இன்று சர்வதேச கழுகுகள் தினம்!
இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் வனப்பகுதியில் 1,200-க்கும் மேற்பட்ட அரியவகை பறவையினங்கள் உள்ளன. இவற்றில் பிணம் தின்னி கழுகுகள் மிக முக்கியமானது. இந்தியாவில் ஒன்பது வகை பிணம் தின்னி கழுகுகள் உள்ளன. தமிழகத்தில் வெண் முதுகு பிணம் தின்னி, இந்தியன் பிணம் தின்னி, செந்தனை பிணம் தின்னி, எகிப்திய பிணம் தின்னி ஆகிய நான்கு வகை பறவைகள் மட்டுமே உள்ளன. இவற்றில் தற்போது எகிப்திய பிணம் தின்னியை தவிர மற்ற இனங்கள் அழிந்து வருகின்றன. ஒரு காலத்தில், தமிழகத்தில் பரவலாகக் காணப்பட்ட பிணம் தின்னி பறவை இனங்கள், தற்போது சத்தியமங்கலம், மோயார் ஆற்றுப்படுகை, ஊட்டி, முதுமலைக் காடுகளில் மட்டுமே அரிதாகக் காணப்படுகின்றன. தமிழகத்தில் பிணம் தின்னி கழுகுகளின் எண்ணிக்கை தற்போது 250 முதல் 300 வரை மட்டுமே உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

‘டைகுளோபினாக்’ எனும் கால்நடை மருந்துதான், பிணம் தின்னி கழுகுகள் எண்ணிக்கை குறைவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. ‘டைகுளோபினாக்’ மருந்தை சாப்பிட்ட கால்நடைகள், இறந்தபின்பும் அதன் உடலில் இந்த மருந்து தங்கிவிடும். இந்த கால்நடைகளை சாப்பிடும் கழுகுகள் இறந்துவிடும். இந்த மருந்து 1990-ம் ஆண்டுதான் இந்தியாவில் அறிமுகப்படுத் தப்பட்டது. எனவே, அந்த ஆண்டு முதல் இந்த கழுகுகள் இனம் அழியத் தொடங்கியது. இந்த பிணம் தின்னி கழுகுகளை பார்த்தால் ‘98432 11772’ என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
கழுகு நமக்கு கற்று தரும் பாடத்தை அறிந்து கொள்வோமா?
கழுகுகளை, வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்தியும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே இருந்து விட்டால் வலிமையாகவும், தந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை, குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப்பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பு வரை வந்து நிற்கின்றது. அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.
அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்கவிட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.
என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் கூட்டிலிருந்து வெளியே தள்ளிவிடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது.
குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது.
இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும் காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக ஆனந்தமாக தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.
கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்தச் சுதந்திரத்தையும் ஆனந்தத்தையும் தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது. பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது.
ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும் பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும் அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான். கப்பல் துறைமுகத்தில் இருப்பது முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை.கழுகிற்கும் கப்பலுக்கும் மட்டுமல்ல; மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.
தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து “நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது.என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்” என்று நினைக்கு மானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.ஆனால் அந்த தவறை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை.


