சாலைகளில் வலம் வருகின்றன. விபத்து காலங்களில் காப்பீடு இல்லாதது போன்ற சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெறுவதில் இது பெரும் தடையாக உள்ளது.
மாநில வாரியான நிலவரம்
இந்த ஆய்வில் தென்னிந்திய மாநிலங்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது:
-
மோசமான நிலை: தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமான வாகனங்கள் பராமரிப்பின்றி இயங்குகின்றன.
-
மேம்பட்ட நிலை: தெலங்கானா மாநிலம் மட்டுமே 20 விழுக்காட்டிற்கும் குறைவான விதிமீறல்களுடன் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
ஏன் இந்த நடவடிக்கை?
சாலை விபத்துகளின் போது வாகன உரிமையாளர்களைக் கண்டறிவதிலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதிலும் முறையான ஆவணங்கள் அவசியம். குறிப்பாக, பழைய வாகனங்களை அழிக்கும் ‘ஸ்கிராப்பேஜ்’ (Scrappage Policy) கொள்கையைத் தீவிரப்படுத்தவும், போலி வாகனப் பதிவுகளைத் தவிர்க்கவும் இந்தத் தானியங்கி சீரமைப்பு முறை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் இந்தத் தானியங்கி முறை இனி வாகன உரிமையாளர்களை அலட்சியமாக இருக்க விடாது. உங்கள் வாகனம் சட்டப்படி சாலையில் ஓட வேண்டுமெனில், ஆவணங்களைச் சரியான நேரத்தில் புதுப்பிப்பது மட்டுமே ஒரே வழி. இல்லையெனில், உங்கள் வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC) காகிதக் கழிவாக மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை.
ரமாபிரபா


