கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புத் துளிகள்!

கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புத் துளிகள்!

டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 06.11.2025 அன்று நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குனர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசிய விபரம் இதோ:

நடிகை ஸ்ரீதா ராவ் பேசும்போது, 

என்னுடைய கனவு நனவானதில் மகிழ்ச்சி. இயக்குனர் பிரபு சாலமன் சாரிடம் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. காட்டில் படப் பிடிப்பு நடத்தும் போது வெளிச்சம் இருக்காது. கைபேசியில் நெட்வொர்க் இருக்காது. இதுபோன்ற பல பிரச்னைகளுக்கு இடையில் படத்தில் பணியாற்றியிருக்கிறோம். நாயகன் மதி மிகவும் உறுதுணையாக இருந்தார். சுகுமாரின் ஒளிப்பதிவைப் பார்க்கும்போது அழகான கனவு போல இருக்கும். லிங்குசாமி , போஸ் மற்றும் அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் மதி பேசும்போது, 

இது என்னுடைய முதல் மேடை. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் என்னை நாயகனாக அறிமுகப்படுத்திய ஜெயந்தி லால் காடாவுக்கு நன்றி. பிரபு சாலமன் படத்தின் நாயகனாக, அவருடைய பூமியாக நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. அவர் கூறியதை கேட்டு நன்றாக நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இங்கு வந்திருக்கும் இயக்குனர் அஸ்வின், நிதிலன் , பிருந்தா சாரதி , சரண் , ஜெகன், விஜய் பாலாஜி , என் நண்பன் உன்னி அனைவருக்கும் நன்றி. என்னை இப்படத்திற்கு அழைத்து வந்தது லிங்குசாமி தான். சினிமாத் துறைக்கு என்னை அழைத்து வந்தது லிங்குசாமி மற்றும் போஸ் தான். சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பே நிவாஸ் கே பிரசன்னாவின் இசையை கேட்டிருக்கிறேன். அவருடைய இசையில் இப்படம் அமைந்திருக்கிறது. பொத்தி பொத்தி பாடலை கேட்ட அனைவரும் நன்றாக இருக்கிறது என்றார்கள். பைசன் படம் போல இப்படமும் வெற்றியடையும் என்று நம்புகிறேன். எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் சரண்யாவிற்கு மிக்க நன்றி என்றார்.

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பேசும்போது, 

என்னை கதாநாயகன் என்று கூறுகிறார்கள். ஆனால், இசையில் நான் ஆன்மாவோடு கலந்து இன்னும் ஆழமாக செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இதெல்லாம் நடப்பதற்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது பிரபு சாலமன் சார் தான். 2020 கொரோனா காலத்தில் சென்னையில் சாலையில் யாரும் இருக்க மாட்டார்கள். காலையிலேயே வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக் கொண்டு போய் விடுவோம். ஒரு நாளைக்கு 2 வேளை தான் சாப்பாடு. ஒவ்வொரு காட்சியாக ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொண்டே இருப்போம். இப்படம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதற்கு முன் வந்த கும்கி-யில் இமான் கூட்டணியில் மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. அந்த படத்தில் இருந்து தான் இப்படத்திற்கான ஆன்மாவை எடுத்துக் கொண்டேன். ஆனால், என்னுடைய தனித்தன்மையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கு நன்றி. நாயகன் மதி நேரத்தை மிகச் சரியாக கையாள்வதில் ஒழுக்கத்தை பார்த்தேன். 7 மணி என்றால், 7.01 மணிக்கோ, 6.59 மணிக்கோ வரமாட்டார். சரியாக 7 மணிக்கு தான் வருவார். இந்த வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய சக்தியாக நினைக்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் ஜெயந்திலால் காடா பேசும்போது, 

கும்கி-2 பட தலைப்பை பென் ஸ்டூடியோஸ்-க்கு கொடுத்ததற்காக லிங்குசாமிக்கும் போஸூக்கும் நன்றி. இந்த சிறிய படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்து இங்கு வந்திருக்கும் மிகப்பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி. கும்கி-2 படத்தை பார்த்தேன். எனக்கு பிடித்திருக்கிறது. காட்டில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் சிரமம். ஆனால், அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக மதி மிகவும் போராடி நடித்திருக்கிறார். அவர் தமிழ் சினிமாவின் ஹ்ரித்திக் ரோஷன்இசைக்கு மொழி கிடையாது. கும்கி முதல் படத்தில் இசை நன்றாக இருந்தது. அதுபோல, கும்கி-2 படத்தில் நிவாஸ் கே பிரசன்னாவின் இசை மிக நன்றாக இருக்கிறது என்றார்.

இயக்குனர் பிரபு சாலமன் பேசும்போது, 

என்னுடைய நண்பர்கள், அனைத்து தயாரிப்பாளர்கள், குடும்ப உறவினர்கள் என என்னை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள். இப்படத்திற்காக நாங்கள் கடந்து வந்த பாதைகள், பட்ட பாடுகள் சொல்லி முடியாது. இதற்காக என்னுடன் உழைத்த என்னுடைய தொழில்நுட்ப கலைஞர்கள் எடிட்டர் புவன், கலை இயக்குனர் தென்னரசு, நான் நினைப்பதை எடுத்துக் கொடுக்கும் ஒளிப்பதிவாளர் சுகுமார் கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். மதி, ஆன்ட்ரோ, ஷ்ரதா, அர்ஜுன் தாஸ் மற்றும் நிறைய நடிகர்கள் பங்கெடுத்திருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல. நெல்லையம்புதி என்ற இடத்தில் படப்பிடிப்பிற்காக காட்டிற்குள் ஜீப்பில் செல்ல 4 முதல் 5 மணி நேரங்கள் ஆகும். முதன்முதலில் லோகேஷன் பார்க்க போகும்போது உடலில் உள்ள உள்உறுப்புகள் அனைத்து குலுங்கி போனது. அந்த இடத்தில் மின்சாரம் இல்லாமல், மொபைல் நெட்வொர்க் இல்லாமல் தான் படப்பிடிப்பு நடத்தினோம். பழைய பிரிட்டிஷ் விருந்தினர் வீடு. ஒரு டார்மென்ட்ரிகுள்ள குளிரில் முழு படக்குழுவினரும் மிகவும் சிரமப்பட்டார்கள். அங்கிருக்கும் உன்னி கடித்து பலருக்கும் தோல் பிரச்னை வந்து அவஸ்தைப்பட்டார்கள்.

இப்படம் நீளமான பயணம். 2018-ல் தொடங்கி, 2019-ல் முடித்துவிட்டு டிசம்பரில் போட்டு காட்டினோம். ஆனால் 2020-2021ல் ஊரடங்கு. கொரோனா வந்து அனைத்தையும் புரட்டி போட்டுவிட்டது. ஆனால், இதற்கெல்லாம் மிகவும் உறுதுணையாக இருந்தது லிங்குசாமி மற்றும் ஜெயந்திலால் காடா தான்.முதல் ரீல் ஹார்ட் டிஸ்க் பெங்களுருவில் இருக்கும். அடுத்த ரீல் எந்த இன்ஜினியரிடம் இருக்கிறது என்று தெரியாது. அதன் பிறகு 2023ஆம் ஆண்டு இப்படத்திற்கான் அடுத்தகட்ட வேலைகளை தொடங்கினோம். எனக்கு எப்போதும் வேலை கச்சிதமாக இருக்க வேண்டும். அதற்காக நான் நிறைய சண்டை போட வேண்டியிருந்தது. தயாரிப்பாளருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது. இத்தனை ஆண்டுகாலம் நீண்ட பொறுமை காத்துள்ளார்.

என்னுடைய பிள்ளைகளான அஸ்வின், நிதிலன், இயக்குனர் பிருந்தா சாரதி, ஜெகன், சரண் ஆகியோர் இங்கு என்னை வாழ்த்த வந்திருக்கிறீர்கள், நன்றி. அதேபோல், பாரதி கண்ணன், இயக்குனர் திருச்செல்வம், ஆகாஷ் வந்திருக்கிறார்கள். மேலும், இப்படத்தில் பணியாற்றிய இருவர் கொரோனா காலத்தில் இறந்து விட்டார்கள்.

டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் 11 ஆஸ்காரை கையில் வைத்துக் கொண்டு இதையெல்லாம் இசையமைப்பாளருக்கு அளிக்கிறேன் என்றார். ஏனென்றால், இந்த கப்பலை நான் கட்டினேன், ஆனால் அவர் தான் உயிர் கொடுத்தார் என்றார். அதுபோல, அனைவரும் தங்களால் இயன்ற அளவிற்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், நிவாஸ் கே பிரசன்னாவிற்கு ஆன்மாவை கொடுத்திருக்கிறார். படம் பார்க்கும் போது பல இடங்களில் அவருடைய இசை கதையை மீண்டும் எழுதியிருப்பது தெரியும். நிவாஸ் கே பிரசன்னாவை நான் மிகவும் தொந்தரவு செய்திருக்கிறேன். அவர் துயரத்தை நான் பார்த்திருக்கிறேன். இருப்பினும், படம் நன்றாக வருவதற்காகத்தான் என்று அவரும் புரிந்துகொண்டார். இது அவர் ஜொலிப்பதற்கான நேரம் என்றார்.

error: Content is protected !!