உலகளாவிய அடிமை வர்த்தக ஒழிப்பு தினம்!

சர்வதேச அடிமை வர்த்தக ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 23ம் தேதி நினைவு கூறப்படுகிறது. நாம் அனைவரும் மிகவும் பெருமிதத்தோடு நாகரீக வளர்ச்சியை கொண்டாடும் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருகிறோம். இந்த நூற்றாண்டு தொழில்நுட்ப ரீதியிலும், தத்துவார்த்த ரீதியிலும் பல வளர்ச்சியையும் மாற்றத்தையும் கொண்டுள்ளது. அனைவரும் இன்று ஒரளவுக்கு இந்த உலகில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு அனைத்து மக்களின் சம உரிமைக்காகவும் போராடிய நம் முன்னோர்கள் தான் !
காரணம். 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகளில் நமது சமூகத்தில் சக மனிதர்கள் சமமாக மத்திக்கப்படவில்லை அல்லது அவர்கள் மிருகங்களை விடவும் கீழ்தரமாக நடத்தப்பட்டார்கள் என்றால் அது மிகையில்லை. நமது சமூகம் என்று சொல்லும்போது அதனை நமது தமிழ் சமூகம் என்றோ அல்லது இந்திய சமூககம் என்றோ குறுகிய மனப்பான்மையுடன் பார்க்க வேண்டாம். இங்கே குறிப்பிடப்படும் சமூகம் ஒரு உலகளாவிய சமூகம். இன்றைய சூழலில் பல வளர்சியடைந்த நாடுகளோ அல்லது தனனை வல்லரசு நாடுகளாக கூறிக்கொள்ளும் நாடுகள் உண்டாயின் அதற்கு இந்த உலகளாவிய சமூகத்தின் மிகப்பெரிய பங்களிப்புதான் காரணம். ஒரு நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் சமூகம் தான் உலகளாவிய சமூகமாக குறிப்பிடப்பட்ட அடிமைகள் சமூகம். அதனை அடிமைகள் சமூகம் என்று சொல்வதைவிட அடிமைகளாக ஆக்கப்பட்ட சமூகம் என்று கூறுவதே சாலச் சிறந்ததாகும்.
அடிமைகளின் வரலாறு
அடிமைகள் என்று சொன்னவுடன் வரலாற்று ஆய்வாளர்கள் உட்பட பலரும் ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயர்கள் கருப்பினத்தவர்களான ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக்கியது மட்டுமே தெரியும். ஆனால் அடிமைத்தனம் (Slavery) என்பது ஐரோப்பியர்களின் கலாச்சாரத்திற்கும் முன்னால் வழக்கத்தில் இருந்த ஒன்று என்பதுதான் உண்மை. அதிலும் குறிப்பாக கிறிஸ்து பிறப்பதற்கும் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கும் முன்னால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடிமையாக்கி வாழ்ந்துள்ளான் என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.
வரலாற்றில் மிகவும் பிரபலமான பற்றும் பழமையான நாகரீகங்களாக கிரேக்க நாகரீகம், ரோமானிய நாகரீகம், எகிப்து நாகரீகம் மற்றும் திராவிட நாகரீகம் போன்ற சில நாகரீகங்கள் கருதப்படுகின்றன. இவற்றுள் எகிப்திய, ரோமானிய, மற்றும் கிரேக்க நாகரீகத்தில் அடிமைத்தனம் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எகிப்து நாட்டில் வாழ்ந்த இஸ்ரயேல் நாட்டு மக்கள் அங்கு அடிமைகளாக நடத்தப்பட்டுள்ளனர். அதுப்பற்றிய விளக்கங்கள் புனித நூலான விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதைப்போல கிரேக்கம் மற்றும் ரோமானியர்களும் மனிதர்களை அடிமைகளாக பயன்படுத்தினர் என்றும் குறிப்புகள் உள்ளன. அடிமைகள் எந்த கலாச்சாரத்தில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்களின் நிலமை மிகவும் கவலைக்கிடமானது தான். அடிமைகளை அடக்கியாளும் அதிகார வர்க்கத்தினர் அடிமைபட்ட மக்களை விலங்குகளை விடவும் கீழ்த்தரமாக நடத்தியுள்ளனர்.
“நாகரிங்களின் தொட்டில்” என வர்ணிக்கப்படும் தொன்மை நாகரிக நாடுகளான கிரேக்கம், எகிப்து, ரோம், அரேபியா, சீனாவிலும் அடிமைகளை வைத்திருப்பதும் பரிசளிப்பதும் சமூகத் தகுதியாகக் கருதப்பட்டது. பிற நாடுகள் அல்லது இனங்களின் மீது தங்கள் கலாசாரத்தைத் திணித்தல், அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடித்தல் போன்ற நிகழ்வுகளில் பூர்வகுடி மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததால் அவர்களைக் கொள்ளைக்காரர்கள் கொன்று குவித்தனர். தப்பித்தவர்களை அடிமைகளாக்கினர். அதிகார ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அடிமைகள் உருவாக்கப்பட்டனர்.
தொடர்ந்து ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயர்கள் நிறம் மற்றும் கலாசார அடிப்படையில் மனித இனத்தைப் பாகுபடுத்தி பெரும் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி அடிமை முறையை வளர்த்து உலகமெங்கும் வீரியம் பெறச் செய்தனர். இதனடிப்படையில் கருப்பின மக்கள் தாழ்வானவர்களாக, விலங்குகளை விடக் கேவலமானவர்களாக நடத்தப்பட்டனர். வசதி படைத்தவர்கள் அடிமைகளை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டனர். அடிமை வர்த்தகம் உலக அளவில் பிரபலமான தொழிலாக உருவானது. அடிமைகளை வாங்கவும் விற்கவும் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றில் “மனிதனை மனிதனே” விற்கும் மாபெரும் அவலம் அரங்கேறியது. இந்த இழி நிலையை முற்றிலும் தடுத்திடும் நோக்கில் 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அடிமை ஒழிப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. பிரெஞ்சுப் புரட்சி அடிமை முறையைத் தடை செய்ய வழிவகுத்தது. மாவீரன் நெப்போலியன் தலைவரானவுடன் அடிமைத் தனத்தின் பல தடைகளை நீக்கினான். தொடர்ந்து பல நாடுகள் அடிமை முறையை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
உலக வல்லரசாக அறியப்படும் அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கனும் மார்டின்லூதர் கிங்கும் அமெரிக்க அடிமை ஒழிப்பு வரலாற்றில் மறக்க முடியாதவர்களாவர். அமெரிக்க தேசத்தையே கட்டி ஆளும் பெரும் பதவியை வகித்த லிங்கனுக்கும் அடிமை அனுபவம் உண்டு. லிங்கன் ஒரு புத்தகப் பிரியர். குடும்ப வறுமை அவரை சொந்தப் புத்தகம் வாங்கவிடாமல் தடுத்தது. எனவே நகரங்களில் வாழும் பெரும் செல்வந்தர்களிடம் கெஞ்சிக் கேட்டுப் புத்தகங்களைப் படிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். ஒரு முறை அமெரிக்காவின் விடுதலைக்குக் காரணமான ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. புத்தகத்தை அன்றே படித்துத் திருப்பித் தந்துவிடத் துடித்தாலும் வீட்டு விளக்கில் எண்ணெய் தீர்ந்ததால் அவரால் படித்து முடிக்க இயலவில்லை. எனவே புத்தகத்தைத் தன் குடிசை வீட்டின் கூரையில் செருகி வைத்துவிட்டுத் தூங்கச் சென்றார்.
மறுநாள் காலையில் புத்தகத்தைப் பார்த்த போது இரவு பெய்த மழையில் அது நனைந்திருந்தது. உடனே புத்தக உரிமையாளரிடம் சென்று புத்தகம் நனைந்த விவரத்தைக் கூறினார். உரிமையாளரோ புத்தகத்திற்கான விலையைக் கொடு அல்லது என் பண்ணையில் மூன்று நாள்கள் அடிமையாக வேலை செய் என்றார். லிங்கனால் பணம் தர இயலாததால் அவரது பண்ணையில் வேலை செய்யச் சம்மதித்தார். மூன்று நாள்களுக்குப் பிறகு அந்தப் புத்தகத்தைத் தனக்குச் சொந்தமாக்கித் தழுவிக் கொண்டு கண்ணீர் வடித்தார். அந்த அடிமைத்தனத்தின் பாதிப்பால் அமெரிக்க அதிபரானவுடன் அடிமை விலங்கை அறுத்தெறிந்து வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தார்.
“அமெரிக்காவே நீ இலக்கற்றுப் போய்விட்டாய். உனது சகோதரர்களை மிதித்துவிட்டுச் சென்று கொண்டிருக்கிறாய். ஏதோ சில மனிதர்கள் மட்டுமல்ல. எல்லோரும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். எழுந்திரு அமெரிக்கா. இலக்கு நோக்கித் திரும்ப வா” என போர்க் குரலெழுப்பி நிறவெறிச் சமத்துவத்தை நிலைநாட்டப் போராடிய மக்களின் போராளி மார்டின் லூதர் கிங்கின் பங்களிப்பு ஈடு இணையற்றது. மகத்துவமானது.
இன்னுக் கொஞ்சம் விரிவாக சொல்வதானால் மத்திய வரலாற்று காலமான 17 மற்றும் 18ம் நூற்றாண்டில்தான் அடிமைகள் அதிகமாக கொடுமைபடுத்தப்பட்ட காலமாகும். இந்த உலகத்தில் அடிமை சமூகம் என்ற ஒரு சமூகமோ அல்லது அடிமை என்ற கொள்கையோ கிடையாது. பிறரை அடக்கியாள வேண்டும் என்று நினைத்த குறிப்பிட்ட ஒரு சிலர் உருவாக்கியதுதான் இந்த அடிமை சமூகம் அல்லது அடிமை வர்த்தகமாகும்.
அடிமை வர்த்தம் உருவாக காரணம் என்ன?
மனிதன் அறிவியல் கண்டுபிடிப்புகளில் மிகவும் முக்கியமானது சக்கரமாகும். சக்கரத்தை கண்டுபிடித்தது ஆதி மனிதன் என்று கூறப்பட்டாலும் அந்த சக்கரத்தின் மூலம் பலவற்றை கண்டுபிடித்தது நவீன மனிதன் தான். சக்கரத்தின் கண்டுபிடிப்பு மூலம் மனிதன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்ய ஆரம்பித்தான். தொடக்கத்தில் மனிதனுடைய பயணத்தின் நோக்கம் பல புதிய இடங்களை கண்டுபிடிப்பதும் புதிய கலச்சாரத்தை பற்றி தெரிந்து கொள்வதும்தான். ஆனால் நாட்கள் கடந்து செல்ல செல்ல மனித பயணத்தின் நோக்கம் மாறியது.
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணப்படும் மனிதன் தன்னுடைய கலாச்சாரத்தை மற்றவர்கள் மீது புகுத்த ஆரம்பித்தான். மேலும் மற்ற இடங்களில் உள்ள செல்வச் செழிப்புகளை கொள்ளையடிக்கவும் ஆரம்பித்தான். அந்த செல்வச் செழிப்புகளை கொள்ளையடிக்கும்போது அந்த பூர்வகுடி மக்கள் அதனை எதிர்த்தனர். எதிர்த்த பூர்வகுடி மக்களை கொள்ளையடிக்கச் சென்றவர்கள் கொன்று குவித்தனர், அதில் தப்பி பிழைத்தவர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். தனது அதிகாரத்தை மற்றவர்களிடம் காட்டுவதற்காகவே முதலில் அடிமைகள் உருவாக்கப்பட்டனர். ஒருவன் இன்னொருவனை அடிமைபடுத்துவதின் மூலம் அடிமைபடுத்துபவன் அடிமைபடுத்தப்படுபவனை விட வலிமையானவனாக நினைத்துக்கொள்கிறான்.
அதனை தொடர்ந்து வரலாற்றில் ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயர்கள் மனிதர்களிடையே பாகுபாடுகளை உருவாக்கினர். அதற்கு நிறச்சாயலையும் கலாச்சார சாயலையும் பூசினர். நிறத்தின் அடிப்படையில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வுகளை உருவாக்கினர். கருப்பாக இருப்பவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் வெள்ளையாக இருப்பவர்கள் உயர்ந்தவர்கள் என்ற கொள்கையை புகுத்தினர். இதன் அடிப்படையில் ஆப்பிரிக்க கண்டத்தை சார்ந்த மக்கள் தாழ்வானவர்களாக கருதப்பட்டனர். மேலும் அடிமை தொழில் செய்வதற்கென்றே பிறந்தவர்கள் போல அவர்கள் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டனர்.
அடிமை வர்த்தகம்
ஐரோப்பிய சமுதாயத்தில் அதிக வசதி படைத்தவர்கள் அடிமைகளை வேட்டையாடி அவர்களை விற்று வணிகம் செய்தனர். அடிமை வர்த்தகம் என்பது ஒரு காலத்தில் உலக அளவில் மிகவும் பிரபலமான தொழிலாக இருந்தது.
ஆப்பிரிக்க கண்டத்தில் வாழந்த கருப்பினத்தவர்கள் அல்லது ஆப்பிரிக்க பூர்வகுடி மக்கள் வெள்ளையர்களால் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டனர். ஆப்பிரிக்க மக்களை சிறைபிடித்த வெள்ளையர்கள் அவர்களை மற்ற செல்வந்தர்களுக்கு விற்று வணிகம் செய்தனர்.
ஆடு மாடுகளை வாங்கவும் விற்கவும் சந்தைகள் இருப்பதுபோல அப்போது அடிமைகளை வாங்கவும் விற்கவும் சந்தைகள் இருந்தன. அடிமைகளை வாங்க விரும்புவோர் அந்த சந்தைகளுக்கு சென்று தாங்கள் விரும்பும் அடிமைகளை தேர்ந்தெடுத்து விலை பேசி வாங்கிக்கொள்ளலாம்.
அடிமைகளை வாங்கும்போது அவர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனரா, அடிமைகளின் பற்கள், எலும்புகள் போன்றவை ஆரோக்கியமாக இருக்கிறதா என்று சோதனை செய்த பிறகே அவர்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டனர்.
கை, கால் முறிந்தவர்கள், முடக்குவாதமுற்றவர்கள், வயதானவர்கள் போன்றவர்கள் அடிமைகளாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உடல் வலுவான ஆண்களும் பெண்களும் மட்டுமே அடிமைகளாக்கப்பட்டனர். ஒரு முறை ஒருவரை அடிமையாக ஒருவர் வாங்கிவிட்டால் அவருடைய வாழ்நாள் முழுவதும் அவர் அவருக்கு அடிமையாகவே வாழ வேண்டும். அடிமைகளாக்கப்பட்டவர்கள் மிகவும் கடுமையாக உழைத்தனர். குறிப்பாக தேயிலை தோட்டம், கரும்பு விவசாயம், பருத்தி விவசாயம் போன்றவற்றில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வளவு கடுமையாக உழைக்கும் இவர்களுக்கு ஒரு வேலை உணவு என்பது கூட கனவாகத்தான் இருந்தது. அடிமைகள் உயிரோடு இருப்பதற்காக மட்டுமே அவர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டது.
அடிமை வர்த்தகம் ஒழிப்பு
அடிமை வர்த்தகம் ஒழிப்பானது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடந்தது. இங்கிலாந்தில் 1807ம் ஆண்டு அடிமை வர்த்தகத்தை ஒழிக்க ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது ஆனால் இங்கிலாந்து ஆட்சி செய்த அனைத்து காலனிகளிலும் படிப்படியாக அடிமை வர்த்தகம் ஒழிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக 1838ம் ஆண்டு இங்கிலாந்து பேரரசு முழுவது அடிமைகள் வர்த்தகம் முழுமையாக ஒழிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ரோம் போன்ற நாடுகளும் அடிமை வர்த்தகத்தை ஒழித்தனர்.
ஆனாலும் சட்டத்திற்கு புரம்பாக பல இடங்களில் தொடர்ந்து அடிமை வர்த்தகம் நடந்து கொண்டுதான் இருந்தது. அவை அனைத்தும் நாளடைவில் சிறிது சிறிதாக அழிந்து போயின. ஆனால் அடிமை வர்த்தகத்தின் தாக்கம் இன்னும் மக்கள் மத்தியில் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
என்னதான் பின்நவீனத்துவ காலத்தில் நாம் வாழ்ந்தாலும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பன்னாட்டு நிறுவனங்களின் பெரு முதலாளிகள் ஆகிய பலரின் மனதிலும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் வேலை பார்பவர்களை ஒரு அடிமை போலவே நடத்தும் மனோபாவம் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.
நிலவளம் ரெங்கராஜன்