உலக வறுமை ஒழிப்பு தினம் – அக்டோபர் 17

படிப் படியாக அதிகரிக்கும் வறட்சி, நிலையற்ற அரசியல், உணவு பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவை காரணமாக பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, உலக அளவில், பட்டினியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த 2000 ஆம் ஆண்டில் 80 கோடியாக இருந்தது. இது 2005&ம் ஆண்டில் 85 கோடியாக அதிகரித்தது. அது தற்போது 100 கோடியையும் தாண்டி விட்டது.பட்டினியால் வாடுவது என்பதற்கு நாள் ஒன்றுக்கு 1,800 கலோரியை விட குறைவாக உணவு உண்கிறார்கள் என்று அர்த்தம்.
இந்நிலையில் உலகில் எதாவது ஒரு இடத்தில் வறுமையால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அங்கு அவரது மனித உரிமை மீறப்படுகிறது என்றார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர் சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் தான் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக். 17ல் உருவாக்கப்பட்டது. பின் ஐ.நா., சபையால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த வறுமையை ஒழிக்கவும் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. அதிலும் இந்தாண்டு “பாகுபாடின்றி வறுமையை ஒழிப்பது’ என்பது இத்தினத்தின் மையக்கருத்து.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 37% வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். அதாவது, மொத்த மக்கள்தொகையில் சுமார் 41 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கிறார்கள். கிட்டத்தட்ட நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒருவர் வறுமையில் உள்ளார்.
மக்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் எந்த அளவிற்கு ஊட்டச்சத்து உள்ளது என்ற கணக்கீட்டின்படியே ஒருவர் வறுமையில் வாடுகிறாரா என்பது முடிவு செய்யப்படுகிறது.
இந்தியாவிலேயே ஒரிசாவில்தான் அதிக மக்கள் வறுமை நிலையில் உள்ளனர். இந்த மாநிலத்தில் 100 பேருக்கு 46 பேர் போதிய வசதி இல்லாமல் ஏழ்மை நிலையில் உள்ளனர். அடுத்து பீகார், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர்.
சண்டிகர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த மாநிலங்களில் இது முறையே 7.07% மற்றும் 8.41% என்ற அளவில் உள்ளது.
கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 41.8% உணவு, உடை, எரிபொருள், மின்சாரம், காலணி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்காக மாதம் ஒன்றிற்கு ரூ.450 மட்டுமே செலவிடும் நிலையில் உள்ளனர். நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் அத்தியாவசிய உணவு பொருள்களுக்காக மாதம் சுமார் ரூ.580. செலவிடுபவர்கள் எண்ணிக்கை 25.7% ஆக உள்ளது.
வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் தினசரி வருவாய் சுமார் ரூ.60 கீழாக உள்ளது. மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தால், அண்மை ஆண்டுகளில், குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவதால் குடும்பங்களின் வருமானம் ஓரளவிற்கு உயர்ந்து வருகிறது. இதனால், இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதாக திட்டக்குழு தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு வருகிறது. இதன் பலன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே எதிர்காலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறையும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
உலகில் 70% உற்பத்திப் பொருட்களை 20% பேருக்கும் குறைவானவர்களே அதிக அளவில் அனுபவிக்கிறார்கள். மற்றவர்கள் நடுத்தர வருவாய் பிரிவினவராகவும் ஏழைகளாகவும் இருக்கிறார்கள்.
எனவே, விவசாயத்தை பெருக்கி உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். கூடவே விலைவாசி குறையும். ஏழைகள் வயிற்றுக்கு சாப்பிட முடியும்.