பிரதமர் மோடியை மேரேஜ் செஞ்சுக்கணும்! – டெல்லியில் போராடும் 40 வயது பெண்!
ராஜஸ்தான் ஜெய்பூர் நகரைச் சேர்ந்தவர் ஓம் சாந்தி சர்மா. 40வயதாகும் இவர் டில்லி ஜந்தர் மந்தரில் ஒருகொட்டகை அமைத்து போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் 8ம் தேதியில் இருந்தே தர்ணா செய்து வருகிறார். அவரது கோரிக்கை என்ன தெரியுமா…பிரதமர் மோடியை கல்யாணம் செய்ய வேண்டுமாம். இதைக் கேட்டதும் அனைவருமே சிரி்க்கின்றனர். ஆனால் அவரோ, சிரிக்காதீர்கள்.. என்னை பைத்தியம் என்று நினைக்கிறீர்களா… எனது மனநிலை சரியாகத்தான் இருக்கிறது என்கிறார்.
மேலும் அவர் கூறியதாவது:
பிரதமர் மோடிக்கு சேவகம் செய்ய விரும்புகிறேன். அவர் தனிமையில்தான் இருக்கிறார். அவருக்கு ஏகப்பட்ட பணிகள் காத்திருக்கின்றன. நானும் திருமணம் ஆனவர் தான். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். ஆனால் இப்போது எந்த உறவும் இன்றி தனிமையில்தான் இருக்கிறேன். பல ஆண்டுகளாகவே தனிமரமாக நிற்கிறேன். என்னை மறுமணம்ட செய்ய பலரும் விரும்பினார்கள். ஆனால் நான் மறுத்து விட்டேன். இப்போது பிரதமர் மோடிக்கு சேவகம் செய்வதற்காக அவரை மணக்க வேண்டும் என்பதற்காகவே இங்கிருக்கிறேன். அவரை சந்திக்க என்னை அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரியும். ஆனால் அவருக்கு உதவி தேவைப்படுகிறது.
என்னைப் போல அவரும் தனிமையில் தான் இருக்கிறார். அவரை நான் மதிக்கிறேன். மூத்தவர்களை மதிக்க வேண்டும் என்று இளம் பிராயத்தில் இருந்தே சொல்லிச் சொல்லியே வளர்ப்பது நமதுகலாச்சாரம். அந்த உணர்வில்தான் அவருக்கு பணிவிடை செய்ய விரும்புகிறேன். எனக்கு ஜெய்பூரில்நிறைய நிலங்கள் உள்ளன. அவற்றை விற்று மோடிக்காக சில பரிசுகள் வாங்க திட்டமிட்டுள்ளேன். என்னை வந்து மோடி சந்திக்கும் வரை நான் இங்கு தான் இருப்பேன். -இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது ஜந்தர் மந்தரில் உள்ள பொது கழிவறையையே பயன்படுத்துகிறார். டில்லியில் உள்ள குருத்துவாராக்கள் மற்றும் கோயில்களில் சாப்பிடுகிறார். இப்போது இங்கு யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம், தடை விதி்த்துள்ளது. அதனால் என்னை போலீசார் அகற்றினால் என்ன செய்வது…எங்கே போவது என்றே தெரியவில்லை என்கிறார் சாந்தி.