கணினிமயமாகிவிட்ட இந்தியாவில் அனைவருக்கும் எழுத்தறிவு – எப்போது சாத்தியம்?

கணினிமயமாகிவிட்ட இந்தியாவில் அனைவருக்கும் எழுத்தறிவு – எப்போது சாத்தியம்?

லக அளவில் அறிவியல், தகவல் தொழில்நுட்பம் மாபெரும் வளர்ச்சி பெற்று வருகிறது. உலகமே கணினிமயமாகிவிட்டது. செல்லிடப்பேசியைப் பயன்படுத்துவோரில் மிகவும் அதிக எண்ணிக்கை இந்தியர்கள்தான் என்பது சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆனால், அதேசமயத்தில் இத்தகைய தொழில்நுட்பங்களை சராசரி பாமர மக்கள் புரிந்து கொண்டு அன்றாட வாழ்வில் பயன்படுத்த முடிகிறதா? கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் குறிப்பிடும்படி முன்னேற்றம் அடைந்திருக்கிறதா?
edit sep 12
சுதந்திரம் பெற்ற பின்னர், பல்வேறு பெயர்களில் எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவையாவும் முழுமையாகப் பயனை அளிக்காததற்கான காரணம் மக்களிடம் எழுத்தறிவும், விழிப்புணர்வும் இல்லாததாகும். எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வந்தாலும் மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாகவும், அடிப்படைக் கல்வி அளிக்க செயல்பட்டு வரும் அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்ஷô அபியான்) போன்ற திட்டங்கள் முழுமையாகச் சென்றடையாத காரணங்களாலும் இன்னமும் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் எழுத்தறிவு பெறாமலேயே வாழ்ந்து வருகின்றனர்.

சமீபத்திய 2011-இன் கணக்கெடுப்பின்படி இந்திய அளவில் ஆண்களின் எழுத்தறிவு 82.14%, பெண்களின் எழுத்தறிவு 65.46%. இதுவே, தமிழகத்தில் ஆண்களில் 86.77%, பெண்களில் 73.44% மட்டுமே. கிராமப்புற அளவில் இந்த வித்தியாசம் இன்னும் அதிகமாகவே காணப்படுகிறது. எழுத்தறிவின்மையைப் போக்குவதற்காக, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் 1965-இல் கூடிய சர்வதேச கல்வி அமைச்சர்களின் மாநாட்டின் பரிந்துரைகளின்படி, 1966-இல் கூடிய யுனெஸ்கோவின் 14-ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் செப்டம்பர் 8-ஆம் தேதி உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்யப்பட்டது. இதையடுத்து, 1967 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி உலக எழுத்தறிவு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

எழுத்தறிவு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, எழுத்தறிவின்மையைப் போக்கிட சிறப்பாகச் செயல்படும் அரசு, அரசு சார்ந்த, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை கெüரவித்து ஊக்கப்படுத்துவதும் இதன் நோக்கம் ஆகும். எழுத்தறிவின்மையைப் போக்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகளையும், செயல்களையும் ஆய்வு செய்து யுனெஸ்கோ சமீபத்தில் விருது வழங்கி பாராட்டியுள்ளது பெருமை தரும் விஷயமாகும்.

இந்தியாவில் பாதுகாப்புத் துறைக்கு அடுத்தபடியாக கல்வித் துறைக்குத்தான் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சுதந்திரம் பெற்ற நாள் முதல் நம் நாட்டில் கல்விக்காக, குறிப்பாக அடிப்படை எழுத்தறிவு கற்பிப்பதற்காக சமுதாயக் கல்வித் திட்டம் (1952), உழவர் செயல்முறை எழுத்தறிவுத் திட்டம் (1967), பள்ளிசாரா கல்வித் திட்டம் (1975), தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் (1978), மக்கள் செயல்முறை எழுத்தறிவுத் திட்டம் (1985), தேசிய எழுத்தறிவு இயக்கம் (1988), முழு எழுத்தறிவு (அறிவொளி) இயக்கம் (1990), தொடர் கல்வி (1992), வளர் கல்வி (1998) போன்றவை செயல்படுத்தப்பட்டன.

2009 முதல் கற்கும் பாரதம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புறப் பெண்களிடையே 2001-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு சதவீதம் 50%-க்கும் குறைவாக உள்ள மாவட்டங்களைத் தேர்வு செய்து மத்திய, மாநில அரசுகளின் 75:25 நிதியுதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது தேசிய அளவில் 300-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும், இரண்டாம் கட்டமாக கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களிலும் என ஒன்பது மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டச் செயல்பாடுகள் புது உத்வேகத்துடன் துவங்கப்பட்டு தற்போது தேக்க நிலையில் உள்ளன.
India Literacy
அடிப்படை எழுத்தறிவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்ற, எழுத்தறிவு பெற்றவர்களுக்கு உடனடியாக கற்றலைத் தொடரும் வகையில் தொடர் கல்வித் திட்டங்கள் இடைவெளியின்றி நடைபெற வேண்டும். அப்பொழுதுதான் கற்றதை மறக்காமல் இருக்க முடியும். இந்தத் திட்டச் செயல்பாடுகளில் குறைந்த கால அளவிலான தொழில் திறன் வளர்த்தல் பயிற்சிகள் அனைத்துப் பயனாளிகளுக்கும் அளித்து பொருளாதாரம் மேம்பாடு அடையச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக தற்போதைய வாழ்க்கைச் சூழ்நிலையில் அன்றாடச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுக்குத் தேவையான திறமைகளான தன்னைத் தானே அறிந்து கொள்ளுதல், தகவல் தொடர்புத் திறன், பிரச்னைகளுக்குத் தீர்வு காணல், முடிவு எடுத்தல், நேர மேலாண்மை, தவறை உணர்ந்து திருத்திக் கொள்ளுதல், சகிப்புத் தன்மை, தோல்வி, பிறர் விமர்சனங்களை தாங்கிக் கொள்ளுதல், சூழலுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ளுதல், குழுவாகச் சேர்ந்து பணியாற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கியதாக கற்கும் பாரதம் திட்டச் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

மக்கள் தொகையில் பாதியளவு உள்ள பெண்களின் பங்கு, நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமானதாகும். ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் எழுத்தறிவு பெற வேண்டும். அரசு, அரசு சார்ந்த, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைத்துப் பிரிவினரும் ஒன்று சேர்ந்து பெண்களுக்கு எழுத்தறிவைக் கற்பிக்க முன்வர வேண்டும்.

இரா. இராஜன்

error: Content is protected !!