ஜவான் – விமர்சனம்!

ஜவான் – விமர்சனம்!

ட மாநிலங்களில் மருத்துவமனைகளின் நிலைமை எப்படி உள்ளது? ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் குழந்தைகள் உயிரிழப்பு நடந்ததெப்படி? அதே சூழலில் தன் சுய முயற்சியால் குழந்தைகளைக் காப்பாற்ற நினைத்த ஒரு டாக்டரின் நிலைமை என்னவானது என கொஞ்சம் அரசியல். அடுத்து யாருக்கு வாக்களிக்கணும் என்பதையும் சொல்லி ஷங்கரின் இந்தியனையும், முதல்வனையும் தொட்டுக் கொண்டாலும் அட்லீயின் தன் படங்களையே ‘டிரேட் மார்க் காப்பி’ எடுத்து அசத்தி இருக்கிறார். ஆனாலும் ஜவானைப் பார்க்கும் போது மெர்சல், சர்கார், சர்தார், கத்தி, மங்காத்தா, தெறி, Kung Fu Hustle என பல படங்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இதில் ஹீரோ பெயர், விக்ரம். அவரது பணி, ஜெயிலர் என்ற நெனப்பை எல்லாம் புறந்தள்ளிவிட்டு சினிமா ரசிகர்களுக்கு எல்லோருக்கும் பிடிக்கும் சினிமா இது..!

கதை என்னவென்றால் நம் நாட்டி ஜவான் ஷாருக்கான். ஒரு சம்பவத்தால் அவர் தேசத்துரோகி என முத்திரை குத்தப்பட்டு கொல்லப்படுகிறார். அவரின் மனைவியான தீபிகா தன் கணவரைக் கொல்ல வந்தவரைக் கொன்று விட்டு, ஜெயிலுக்கு செல்ல அங்கு அவருக்கு குழந்தைப் பிறக்கிறது. அந்த குழந்தைக்கு அப்பாவின் அருமை பெருமை எல்லாம் சொல்லி, அவன் வளர்ந்து பெரியவனானதும் அப்பா தேசத்துரோகி இல்லை என நிரூபிக்க வேண்டும், நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என சத்தியம் வாங்கிக் கொண்டு இறக்கிறார்.. அதனால் அந்த ஜெயிலிலேயே படித்து போலீசாகவே செலக்டாகி (எப்புட்றா?) பின்னாளில் அந்த ஜெயிலராகவும் ஆகி விடுகிறார். அந்த ஜெயிலில் இருந்து கொண்டே அங்குள்ள பெண் கைதிகளை வைத்துக் கொண்டு அவர் சில பல கடத்தல், பணக்கைமாற்றல் வேலையை செய்கிறார்.. இந்தக் கோல்மால்களை கண்டுப் பிடிக்கும் போலீஸ் ஆபீசராக நயன்தாரா வருகிறார்.. இதனிடையே தன் அப்பாவுக்கு தேசத் துரோகி முத்திரை வாங்கிக் கொடுத்த விஜய் சேதுபதியை பழிவாங்கி அம்மாவுக்கு கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றுவதுதான் இந்த ஜவான் ஸ்கிர்ப்ட்

நாயகன் பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் நயினா விக்ரம் ரத்தோர், மகன் அசாத் ரத்தோர் என்ற டபுள் ரோலில்.அவருக்கே உரிய ஆக்‌ஷன் காட்சிகளிலும் சரி, சென்டிமென்ட் காட்சிகளிலும் சரி, மாஸ் காட்சிகளிலும் சரி நம்மூர் ரஜினி ஸ்டைலில் அதகளப்படுத்தி இருக்கிறார். இவருக்கு பக்கபலமாக நாயகி ரோலில் இண்ட்ரோவே அட்டகாசமாக களமிறங்கி ஸ்கோர் செய்கிறார். அதுவும் குழந்தைக்கு தாயான நயன்தாரா ஷாரூக்கிடம் ‘என் காதலனுடன் லிவ்விங் டுகெதர்’ல இருந்தேன்.குழந்தை உண்டாயிடுச்சு. அதைக் கலைத்தால்தான் திருமணம் என்றார். அப்படியொரு திருமணம் தேவையில்லை என்று விலகிவிட்டேன். இப்போது என் மகளுக்கு அப்பா தேவைப்படுகிறார்..அவளுக்கு உங்களைப் பிடித்து விட்டது. அதனால் எனக்கும் சம்மதம். நீங்கள் விரும்பினால் திருமணம் செய்து கொள்ளலாம்.’ என்று லவ்லியாக ஆனாலும் இலக்கணம் மீறிய கவிதையாக ப்ரபோஸ் செய்து மாஸ் காட்டியிருக்கிறார். காதல் காட்சிகளைக் காட்டிலும் ஆக்‌ஷன் காட்சிகளில் பறந்து பறந்து அடித்திருக்கிறார்.விஜய் சேதுபதி வழக்கம் போல் தனது நவீன சத்யராஜ் பாணியில் அதானி போல் வில்லத்தனம் காட்டி மாஸ் காட்டி இருக்கிறார். அதுவும் கிளைமாக்ஸில் பேசும் வசனங்கள் தூள். யோகிபாபு உள்ளேன் ஐயா என்று அட்டடென்ஸ் கொடுக்க சில நிமிடங்கள் வருகிறார்.. போய் விடுகிறார்.

படத்தின் சீன்கள் ஒவ்வொன்றும் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய அன்னா & இன்னார் படங்களை நினைவுபடுத்தினாலும் தொடக்கம் முதல் எண்ட் கார்ட் வரை ஒரு பக்கா மாஸ் ஹீரோவுக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை சரியான விகிதத்தில் கொடுத்து வழக்கம் போல் பாஸாகி விட்டார் அட்லீ. அதிலும் கோலிவுட் யங் டைரக்டரான அட்லீயின் பாலிவுட் எண்ட்ரியை ஹிட் அடிக்க வைக்க அனிருத்தின் இசை, ஜிகே விஷ்ணுவின் கேமரா, ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு ஆகியோர் கைக் கோர்த்துக் கொண்டு ஜவானைக் கரை சேர்த்திருக்கிறார்கள்..

ஆனால் இடைவேளை வரை பரபரவென்று செல்லும் கதை அதன்பிறகு எங்கே செல்லும் இந்த பாதை என்ற பாடலை நினைவுப்படுத்துகிறது.. தேசத்துரோகி என்று முத்திரைக் குத்தப்பட்டு தூக்கிலிடப்பட்ட பெண்ணின் மகன் ஜெயிலர் ஆகும் அதீத லாஜிக் மீறிய கற்பனை விவசாயிகளின் கடனை ரத்து செய்வதற்காக மெட்ரோ ரயிலைக் கடத்துவது, மருத்துவமனைகளை சரி செய்வதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சரைக் கடத்தி வைத்துக் கொண்டு நாடெங்கும் உள்ள மருத்துவமனைகளை தரப்படுத்துவது என்று கண்ணை திறந்து வைத்துக் கொண்டே கனவு காண வைக்கிறார். மேலும் யூகிக்கும் கதைப் போக்கும் கொஞ்சம் பின்னடைவைத் தருகிறது.

அதே சமயம் முத்தாய்ப்பாக பொதுத்தேர்தல் வர இருக்கும் சூழலில் நம் நாட்டின் தலையாய பிரச்னையான விவசாயிகள் கடன், அரசு மருத்துவமனைகளின் தரம், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும்  விஷ வாயு போன்றவைகளை நினைவூட்டி மக்கள் தங்கள் வாக்குகளை சரியாவர்களை தேர்ந்தெடுக்க பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்லி இருப்பதற்க்காகவே ஒவ்வொருவரும் தியேட்டருக்கும் போய் ஜவானை பார்க்க வேண்டும்.

மார்க் 3/5

error: Content is protected !!