மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து-மத்திய அரசு அறிவிப்பு!

மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து-மத்திய அரசு அறிவிப்பு!

துரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி அரிட்டாபட்டி, வள்ளாலபட்டி, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பகுதியில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் டங்ஸ்டன் கனிமம் எடுக்க ஒன்றிய அரசு அனுமதித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

டங்ஸ்டன் திட்டத்தால், பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமான அரிட்டாபட்டி முழுமையாக அழியும் என பொதுமக்கள் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.நேற்றைய தினம் கூட, டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் நாளை (அதாவது இன்று) மிக மகிழ்ச்சியான செய்தி ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது என்று அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி, இன்று டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்வதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பாரம்பரிய உரிமைகளை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று, டங்ஸ்டன் ஏலம் கைவிடப்படுவதாக கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். முன்னதாக, டங்ஸ்டன் சுரங்க ஏலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த ஏலத்தை நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்தப் பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியில் வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்து அறிவிப்பை அரிட்டாப்பட்டி மக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!