32°C
விளம்பரம்
Advertisement

மண்டாடி -திரைப்பட விமர்சனம்!

admin சேலம் Published: September 10, 2026 4 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



டலோடிகளாக வாழும் மீனவ சகோதரர்களின் வாழ்க்கை என்பது எப்போதும் நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில்தான் நகர்கிறது. ஆழ்கடலில் உயிரைப் பணயம் வைத்துப் பயணித்து மீன்களைப் பிடித்துக்கொண்டு திரும்புவதற்கு இடையிலான வாழ்க்கையில் கடல் சீற்றம், காற்றின் அலைக்கழிப்பு, எல்லை தாண்டியமைக்காக அந்நிய நாட்டுக் காவற்படையின் துப்பாக்கிச்சூடு மற்றும் சிறைப்பிடிப்பு என உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பிழைத்திருப்பதே மிகப்பெரிய சாதனையாகும். அப்படிப்பட்ட பரதவ இனத்து இளைஞன் ஒருவனின் வாழ்வியல் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான இந்தத் திரைப்படம் குறைந்த குறைகளுடன் ஒரு பக்கா திரைப் படைப்பாக வந்துள்ளது.

கதைக்களம்

தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள ராமேஸ்வரம் அருகில் முகவைபட்டினம் என்ற மீனவ கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் காளி பல இளைஞர்களுக்கு பாய்மரப் படகு போட்டியைப் பயிற்ச்சியளித்து வருகிறார். இவருக்கு எதிராக சாட்டை புலி என்பவர் போட்டிகளை நடத்துகிறார். இந்த போட்டிகள் இருவருக்கும் தனிப்பட்ட மோதலாக உருவெடுக்க, 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம்தான் இதற்குக் காரணம் என்பது பிளாஷ்பேக் மூலம் வெளிப்படுகிறது. முனி என்ற பாய்மரப் படகு போட்டி நடத்தும் ஆசிரியரிடம் காளியும் சாட்டை புலியும் வித்தையைக் கற்றுக் கொண்ட நிலையில், சாட்டை புலியின் குடும்பத்தினர் காளியை நம்ப வேண்டாம் என்று கூறிய அறிவுரை இருவருக்கும் இடையே மோதலை ஏற்படுத்துகிறது. இதனால் சில கொலைகள் நடந்து, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்குச் சென்று வேலை செய்து வரும் காளி, தன் முன்னாள் காதலியின் மகனைக் காப்பாற்ற சொந்த ஊருக்குத் திரும்புகிறார். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அவர் பாய்மரப் போட்டியில் கலந்து கொள்ள நேரிடுகிறது. இதன் பின்னணி என்ன, போட்டியின் நாயகன் காளி ஜெயித்தது எப்படி என்பதுதான் மண்டாடி படத்தின் கதையாகும்.

நடிப்பு மற்றும் கதாபாத்திரங்கள்

முக்கிய நாயகன் பாத்திரமான காளி கேரக்டருக்கு நடிகர் சூரி மிகவும் பொருத்தமானவர் என்பதை படம் நிரூபிக்கிறது. காமெடி காட்சிகளில் வசன உச்சரிப்பால் முத்திரை பதித்த அவர், இப்படத்தில் பலவித முகபாவங்களை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தனது உடலுழைப்பை முழுமையாகக் கொட்டி பாய்மரப் போட்டி காட்சிகளில் அனைவரையும் கவர்ந்துள்ளார். டோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சுஹாஸ் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். சூரிக்கு இணையான கதாபாத்திரம் என்பதால் சுனாமி ரைடர்ஸ் அணியை வழிநடத்தும் பயிற்சியாளராகவும் ஊரில் செல்வாக்கு மிக்கவராகவும் பலமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பிளாஷ்பேக் காட்சிகளுக்கும் தற்போதைய காட்சிகளுக்கும் அவர் காட்டியுள்ள நடிப்பு வித்தியாசம் படத்திற்குப் பலம் சேர்க்கிறது.

பெரியவர் சத்யராஜ் இடைவேளையில் அறிமுகமாகும் காட்சிக்குத் தியேட்டரில் விசில் சத்தம் பறக்கிறது. கடலின் மேல் இருக்க வேண்டிய மரியாதையை மண்டாடியாக அவர் சொல்லும் வசனங்கள் மிக முக்கியமாகக் கவனிக்கத்தக்கவை. நடிகை மகிமா நம்பியார் உணர்வுப்பூர்வமான நடிப்பைக் கச்சிதமாக வழங்கியுள்ளார். துடிப்பும் பரபரப்பும் நிறைந்த இளைஞனாக மிதுன் ஜெய் சங்கர், முத்துக்காளியின் சகோதரி மகளாக வரும் கிருத்திகா, ஆங்காங்கே காமெடி செய்யும் பாலசரவணன், நிதானமாக யோசிக்கும் கதாபாத்திரத்தில் ரவீந்திர விஜய் மற்றும் ஸ்டன் சிவா என அனைவரும் தங்களின் நேர்த்தியான பங்களிப்பைத் தந்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்களின் பணி

படத்தில் ஒளிப்பதிவாளர் கதிரின் பணி மிகவும் பிரமாதமாக அமைந்துள்ளது. கடலின் சீற்றத்தையும் படகு செல்லும் வேகத்தையும் தனது கேமராவில் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார். ஒளிப்பதிவை வடிவமைத்த பிரதாப் மற்றும் விஎப்எக்ஸ் வடிவமைத்த ஹரிஹரசுதன் இருவரும் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றியுள்ளனர். விஜயகாந்த் ரசிகர் மன்ற பதாகைகள், ஃபைபர் படகுகள் மற்றும் மரப்படகுகள் என கலை இயக்குநர் கிரண் சிறப்பான பணியைச் செய்துள்ளார். நடுக்கடலில் நடக்கும் சண்டை காட்சிகளில் ஸ்டன்ட் இயக்குநர்கள் பீட்டர் ஹெயின், திலீப் சுப்புராயன் மற்றும் மகேஷ் மாத்யூ ஆகியோரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் வேகத்தையும் உத்வேகத்தையும் பன்மடங்கு உயர்த்தியுள்ளன.

திறனாய்வு மற்றும் முடிவு

படத்தின் முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி தொடங்கும் போது படம் வேறு லெவலுக்குச் செல்கிறது. பிளாஷ்பேக் காட்சிகள் சிறிது நீளமாக இருந்தாலும், கடைசி கட்டத்தில் கதை மீண்டும் வேகத்தைப் பிடித்து படகு ஓட்டும் ரேஸ் காட்சியில் வந்து அமர்கிறது. பெரிய திரையில் பார்க்க வேண்டிய இந்த போட் ரேஸ் ஃபினாலே காட்சி ரசிகர்களுக்கு மிரட்டலான அனுபவத்தைத் தரும். சில கணிக்கக்கூடிய மோதல்களும் பழக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான தருணங்களும் ஆங்காங்கே இருந்தாலும், இரண்டு பிரதான படகு பந்தயக் காட்சிகளுக்காகவே தியேட்டருக்குச் சென்று இப்படத்தைப் பார்க்கலாம். முதல் பாதியில் சற்று பொறுமை காத்தால், இரண்டாம் பாதியில் திரையரங்கமே படகு ஓட்டும் அனுபவத்தைப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

ரேட்டிங் 4/5

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்