தமிழ் குரல் / AI Voice
தெற்குப்பக்கம் ஜாதிப்பெருமை பேசி ஊரில் கலாட்டா பண்ணிக்கொண்டிருக்கும் இளைஞர்களைக் கவரும் நோக்கில் இந்தப்படத்தில் ‘அந்த டைப்பில் ‘ நிறைய பெருமை பேசும் எக்கச்சக்கமான காட்சிகளுடன் வெளி வந்திருக்கிறது “மன்னர் வகையறா”.
விமலின் சொந்தத்தயாரிப்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் ஒரு குடும்ப படமாக உருவாக்க நினைத்திருக்கிறார்கள். மாப்ள சிங்கம் கொடுத்த தைரியத்தில் அதே பாணியில் திரும்ப வந்திருக்கிறார் விமல். விமலுக்கு அவரது எளிமையான பாத்திரங்கள் மிகப்பெரும் பலம் ஆனால் என்னவோ இதில் ஹிரோயிச பாணிக்கு மாறியிருக்கிறார்.
வக்கீலுக்கு பரீட்சை எழுதிவிட்டு ஊரில் வெட்டியாக சுற்றும் விமல் அண்ணனின் காதலை சேர்த்து வைக்கப்போய் தன் காதலை இழக்கிறார். மீண்டும் குடும்பங்களை இணைத்து தன் காதலை காப்பாற்றுவது தான் கதை. நம் இந்திய சினிமாவில் அடித்து துவைக்கப்பட்ட கதைதான்.. அதில் காமெடி என்று நினைத்து எதையதையோ தூவி கொடுத்திருக்கிறார்கள். ஆம் அடிக்கடி மொக்கை டயலாக்குகளையும் காமெடி என நினைத்து அறுக்கிறார்கள். இரட்டை அர்த்த வசனங்களும், ஜாதிப்பெருமை பேசும் வசனங்களும் முகம் சுளிக்க வைக்கிறது. அதைத்தாண்டி சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார்கள் என்பதை ஒப்பு கொள்ளதான் வேண்டும்.
படம் முழுதும் பெரும் நடிகர் பட்டாளம். அத்தனை பேரும் தங்கள் நல்ல நடிப்பைத் தந்திருக்கி றார்கள். விமல் லுக்கில் வெகு அழகாய் மாறியிருக்கிறார். நடிப்பிலும் எந்தக்குறையும் இல்லை. இந்த ஹீரோயிச பாணி அவசியமா என்பதை அவர் உணர வேண்டும். கயல் ஆனந்திக்கு இப்படியும் நடிக்கத் தெரியும் என்பது இப்போது தான் தெரிகிறது. துறுதுறு பெண்ணாக கவர்கிறார். இரண்டு பாடல்கள் நன்றாய் இருந்தாலும் மற்ற பாடல்கள் நெளிய வைக்கிறது. ஒளிப்பதிவு கச்சிதம்.
இயக்குநர் காமெடி படமெடுக்க நினைத்திருக்கிறார். ஆனால் சிரிப்பு கொஞ்சூண்டுதான் வருகிறது.
மார்க் 5 / 3
கதிரவன்

