ஆண், பெண் :அதற்குப் பின்?

ஆண், பெண் :அதற்குப் பின்?

இன்று சர்வதேச ஆடவர் தினம். ஆடவர், உடல்நலம் மற்றும் மனநலம் காப்பதை வலியுறுத்துகிறது இந்த ஆண்டின் மையப் பொருள். மேலும், ஆடவருக்கு எதிரான பாகுபாடுகளைக் களைவதின் அவசியத்தையும் கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தியச் சமூகம் ஓர் ஆணாதிக்கச் சமூகம் என்பதில் சந்தேகமில்லை. அதே வேளையில், மாறி வரும் பண்பாட்டுச் சூழலில், அங்கும் இங்குமாகவும் சில தளங்களில் பலவாறாகவும் ஆண்கள் அவமதிப்புக்கு உள்ளாகிறார்கள். சாதி, வர்க்கம் போன்ற பொதுக் காரணங்கள் ஒருபுறமிருக்க, சில பொழுதுகளில் அது பெண் என்ற சாதகத்தாலோ அல்லது பெண் மனநிலை சார்ந்த ஆதிக்கத்தாலோ நடக்கிறது; நடத்தப்படுகிறது. ஆண்கள் எதிர்பாலினரால் காயப் படுத்தப் படுவதைப் பகிரங்கமாகப் பொதுவெளியில் பகிர்வது இழுக்காகக் கருதப்படுகிறது. அதன் பொருட்டு எவரும் இதுபற்றி வெளிப்படையாகப் பேசுவதில்லை அல்லது பேசுவது பலவீனம் என்று நினைக்கிறார்கள்.

குறிப்பாக, கருத்தியல் தளங்களில் பெண்களுக்கு எளிதாகக் கிடைக்கும் கவன ஈர்ப்பு, ஆணாக இருப்பதாலேயே பல ஆண்களுக்கு கிட்டுவதில்லை. ஊடகங்களில், பொதுவெளியில் மேலடுக்குப் பெண்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், கீழடுக்கிலிருந்து போராட்டங்களுடன் முன்னேறி வரும் தகுதியுள்ள ஆண்களுக்கு கிடைப்பதில்லை. ஒரே அடுக்கிலும்கூட இரு பாலரிலும் தகுதியுள்ளவர்களுக்கு கிடைப்பதில்லை என்பது தனி விவாதத்திற்குரியது.

நமது சமூகத்தில் பெண்களின் உரிமை கோரப்படுகிறது. ஆண்களின் உரிமை எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவ்வாறெனில், அதுவே எல்லா இடங்களிலும் அவ்வாறாகவே இல்லை என்பதும் உண்மை. இதனால், ஆண்களின் நிலைமை கவலைக்குரியதாக இருக்கிறது என்று பொருளல்ல. காலமாற்றம், ஆண்களின் ஆதிக்கத்தை ஒடுக்கும் வகையில் பெண்களை சக்தியுள்ளவர்களாக உருவெடுக்கச் செய்யும். செய்யட்டும். அது தேவையும்கூட. பல முன்னோடிச் சிந்தனையாளர் கள் கூறியது போல, பெண்களின் சுதந்திரம் என்பது ஆண்களின் உரத்த குரல்களையும் உள்ளடக்கியது. அப்படியான ஆண்கள், அவர்கள் ஆண்கள் என்பதற்காகவே புறக்கணிக்கப் படுவதோ அல்லது புண்படுத்தப்படுவதோகூட பால் சமத்துவத்துக்கு எதிரானதுதான். விதி விலக்குகள் இருக்கலாம்; எனினும் பொதுவில், இரு பாலரும் ஒருவருக்கொருவர் எல்லா நிலையிலும் தேவைப்படுகிறார்கள்.

வலுவான குடும்பக் கட்டமைப்பைக் கொண்ட இந்தியச் சமூகத்தில் ஆண்களின் சுமை என்பது பெண்களுக்கு இளைத்ததல்ல. சமூகத்தின் பொது மனநிலை சார்ந்து உடனடியாக எதிர்வினை புரியவேண்டிய இடத்தில் ஆண்கள் இருப்பதால், கூடுதல் சுமையுடன் போராடுவதும் யதார்த்தமாக இருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஓர் ஆணின் முன்னெடுப்பு என்பது அவன் சார்ந்த பெண்களுக்கும் சேர்த்தே என்பதை ஒப்புக்கொள்தல் நலம்.

அறிவுலகில் கொந்தளிப்புடன் ஆண்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒலிக்கும் இருபால் கருத்தாளர்களும் முற்போக்காளர்களும், ஆண்களை அடிமைகளாகக் கையாள்வதை ஒரு கலாச்சாரமாகவே ஊக்குவித்த தலைமை குறித்து எவ்வாறாக வெளிப்பட்டார்கள் என்பதை நாடறியும்.

நாளும் பெண்கள், ஆண்களால் சூறையாடப்படும் நிலையில், இப்படியெல்லாம் சிந்திப்பதேகூட அடாத செயலாக சிலர் நினைக்கலாம். ஆனால், பால் சமத்துவம் அல்லது பால் இணக்கம் நோக்கிய தெளிந்த புரிதலும் முன் நகர்வும்தான் அனைவருக்குமான உரிமைகளையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும்.

ஓங்குக பால் சமத்துவம்! ஒளிர்க பால் இணக்கம்!

இளையபெருமாள் சுகதேவ்

Related Posts

error: Content is protected !!