திரை விமர்சனம்: கருப்பு பல்சர்-ஒரு ‘ஆவரேஜ்’ ரைடு!
தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய் படங்கள் வந்தாலும், ஒரு இருசக்கர வாகனத்தையே (பைக்) மையமாக வைத்து ‘ஹாரர்’ கதையைச் சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ். இயக்குநர் எம். ராஜேஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம், படத்தின் முதல் பாதியில் கலகலப்புக்குக் கை கொடுத்துள்ளது.
கதைக்களம்: ஒரு பொய்யும்… பின்னாலேயே வரும் அமானுஷ்யமும்!
சென்னையில் வாட்டர் பியூரிஃபையர் கம்பெனி நடத்தும் நாயகன் தினேஷ், மேட்ரிமோனி மூலம் அறிமுகமான நாயகி ரேஷ்மா வெங்கடேஷைக் காதலிக்கிறார். தன்னிடம் ‘கருப்பு பல்சர்’ இருப்பதாக ஒரு சின்னப் பொய் சொல்ல, அந்தப் பொய்யைக் காப்பாற்ற ஒரு பழைய பல்சர் பைக்கை வாங்குகிறார். ஆனால், அந்தப் பைக் வீட்டிற்கு வந்ததிலிருந்து தினேஷுக்கு ஏகப்பட்ட அமானுஷ்யத் தொல்லைகள்! அந்த பைக்கின் நிஜமான உரிமையாளர் யார்? அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? என்பதே இந்தப் படத்தின் கிளைமாக்ஸ்.
தினேஷ்: இளமையான ‘ரைடு’!
‘அட்டகத்தி’ தினேஷ் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனது வயதிற்கு ஏற்ற மிக இளமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘லப்பர் பந்து’ அளவிற்கு ஸ்கோர் செய்ய வாய்ப்பில்லை என்றாலும், தனது இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார். ஒரு ஜல்லிக்கட்டு வீரராக அவர் வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு கூடுதல் ‘போனஸ்’.
நட்சத்திரப் பட்டாளம்: யார் டாப்?
படத்தில் ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா என இரண்டு நாயகிகள். இதில் மதுனிகாவின் கதாபாத்திரம் சற்றே அழுத்தமாகப் படைக்கப்பட்டுள்ளது. மன்சூர் அலிகான், சரவண சுப்பையா, கலையரசன் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி தியேட்டரில் சிரிப்பு வெடிகளைப் போடுவது Prankster ராகுல் தான். குறிப்பாக இரண்டாம் பாதியில் அவர் தனது மனைவியுடன் பைக்கில் செல்லும் காட்சிகள் ‘கலகல’ ரகம்!
தொழில்நுட்பம்: பட்ஜெட்டுக்குள் பக்கா!
பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு படத்தின் பட்ஜெட்டுக்கு மிக நேர்மையாகப் பணியாற்றியிருக்கிறது. அமானுஷ்யக் காட்சிகளில் கேமரா கோணங்கள் மிரட்டல். அறிமுக இசையமைப்பாளர் இன்பா, பாடல்களையும் எழுதித் தன் அடையாளத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
இயக்கம்: கமர்ஷியல் காக்டெய்ல்!
கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் முரளி கிரிஷ் எஸ், ஒரு கமர்ஷியல் பார்முலாவுக்குள் ஹாரர், சஸ்பென்ஸ் மற்றும் ‘சமூக நீதி’ எனப் பல விஷயங்களைக் கலக்க முயன்றிருக்கிறார். முதல் பாதியை மிக ஜாலியாகக் கொண்டு சென்ற இயக்குநர், கடைசி 30 நிமிடங்களில் ஆக்ஷன் மற்றும் அமானுஷ்யத்தின் மூலம் வேகமெடுக்க வைக்கிறார். இருப்பினும், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கறை காட்டியிருந்தால் இந்த ‘கருப்பு பல்சர்’ இன்னும் வேகமாகப் பாய்ந்திருக்கும்.
ஆந்தை ரிப்போர்ட்டர் தீர்ப்பு:
கருப்பு பல்சர் – பிக் அப் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம்!
மதிப்பீடு: 2.25/5


