தமிழ் குரல் / AI Voice
உலக அளவில் புகழ் பெற்ற 12-ம் நூற்றாண்டை சேர்ந்த ஜெகநாதர் கோயில், ஒரிசா மாநிலம் பூரி நகரில் உள்ளது. இந்த ஆலயத்தில் ஜெகந்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரை தேவி ஆகிய மூவரும் ஒரே கருவறையில் இருந்து அருள் பாலிக்கின்றனர். இவர்கள் திருமேனி மரத்தால் ஆனது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த மூன்று திருமேனிகளும் உரிய சடங்குகளுடன் புதியதாக மரத்தில் வடிக்கப்பட்டு ஆலயத்தில் வைக்கப்படும்.
இந்த ஆலயத்தில் பலச் சிறப்புகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
இந்த ஆலயத்தின் கொடி, காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.
கோவில் இருக்கும் பூரி என்ற ஊரில் எந்த இடத்தில், எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும், கோவிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.
பொதுவாக காற்றானது, காலையில் இருந்து மாலை வரையான நேரங்களில், கடலில் இருந்து நிலத்தை நோக்கியும், மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும்.
இந்தக் கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல், பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்குத் தெரிவதில்லை.
ஆலயத்தின் மேல் பகுதியில் விமானங்களோ அல்லது பறவைகளோ பறப்பதில்லை.
இந்த கோயிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு, வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி, இருபது லட்சமானாலும் சரி, சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதுமில்லை. மீந்து போய் வீணாவதும் இல்லை என்கிறார்கள்.
இந்த ஆலய சமையலறையில் ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு, விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள். அப்படி சமைக்கும் போது, அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும்.
இப்பேர்பட்ட இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஒன்பதுநாள் தேரோட்ட திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தேரோட்ட திருவிழா இன்று பிற்பகல் தொடங்கியது. இந்த விழாவில், உலகம் முழுவதும் இருந்து பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஒரிசாவிலேயே மிகவும் பெரிய திருவிழா என்றால் அது இந்த ரத யாத்திரை தான். இந்த ரத யாத்திரை உலகில் மிகவும் பிரபலமான, பலரும் பங்கேற்க நினைக்கும் ஒரு பெரிய யாத்திரையாகும். இந்த ஜெகநாதர் கோயிலில் இருந்து இழுக்கப்படும் தேரானது குண்டிச்சா கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் ரத யாத்திரையானது நடைபெறும். இந்த ரத யாத்திரையில் ஜெகநாதரான கிருஷ்ணர், அவரது சகோதரர் பாலபத்ரர் மற்றும் சகோதரி சுபத்திரா தேவியுடன் தேரில் வீதி உலா செல்வார்.
அதாவது, இந்த ரத யாத்திரையின் மூன்று தேர்கள் இழுக்கப்படும். இதில் மூவருக்கும் ஒவ்வொரு வண்ணங்களில் தேர்களானது பூக்களால் அலங்கரிக்கப்படும். அவை ஜெகநாதர் தேரானது மஞ்சள் சிவப்பு நிறத்திலும், பாலபத்ரர் தேரானது பச்சை சிவப்பு நிறத்திலும் மற்றும் சுபத்திரா தேவியின் தேரானது சிவப்பு கறுப்பு நிறத்திலும் இருக்கும்.
ஏழு நாட்கள் நடைபெறும் இந்த தேர் திருவிழாவில், கிருஷ்ணர் அவரது சகோதர, சகோதரியுடன் வீதிகளில் வலம் வருவார். மேலும் தேர்களில் சிலைகளானது வைக்கப்பட்டப் பின்னர், தேர் செல்லும் வழியானது தங்க துடைப்பத்தால் பெருக்கப்பட்டு, சந்தன நீரை செல்லும் வழிகளில் தெளித்து, பின்னரே ரதங்களை இழுப்பார்கள்.
தேராட்ட திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகந்நாதர் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தார். மேலும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய மற்றொரு தேரில் அவருடைய சகோதரர் பாலபத்ரர் அலங்கரிக்கப்பட்டிருந்தார். 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கருப்பு நிறத்தேரில் சுபத்ரா தேவி அலங்கரிக்கப்பட்டிருந்தார்.
கோயிலில் உள்ள சிங்கவாசல் அருகே மூன்று தேர்களும் தயார் நிலையில் இருந்தன. முன்னதாக, ஜெகநாதர், பாலபத்ரர், சுபத்ரா தேவி ஆகிய கடவுளர்களின் சிலைகளை கோவில் ஊழியர்கள் தோளில் சுமந்து வந்து தேர்களில் வைத்தனர். அப்போது, சங்கொலி முழங்க பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். இவ்விழாவில் ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
பிற்பகல் 3 மணி அளவில் தேரோட்ட விழா தொடங்கியது. முதலில் பாலபத்ரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி உள்ளிட்ட மற்ற சிறு தேர்களும் புறப்பட்டன. கடைசியாக ஜெகநாதர் தேர் புறப்பட்டு செல்லும்.
தேர் திருவிழாவையொட்டி ஊர்வலப் பாதையிலும் பூரி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. போலீசாருடன் மத்திய ஆயுதப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குண்டிச்சா கோவில் நோக்கி செல்லும் இந்த தேரோட்டத்தின் ஒரு அங்கமாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகநாதர் ஓய்வு எடுப்பது வழக்கம். அதன் பிறகு, தேரோட்டம் தொடங்கி வருகிற 22-ந்தேதி அன்று நிறைவடையும்



