சர்வதேச சமநிலை தினம்: பாரபட்சமற்ற அணுகுமுறையின் பிரகடனம் (டிசம்பர் 12)

சர்வதேச சமநிலை தினம்: பாரபட்சமற்ற அணுகுமுறையின் பிரகடனம் (டிசம்பர் 12)

லக அளவில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்தி இன்று, டிசம்பர் 12,,சர்வதேச நடுநிலைமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. அரசுகளுக்கு இடையேயான உறவுகளில் நடுநிலைமையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மோதல்களைத் தவிர்ப்பதற்கான சட்டபூர்வமான பாதையை உறுதிப்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) இந்த தினத்தை அங்கீகரித்துள்ளது.

⚖️ நடுநிலைமை என்றால் என்ன? சட்டப்பூர்வ நிலைப்பாடு

சர்வதேச சட்டத்தின்படி, நடுநிலைமை என்பது ஒரு நாடு மற்ற நாடுகளுக்கு இடையிலான போரில் எந்தவிதமான பங்களிப்பிலிருந்தும் திட்டவட்டமாக விலகி இருப்பதிலிருந்தும், போரிடும் தரப்பினரிடம் பாரபட்சமற்ற அணுகுமுறையைப் பேணுவதிலிருந்தும் எழும் ஒரு சட்டப்பூர்வமான நிலையாகும். இத்தகைய நடுநிலை நாடுகள், இறையாண்மை கொண்ட நாடுகளாக அழைக்கப்படுகின்றன. அதாவது, ஒரு நடுநிலை நாடு போரிடும் எந்த ஒரு குழுவையும் ஆதரிக்காமல், இராணுவக் கூட்டணியில் சேராமல், எப்போதும் போருக்குப் பதிலாக பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே சர்ச்சையைத் தீர்க்க வலியுறுத்துகின்றன.

இதற்கு உலகிலேயே மிகவும் பிரபலமான உதாரணம் சுவிட்சர்லாந்து ஆகும். சுவிட்சர்லாந்து அதன் ‘நடுநிலைமை’ கொள்கைக்கு மிகவும் பிரபலமான நாடாகும். இந்தக் கொள்கையின் காரணமாக, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் பேரழிவுமிக்க விளைவுகளைத் தவிர்ப்பதில் சுவிட்சர்லாந்து பெருமளவில் வெற்றி பெற்றது.

🇮🇳 இந்தியாவின் தனித்துவமான நடுநிலைமைக் கொள்கை

உலக அரசியலில் இந்தியா கடைப்பிடித்து வரும் நடுநிலைமைக் கொள்கை தனித்துவமானது. குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவக் குழுவிற்கும், சோவியத் யூனியன் தலைமையிலான கம்யூனிஸ்ட் குழுவிற்கும் இடையிலான பனிப்போர் (Cold War) உச்சத்தில் இருந்தபோது, இரண்டு குழுக்களிலும் சேராமல் தன்னை நடுநிலையாகக் காத்துக் கொண்ட உலகின் சில நாடுகளில் இந்தியாவும் முதன்மையானதாகும். இந்த அணுகுமுறை அணிசேராமை இயக்கம் (Non-Aligned Movement – NAM) என அழைக்கப்பட்டது.

இன்றும் கூட, உலக அரங்கில் அமெரிக்காவும் ரஷ்யாவும் வல்லரசுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும்போதும், இந்தியா எந்த ஒரு நாட்டுடனும் நிரந்தர இராணுவக் கூட்டணி வைக்காமல், தனது வெளியுறவுக் கொள்கையைத் தன்னகத்தே வடிவமைத்து வருகிறது. இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுடனும் ஒரே நேரத்தில் நட்புறவைக் கொண்டுள்ளதுடன், தன் தேசிய நலனைப் பாதுகாக்கும் வகையில் சுதந்திரமான முடிவுகளை எடுக்கிறது.

🗓️ சர்வதேச தினத்தின் வரலாறு

சர்வதேச நடுநிலைமை தினம் உருவானதற்கு ஒரு குறிப்பிட்ட வரலாறு உண்டு. மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தான் டிசம்பர் 12, 1995 முதல் ஐ.நா.வால் நிரந்தரமாக நடுநிலையான நாடாக அங்கீகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 2, 2017 அன்று, ஐ.நா. பொதுச் சபை, துர்க்மெனிஸ்தானால் அறிமுகப்படுத்தப்பட்ட தீர்மானம் 71/275-ஐ ஏற்றுக்கொண்டது. இந்தத் தீர்மானம், அமைதியைப் பாதுகாப்பதற்கும், நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலுக்கும் இடையிலான தொடர்பைக் குறிப்பிட்டு, டிசம்பர் 12-ஐ சர்வதேச நடுநிலை தினமாக அறிவித்தது.

இந்தத் தீர்மானம், ஐ.நா. பொதுச்செயலாளர் தடுப்பு இராஜதந்திரக் கொள்கைகளைச் செயல்படுத்தவும், மத்தியஸ்த நடவடிக்கைகளில் நடுநிலை நாடுகளுடன் நெருக்கமாக ஒத்துழைக்கவும் வேண்டும் என்றும் முன்மொழிகிறது. இதன் மூலம், நடுநிலை நாடுகள் மோதல்களைத் தவிர்ப்பதில் மட்டுமல்லாமல், உலகச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதிலும் ஒரு பாலமாகச் செயல்பட ஊக்குவிக்கப்படுகின்றன.

சர்வதேச நடுநிலைமை தினம், உலக அமைதி மற்றும் நீடித்த ஒத்துழைப்புக்கான உறுதிப்பாட்டை மீள் உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பாகும்.

தனுஜா

Related Posts

error: Content is protected !!