கண்ணை நம்பாதே – விமர்சனம்!

கண்ணை நம்பாதே – விமர்சனம்!

ரு உதவி செய்யப் போன இடத்தில் நடந்த கொலை, அதை மறைக்க போராடும் நண்பர்கள், இடையில் இவர்களை பிளாக்மெயில் செய்பவன் என பக்காவான பாக்கெட் நாவலை பர்ஃபெக்டாக படமாக்கி அசத்தியுள்ளார் டைரக்டர் மு.மாறன். கதையோட்டத்தின் திரைக்கதையில் சில கேள்விகள் எழுந்தாலும், பெரியதாக உறுத்தவில்லை. காணும் அடுத்தடுத்த காட்சிகள் என்ன என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு சீன்களை கொடுத்து மிரட்டி இருக்கிறார்கள்.

அதாவது பிரைவேட் கம்பெனி ஒன்றில் ஒர்க் செய்யும் உதயநிதி ஸ்டாலின் இவரிம் ரூம் மேட் பிரசன்னா. இருவரும் வெளியே போயிருந்த சூழலில் ஒரு விபத்தில் சிக்கிய பூமிகாவை மீட்டு அவரது வீட்டில் விட்டு விட்டு, அவரின் காரை எடுத்து வருகிறார். அப்போது போதையில் இருக்கும் பிரசன்னா, உதயநிதிக்கு தெரியாமல் மேற்கண்ட காரை எடுத்துக் கொண்டு பூமிகா வீட்டிக்கு போய் பூமிகாவிடம் தவறாக நடந்து கொள்ளும் பிரசன்னா, ஒரு கட்டத்தில் பூமிகாவை கொலை செய்து விடுகிறார். அதை அடுத்து பூமிகாவை அதே கார் டிக்கியில் போட்டு எடுத்து ரூம் வாசலில் நிப்பாட்டி விடுகிறார். இதை எல்லாம் அறியாமல் மறுநாள் காலையில் காரில் பூமிகாவின் சடலத்தை பார்க்கும் உதயநிதி அதிர்ச்சி அடைகிறார். கூடவே அந்த கொலை பழியை உதயநிதி மேல் போடும் பிரசன்னா, சடலத்தை மறைக்க உதயநிதிக்கு உதவி செய்கிறார். அப்போது மேலும் ஒரு விபத்தில் ஒருவர் இறக்க, இரண்டு சடலத்தை வைத்து எப்படி தப்பிப்பது என்று பிரசன்னாவும், உதயநிதியும் திட்டம் போடுகிறார்கள். இதனிடையே இவர்களின் போக்கை தெரிந்துக் கொண்டு மர்ம ஆசாமி ஒருவர் மிரட்டுகிறார். இறுதியில் உதயநிதி, பிரசன்னா இருவரும் கொலை பிரச்சனையில் இருந்து தப்பித்தார்களா? இவர்களை மிரட்டும் மர்ம நபர் யார்? மிரட்ட காரணம் என்ன? என்பதே படத்தின் கதை.

உதயநிதி தனக்கு என்ன வருகிறதோ அதை நிறைவாகச் செய்துள்ளார்.. குறிப்பாக ஓவர் ஆக்டிங் செய்துவிடாமல் எந்த இடத்தில் எவ்வளவு கோபப்பட வேண்டுமோ அவ்வளவு கோபப்பட்டு, எவ்வளவு பதற்றமாக வேண்டுமோ அவ்வளவு பதற்றமாகி நடிக்க முயன்று பாஸ் செய்து விடுகிறார்.. வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார் பிரசன்னா. அதுபோல் ஶ்ரீகாந்த் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து இருக்கிறார். பூமிகா, வசுந்த்ரா எதிர்பார்க்காத சர்ப்ரைஸ். சென்றாயன் துருப்பு சீட்டாகிறார். ஆத்மிகா அழகில் பூரித்து நிற்கிறார். மாரிமுத்து டிவிஸ்ட்டுக்கு பயன்பட்டிருக்கிறார்.\

சித்துகுமார் இசை படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது. கேமராமேன் ஜலந்தர் வாசன் கொட்டும் மழையிலும் இரவு காட்சிகளிலும் அபாரமாக பணியாற்றி ஸ்கோர் செய்திருக்கிறார்.

சில திரில்லர் படங்களின் ப்ளாஷ்பேக் காட்சிகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்காது அல்லது வலுவில்லாத காட்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை ப்ளாஷ்பேக் காட்சிகள் குறை சொல்லும் அளவிற்கு இல்லை. மேலும் படத்தில் இடம்பெறும் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தாமல் அடுத்தடுத்து நகர்ந்து சென்றுவிடுகின்றன. ஆனாலும் நவீனமயமாகி விட்ட சென்னை போன்ற நகரில் போலீசின் மூன்றாம் கண் என்று சொல்லப்படும் சிசிடிவி இருந்தது என்பதை எல்லாம் புறந்தள்ளி விட்டு முன்னரே சொன்னது போல் பாக்கெட் கிரைம் நாவலை படமாகப் பார்க்க வைப்பதில் ஜெயித்து விட்டார்கள் என்றே சொல்லலாம்..!

மொத்தத்தில் கண்ணை நம்பாதே பக்கா டைம்பாஸ் மூவி

மார்க் 3.25/5

error: Content is protected !!