மரியா- விமர்சனம்!!
‘மரியா’ திரைப்படம், கன்னியாஸ்திரியாக வாழும் ஒரு இளம் பெண்ணின் மன உணர்வுகளைப் பின்னணியாகக் கொண்டு, அன்பைப் பேசும் ஒரு அழகான நாடகப் படைப்பாகும். இப்படம் , உலகில் உள்ள பல முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்றுள்ளது. இத்தாலி, மலேசியா, லண்டன், நேபாளம், புது தில்லி, ஹரியானா, மும்பை, கேரளா, உத்தரபிரதேசம், கொல்கத்தா ஆகிய நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. மேலும், “சிறந்த இந்திய திரைப்படம்”, “சிறந்த இயக்குனர்”, “சிறந்த திரைக்கதை”, “சிறந்த நடிகை”, “சிறந்த இசை” என பல விருதுகளையும் பெற்றுள்ளது. சில பல காரணத்தால் பேரிலோ கன்னியாஸ்திரி ஆகும் பெண்கள், அதிலிருந்து மீளவும் முடியாமல், அந்தச் சுமையோடு வாழவும் முடியாமல் திணறும் பெண்களில் ஒருவரின் கதை..என்றாலும் எல்லை மீறிய கற்பனைப் படம் என்பதால் எடுபடவில்லை.
கதை சுருக்கம்
நன் என்றழைக்கப்படும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிதான் படத்தின் நாயகி. விடுமுறைக்காக தனது உறவினர் வீட்டுக்கு வந்து சில நாட்கள் தங்கும் அவர் கன்னியாஸ்திரி வாழ்க்கையில் இருந்து வெளியேறி மற்ற பெண்களைப் போல் சகஜமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அவரது குடும்பம் இதை ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு, அவரை வீட்டை விட்டு துரத்தி விடுகிறது. ஆனாலும் பசி, தாகம், தூக்கம் போன்ற இயல்பான ஒன்றான காம உணர்வு அவருக்குள் எழுகிறது. அது தரும் அவஸ்தையால இப்படியான காம இச்சையை பெரும்பாவம் என போதிக்கும் ஜீசஸையே ர் வெறுத்து சாத்தானை வழிபடும் குழுவுடன் இணைந்து பயணிக்கும் நிலைக்குச் செல்கிறார். அதன்மூலம் அவரது வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் மரியா படத்தின் கதை.
ஹீரோயினாக நடித்திருக்கும் சாய்ஸ்ரீ பிரபாகரன், சர்ச்சையான கேரக்டரின் கனத்தைப் புரிந்து தைரியமாக அருமையாக நடித்திருக்கிறார்.ஒரு சராசரி பெண்ணின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் மட்டுமின்றி படம் முழுவதையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். சாத்தான் வழிபாட்டு குழுவின் தலைவராக வரும் பாவல் நவகீதன், ஏகப்பட்ட வசனங்களை கொஞ்சமுன் தடுமாற்றம் இன்றி பேசி தனது ரோலுக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகியின் உறவினராக நடித்திருக்கும் சிது குமரேசன், அவரது காதலராக நடித்திருக்கும் விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்கள் வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.
மியூசிக் டைரக்டர்கள் அரவிந்த் கோபால கிருஷ்ணன் மற்றும் பரத் சுதர்ஷன் ஆகியோரது இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. வசனம் இல்லாத காட்சிகள் நீளமாக இருந்தாலும், அதற்கு பின்னணி இசை உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.
கேமராமேன் மணிஷங்கர்.ஜி, கூடுதல் ஒளி இன்றி இருக்கும் ஒளியை வைத்து காட்சிகளை படமாக்கியிருக்கிறார். ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதை என்றாலும், அந்த உணர்வு பார்வையாளர்களிடம் ஏற்படாத வகையில் கதாபாத்திரங்களின் நடிப்பு, உடல் மொழி ஆகியவற்றின் மீது பார்வையாளர்கள் கவனம் திரும்பும் வகையில் கேமரா கோணங்களை கையாண்டு படத்தின் லெவலை உயர்த்த உதவி இருக்கிறார்
ஆனால் கிறிஸ்துவ மதத்தையும் , கன்னியாஸ்திரிகளையும் களங்கப்படுத்தும் நோக்கில்தான் படத்தை எடுத்துள்ளார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது.ஒரு ஈலம் பெண்ணின் மனதையும், அவரது உணர்வுகளையும் பேசும் படமாக முதல் பாதி நகரும் போது கவனம் ஈர்க்கும் படமாக இருக்கிறது. அதே சமயம், இரண்டாம் பாதியில் பாலியல் உறவுக்கு ஏங்கும் பெண், அது கிடைக்காத நிலையில் தனது மதத்தையே வெறுத்து வேற்று வழியில் பயணிப்பது என்று கதையை மாற்று வழியில் பயணிக்க வைத்து படத்தை பலவீனமாக்கி விடும் டைரக்டர் ஹரி கே.சுதன், மதம் வேறுபாடு பார்க்காமல் அனைத்து மதத்தினரும் வழிபடும் அன்னை மரியாவை களங்கப்படுத்தி விட்டார் என்பதே உண்மை.
மொத்தத்தில் மரியா – சாத்தான் படைப்பு
மார்க் 2/5


