சர்வதேச அருங்காட்சியக நாள்!

சர்வதேச அருங்காட்சியக நாள்!

லக அருங்காட்சியக நாள் (International Museum Day,) ஆண்டுதோறும் மே 18 ஆம் நாள் பன்னாட்டு அளவில் கொண்டாடப் படுகின்றது. பன்னாட்டுப் பேரவையினால் (International Council of Museums, ICOM) ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படும் இந்நாள் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் கொண்டாடப்படுகின்றது. அருங்காட்சியக வல்லுனர்கள் பொதுமக்களை சந்திக்கவும், அருங்காட்சியகங்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளை விளக்கவும் சமூக வளர்ச்சியில் அருங்காட்சியகங்களின் பங்களிப்புகள் குறித்த விழிப்புணர்வைக் கொண்டு வரவும் பன்னாட்டு அருங்காட்சியக நாள் உதவுகின்றது.

வரலாற்றை கற்காத சமூ கம் செரிந்த வளர்ச்சியை பெறமுடியாது. வரலாற்றை அறிய பல வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் கால நிகழ்வாய் நடந்த ஒன்றின் ஆவணங்களை காட்சிப்படுத்துவது. அந்த அரும்பணியை ‘அருங்காட்சியகங்கள்’ செய்து வருகின்றன. அதன் அடிப்படையில் வரலாற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற பொருட்களை சேகரிக்கும் இடங்கள் அருங்காட்சியகங்கள் என அழைக்கப்படுகின்றன. அரும் பொருட்களைச் சேகரித்தல், அவற்றைக் காட்சிக்கு வைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக உள்ள கட்டிடங்கள் அல்லது நிறுவனங்கள் அருங் காட்சியகங்களாகும். மக்கள், அவர்கள் வாழ்ந்த சூழல் தொடர்பான சான்றுகளை, பொழுதுபோக்கு, கல்வி, ஆய்வு போன்ற நோக்கங்களுக்காகச் சேகரித்து, அவற்றைப் பாதுகாக்கும் பணியை அருங்காட்சியகங்கள் செய்கின்றன. மேலும் அப்பொருட்கள் பற்றிய ஆய்வுகளை நடத்தியும், அதனை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியும், காட்சிப்படுத்தியும் மக்களுக்கு பெருமளவில் உதவுகின்றன. சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், அதன் பணிக்கும் இயங்குகின்ற ஒரு நிலையான நிறுவனமாக அருங்காட்சியகங்கள் திகழ்கின்றன.

இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் வருங்காலத்தில், ஒரு ஆழிப்பேரலையோ …வேறு கிரகங்களின் மோதலோ, நில அதிர்வுகளோ வந்து, இந்த பூமி பந்து ஓர் அழிவை சந்தித்தால் இம் மண்ணில் மனிதர்கள் வாழ்ந்து போனதற்கு அடையாளமாக என்ன மிச்சம் இருக்கும் ? இவ்வுலகில் உபயோகப்படுத்தும் பேப்பர், கம்ப்யூட்டர் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வழியாக நாம் சேகரித்து வைக்கும் பதிவுகளும், வரலாற்று புகைப் படங்களும் அறிவியல் தகவல்களும் ஏதாவது மிஞ்சுமா?

இதைக்கொண்டு பின்னர் வரும் உயிரினம் கடந்த கால உலக மக்களின் வாழ்வியலை தெரிந்து கொள்ள முடியுமா? முடியாது… கம்ப்யூட்டருக்குள் பதிவான அனைத்து தகவல்களும் அழிவைச் சந்திக்கும். ஆனால் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் மூதாதையர்களின் வாழ்க்கை மட்டும் அழியாமல் எஞ்சி நிற்கும். அதற்கு முக்கிய காரணம், கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்கள், மூலமாக வரலாற்றை பதிய வைத்துள்ள அவைகளை, அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைத்திருப்பதே ஆகும்.

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி என்பது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. ஆதி கால மனிதர்கள் தங்களது வாழ்க்கையை முதன் முதலாக பதிய வைத்தது குகை ஓவியங்கள் வழியாகத்தான். அதன் பின்னர் மொழி கண்டறியப்பட்ட பின் தங்களது மூதாதையர்களின் வாழ்வை தொன்மக் கதைகள் மற்றும் பாடல்கள் வழியாக பாதுகாத்து வந்தனர். இன்றில் இருந்து 6 ஆயிரம் வருடங்களுக்கு முன் எழுத்து வடிவில் தங்களது எண்ணங்களை களிமண் பலகைகளில் பதிந்தனர். ஆனால் அதன் பின் நடந்த இயற்கை மாற்றங்களினால் அந்த ஆரம்ப கால நாகரிகங்கள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்து போயின.

பின்னர் உலகமெங்கும் உருவான பல்வேறு நாகரிகங்களில், அரச அமைப்புகளும், மதங்களும், சமய தத்துவங்களும் எழுத்து, மொழி கலை இலக்கியம் கட்டிடம் வழியாக பல்வேறு தளங்களில் வீறு கொண்டு படைப்புகளை படைத்தனர். ஆனால் தங்கள் மதத்தை பரப்புவதற்காவும், நாடு பிடிக்கின்ற ஆசையிலும் நடந்த போர்களினால், உலகமெங்கிலும் இருந்த பண்டைய வரலாற்று பதிவுகள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டன. மிஞ்சியவை மக்களால் பாதுகாக்கப்படாமல் மண்ணோடு மண்ணாயின. கி.பி. 1600-க்கு பின் உலகமெங்கும் தங்களது ஆளுமைக்குள் கொண்டு வந்தவர்களில் பிரிட்டீஷ், மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் முக்கியமானவர்கள். இவர்களும் ஆரம்ப காலங்களில் தாங்கள் பிடித்த நாடுகளில் இருந்த வரலாற்று சின்னங்களை வணிக நோக்கில் கொள்ளையடித்து சென்றனர். ஆனால் அதே காலத்தில் உலகளவில் மாபெரும் மாற்றங்கள் நடந்தது. அதற்கு முக்கியமான காரணம் அறிவியல். உலகத்தின் படைப்பு உயிர்களின் தோற்றம், மனிதர்களின் பரிணாம வளர்ச்சி பற்றி உயிர்கள் தோற்றம் பற்றி அறிவியல் ஆராய ஆரம்பித்தவுடன், அனைவருக்கும் வரலாறு பற்றிய தேடலும் விழிப்புணர்வும் வந்தது. அதன் தொடர்ச்சியாக தாங்கள் கைப்பற்றிய நாடுகளில் இருந்த பழங்கால பொருட்களை தங்களது நாடுகளுக்கு கொண்டு சென்று பாதுகாக்க ஆரம்பித்தனர். அதற்காக பிரிட்டீஷ் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் முதன் முதலாக அருங்காட்சியகத்தை உருவாக்கினார்கள். அத்தோடு தாங்கள் ஆட்சி செய்யும் நாடுகளிலும் அருங்காட்சியகத்தை உருவாக்கி வரலாற்று நினைவுகளை பாதுகாக்க ஆரம்பித்தனர்.

அந்த வகையில் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம், லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகம். அதுபோல இந்தியாவில் மிகப்பெரிய அருங்காட்சியகம் கொல்கத்தாவில் உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகம், இரண்டாவது மிகப்பழமையான அருங்காட்சியகமாக விளங்குகிறது. 1851-ல் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம், சுமார் 6.25 ஏக்கர் (66,000 சதுர மீட்டர்) பரப்பளவில், ஆறு கட்டடங்களுடனும் 46 காட்சிக் கூடங்களுடனும் விளங்குகிறது. இதில் தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் என ஆறு துறைகள் உள்ளன.

சர்வதேச அருங்காட்சியக நாளின் வரலாறு

1977 ஆம் ஆண்டில், அருங்காட்சியகங்களின் பன்னாட்டுப் பேரவை உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்கள், சமூகத்தில் தங்கள் பங்கை ஊக்குவிக்கும் ஒரு நாளை உருவாக்கத் தொடங்கின. அருங்காட்சியகங்களைப் பார்வையிடுவது மற்றும் அதனைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை மக்களுக்குக் கற்பித்தன. கல்வியின் ஆதாரமாகவும், நமது கடந்த காலத்துடனும் வரலாற்றுடனும் நம்மை இணைக்கும் ஒரு கருவியாக விளங்கும் அருங்காட்சியகங்கள் எவ்வளவு மதிப்புமிக்கவை மற்றும் முக்கியமானவை என்பதை உணர்வது அவசியம்.

1977 ஆம் ஆண்டு, மே 18 ஆம் நாள், முதன் முதலில் கொண்டாடப்பட்ட இந்நாள் அன்று முதல் இன்றுவரை பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்கள் பல இந்நாளில் பங்கேற்க அழைக்கப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டில், 90 நாடுகளில் இருந்து 20,000 அருங்காட்சியகங்களும், 2010 ஆம் ஆண்டில் 98 நாடுகளும், 2011 இல் 100 நாடுகளும், 2012 இல் 129 நாடுகளில் இருந்து 30,000 அருங்காட்சியகங்கள் இந்நாளின் நிகழ்வுகளில் பங்குபெற்றிருந்தன. அண்மையில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 30,000 அருங்காட்சியகங்கள் சர்வதேச அருங்காட்சியக தினத்தில் பங்கேற்றுள்ளன

அருங்காட்சியகங்களுக்குச் சென்று ரசிக்க மக்களை ஊக்குவிக்கவும், அருங்காட்சியகங்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்கள் தங்கள் சமூகங்களின் ஆதரவுடன் மட்டுமே உயிர்வாழ முடியும் என்று வலியுறுத்துவதை நோக்கமாகவும் கொண்டு இந்த பன்னாட்டு அருங்காட்சியக நாள் கொண்டாடப்படுகின்றது.

ICOM எனப்படும் பன்னாட்டு அருங்காட்சியகப் பேரவையானது, அருங்காட்சியகங்கள் இலாப நோக்கற்ற நிரந்தர நிறுவனங்களாக இருப்பதால் அவற்றைக் கொண்டாடுவது மிக முக்கியம் என வலியுறுத்துகின்றது. சமூகத்திற்கு பணியாற்றுதல், அதன் வளர்ச்சிக்கு உதவுதல், கலாச்சாரக் கலைப்பொருட்களைப் பாதுகாத்தல், வரலாறு மற்றும் அறிவியலை ஆராய்தல் போன்றவற்றை அருங்காட்சியகங்கள் செய்கின்றன. கலைப்பொருட்கள் மற்றும் அதன் தகவல்களைப் பொதுமக்கள் கற்கவும் கற்பிக்கவும் பொழுதுபோக்கிற்காகவும் மக்கள் அணுகக்கூடிய வகையில் அருங்காட்சியகங்கள் செயல்படுகின்றன. . அருங்காட்சியகங்கள் கலை, வரலாறு, மனித மற்றும் விலங்கினப் பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற பொருட்களைப் பாதுகாக்கின்றன. இவற்றை ஆராய்ச்சி செய்து பராமரிக்கும் வல்லுநர்கள் இல்லையென்றால் அவை இழக்கப்படலாம் அல்லது சேதமடையலாம். ஒரு சமூகமாக நமது வரலாறு மற்றும் வளர்ச்சியை வரைபடமாக்கும் பல கலைப்பொருட்களை அருங்காட்சியகங்கள் இல்லாவிட்டால் நம்மால் பார்க்கவோ, புரிந்துகொள்ளவோ, அனுபவிக்கவோ முடியாது என்பது உண்மைதானே?.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!