மகாகவி பாரதியின் இறுதி தின குறிப்பு: செப்டம்பர் 11, 1921!

மகாகவி பாரதியின் இறுதி தின குறிப்பு: செப்டம்பர் 11, 1921!

செப்டம்பர் 11, 1921 அன்று, உலகிற்குத் தன் கவிதைகளால் புதுமைச் சுடரை ஏற்றிய மகாகவி சுப்ரமணிய பாரதி, தனது பூத உடலை நீத்தார். ‘யுகங்கள் கடந்தாலும் அழியாத’ அவனது சிந்தனைகள் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருந்தாலும், அந்த அக்னிப் பிழம்பு தனது உடல் பயணத்தை முடித்துக் கொண்ட நாள் அது.

பாரதியாரின் வாழ்வின் கடைசி அத்தியாயம் எதிர்பாராதவிதமாக, நோய்வாய்ப்பட்ட நிலையில் தொடங்கியது. 1921 செப்டம்பர் முதல் தேதியிலிருந்து அவருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அது விரைவில் இரத்தக்கடுப்பாக மாறியது. உடல் பலவீனமடைந்த போதிலும், தேசத்தின் மீதும், சமூகத்தின் மீதும் அவர் கொண்டிருந்த அக்கறை சற்றும் குறையவில்லை. இறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு கூட, அவர் ‘அமானுல்லா கானைப் பற்றி ஒரு வியாசம்’ எழுத வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தது, அவரது இறுதி மூச்சு வரை கவிதையிலும், தேச சிந்தனையிலும் அவர் வாழ்ந்ததை உணர்த்துகிறது.

கடைசி நிமிடங்கள்

1921 செப்டம்பர் 11ஆம் தேதி இரவு, பாரதியாரின் நண்பர்கள் நீலகண்ட பிரம்மச்சாரி, நெல்லையப்பர் போன்றோர் கவலையுடன் அவருடன் விழித்திருந்தனர். எமனுடன் பாரதி போராடிக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்த அவர்கள், விடிய விடிய அவரைக் கவனித்துக் கொண்டனர். இரவு சுமார் 1:30 மணிக்கு, அந்த தேசக்கவியின் மூச்சு அடங்கியது. ‘காலா, உன்னை நான் சிறு புல்லென மதிக்கிறேன்’ என்று துணிச்சலுடன் பாடிய பாரதியார், காலனின் கைகளுக்கு இரையானார். உலகிற்கு அமரத்துவத்தைப் போதித்த கவிஞரின் மரணம், நண்பர்களைத் துயரத்தில் ஆழ்த்தியது.

இறுதி ஊர்வலமும் அக்னி ஆகுதியும்

பொழுது விடிந்ததும், பாரதியாரின் மரணச் செய்தி நண்பர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. துரைசாமி ஐயர், ஹரிஹர சர்மா, வி. சக்கரைச் செட்டி, சுரேந்திரநாத் ஆர்யா உட்பட பல நண்பர்கள் ஓடிவந்தனர். பாரதி குடும்பத்திற்கு எப்போதும் உறுதுணையாக இருந்த துரைசாமி ஐயரே, இறுதிச் சடங்குகளுக்கும் உதவிகள் புரிந்தார்.

காலை எட்டு மணியளவில், பாரதியாரின் திருவுடல் திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஹரிஹர சர்மா, லஷ்மண ஐயர், குவளை கிருஷ்ணமாச்சாரியார், சுரேந்திரநாத் ஆர்யா போன்ற சில நண்பர்கள் அவரது உடலைச் சுமந்து செல்லும் பாக்கியத்தைப் பெற்றனர். பாரதியாரின் உடல் மிகச் சிறியது; அதன் எடை சுமார் 100 பவுண்டுகளுக்கும் குறைவாகவே இருந்தது.

அன்று, உலகம் இன்று கொண்டாடும் அந்தக் கவிச் சக்கரவர்த்தியின் இறுதிப் பயணத்தில், மயானத்திற்குச் சென்றவர்களின் எண்ணிக்கை சுமார் இருபது பேருக்கும் குறைவாகவே இருந்தது.

இறுதிச் சடங்குகளின் போது, பாரதியாருக்கு ஆண் பிள்ளை இல்லாததால், யார் கொள்ளி இடுவது என்ற கேள்வி எழுந்தது. மூடநம்பிக்கைகளில் துளியும் நம்பிக்கை இல்லாத நீலகண்ட பிரம்மச்சாரி, தான் கொள்ளியிட மறுத்துவிட்டார். முடிவில், பாரதியாரின் தூரத்து உறவினரான ஹரிஹர சர்மா கர்மங்களைச் செய்தார். அக்னிக்கு ஒப்படைக்கப்படுவதற்கு முன், நண்பர் சுரேந்திரநாத் ஆர்யா ஒரு சிறிய உரை நிகழ்த்தினார்.

1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தோன்றிய அந்த ஞானி, 1921 செப்டம்பர் 12ஆம் தேதி அதிகாலை 1:30 மணிக்கு தனது 38வது வயதில் இந்த மண்ணை விட்டுப் பிரிந்தார். அவருக்குச் சரியாக 38 வயதும் 9 மாதங்களுமே ஆகியிருந்தது. ஒரு மகாபுருஷன் தனது புகழுடலை அடைந்ததை, அவர் வாழ்ந்த காலத்து உலகம் முழுமையாக உணரவில்லை. நண்பர்களும், சில அறிஞர்களும் மட்டுமே அந்த மாமனிதனின் உண்மையான மதிப்பைப் புரிந்திருந்தனர்.

பாரதியார் உடல் ரீதியாக நம்மை விட்டுப் பிரிந்திருந்தாலும், அவர் விதைத்துச் சென்ற புரட்சிகரமான சிந்தனைகளும், கவிதை வரிகளும் காலத்தால் அழியாதவை. இன்றும் நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழ்செல்வி

Related Posts

error: Content is protected !!