அச்சிதழ்களின் வீழ்ச்சி :மீண்டு(ம்) வருமா பொற்காலம்?

அச்சிதழ்களின் வீழ்ச்சி :மீண்டு(ம்) வருமா பொற்காலம்?

தொழில்நுட்பம் வளர வளர ஒவ்வொரு துறையும் இழப்புகளையும் ஆதாயங்களையும் தொடர்ந்து சந்தித்தே வருகிறது. அச்சிதழ்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆரம்பத்திலிருந்து பார்க்கலாம். தமிழில் தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அது அச்சிதழ்களையும் பாதிக்கத் தொடங்கியது. அதில் ஒளிபரப்பான செய்திகள், செய்தியில் ஆர்வமுள்ள வாசகர்களை தன் பக்கம் ஈர்த்தன. முதல் நாள் தொலைக்காட்சியில் வெளியான செய்திகள் மறுநாள் செய்தித்தாட்களில் ஆறிய பழங்கஞ்சி ஆயின. தவிர, சீரியல்கள் தொடர்கதைகளை விரும்பிப் படிக்கும் வாசகர்களை குறிப்பாகப் பெண்களை ஆக்டோபஸாய் வளைத்துக்கொண்டன. பத்திரிகைத் துறையிலிருந்து பலரும் காட்சி ஊடகத்தினுள் படையெடுக்க, அதன் நிகழ்ச்சிகளிலும் வார இதழ்களின் சாயல். பத்திரிகை சாயலிலேயே பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொலைகாட்சிகள் ஒளிபரப்பத் தொடங்கின.

கால ஓட்டத்தில் தொலைக்காட்சிகளுடன் சமூக ஊடகங்களும் தங்களது ஆதிக்கக் கொடியைப் பறக்கவிடத் தொடங்கின. இதனால் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகவே கொஞ்சம் மூச்சுத் திணறலுடன்தான் சுவாசித்துக்கொண்டிருந்தன அச்சிதழ்கள். விற்பனை குறைந்ததால், அதனை அதிகரிக்க ஒவ்வொரு நிறுவனத்திலும் மீட்டிங் போட்டு நகம் கடித்துக் கொண்டிருந்தார்கள். இன்னொருபுறம் இதே காலகட்டத்தில் பெட்டிக்கடைகள் குறைந்து மால்கள் பெருகியதும் சந்தை நடைமுறைகளில் இதழ்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தின. ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் அசுரத்தனமாக தினம் தினம் புதிய புதிய வசதிகளுடன் மாடல்களை அள்ளித்தரத் தொடங்கின. கேமரா, கடிகாரம், டேப் ரெக்கார்டர் என்று அது முடக்கிய பல தொழில்களின் பட்டியலில் அச்சு ஊடகமும் ஒன்றானது.

போட்டிப் பத்திரிகை என்ற டிசைனே மாறிப் போனது. இன்றைய நிலையில் அச்சிதழ்களின் மிகப்பெரும் போட்டியாளர்கள் நெட்டிசன்கள்தான். அவர்கள்தான் இன்று மிகப்பெரும் சவால். ஒவ்வொரு நெட்டிசனும் கையில் ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு தகவல் பரப்பும் சிறிய ஊடகமாகவே மாறிவிட்டார்கள். ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர், டிக் டாக், இன்ஸ்டாகிராம் என்று ஏகப்பட்ட செயலிகளில் செயல்புயல்களாக வலம் வரத்தொடங்கினார்கள் அந்தப் பரபர பத்திரிகையாளர்கள்.

அச்சிதழ்களுக்கு லட்சக் கணக்கில் செலவு. மழை பெய்து விற்பனை நின்று போனாலோ, கவர்ஸ்டோரி சரியில்லாமல் போனாலோ, அல்லது கடையடைப்பு என்றாலோ, பணவாட்டம் மிகுந்தாலோ பத்திரிகைகளுக்கு விற்பனையில் பெருத்த அடி. ஆனால், நெடடிசன்களுக்கு இது மாதிரி எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்கள் பதிவுகளில் காற்றோடினால் கூட அவர்களுக்குக் கவலை இல்லை. அதனால் நஷ்டமும் இல்லை. அடுத்த பதிவுக்கு, பரபரப்புக்குத் தாவி விடுவார்கள். அவர்களது முதலீடே ஒரு நல்ல ஸ்மார்ட் போன். மூன்று மாதத்துக்கொரு முறை 600 ரூபாய்க்கு ஜியோவில் ரீசார்ஜ். நாளொன்றுக்கு இரண்டு ஜிபி நெட் இணைப்பை வைத்துக்கொண்டு தீயாய் வேலை செய்கிறார்கள்.

ஒருமுறை ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, தமிழ் சேனல் ஒன்றின் செயல் அதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்தேன். “இப்ப மக்களுக்குச் செய்தி பார்க்கும் ஆர்வம் அதிகமாயிடுச்சு சார்…” என்றேன். அவரோ, “இருக்கலாம். ஆனால், அதன் முழுப்பலனையும் சேனல்களால் அடைய முடியவில்லை. காரணம் நெட்டிசன்கள். அவர்களுக்குத் தயாரிப்புச் செலவில்லை. செய்தியின் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. கிடைப்பதைப் பரபரப்பாக போஸ்ட் செய்துவிடுகிறார்கள். நாங்கள் தகவல்களை உறுதிப்படுத்திக்கொண்டு ஏரில் (Air) வருவதற்குள் அவர்களது தகவல் லட்சக்கணக்கில் ஷேர் ஆகிவிடுகிறது. எங்களையே முந்திக்கொண்டு விடுகிறார்கள் அந்தக் கில்லாடிகள்… அவர்களை சமாளிப்பதுதான் எங்களது மிகப்பெரிய சவால்…” என்றார்.

சில நிமிடங்களில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் வசதியுள்ள தொலைக்காட்சிகளுக்கே இந்தநிலை என்றால், ஒருநாள், ஒருவாரம் கழித்து வெளியாகும் பத்திரிகைகளின் நிலை பற்றிச் சொல்லவே வேண்டாம். இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. அன்றிரவு அந்த வார இதழின் இறுதிப் பணிகளை முடித்து அச்சுக்கு அனுப்பிவிட்டு, வீட்டுக்குப் போய் படுத்துறங்கினார் அந்த உதவியாசிரியர். காலையில் எழுந்து வாட்ஸ் ஆப் பார்த்தவருக்கு பேரதிர்ச்சி. இரவு அவர் முடித்துவிட்டு வந்த இதழின் பக்கங்கள் புத்தக வடிவில் ஷேர் செய்யப்பட்டிருந்தது. அது ஆயிரக்கணக்கான ஷேரிங் சென்றிருந்தது. இப்படி ஒரு சூழலில் ஓர் அச்சிதழ் எப்படி கடைகளில் போணியாகும்? வாட்ஸ்ஆப்பில் இதழ்களின் பி.டி.எஃப்களை ஷேர் செய்யவென்றே ஏகப்பட்ட குழுக்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஏகப்பட்ட உறுப்பினர்கள். ஒவ்வொருவரும் தன்னை ஓர் ஆசிரியர் போலவும் பதிப்பாளர் போலவும் பெருமிதமாக நினைத்துக்கொண்டு தங்கள் நட்பு வட்டங்களுக்குப் பகிர்கிறார்கள். இத்தகைய குழுக்களில் தினமும் நூற்றுக்கணக்கான தின, வார இதழ்களின் பி.டி.எஃப்.கள் ஷேர் செய்யப்படுகின்றன. அதிலும் தினசரிகளின் மாவட்ட வாரியான பதிப்புகளையும் ஷேர் செய்து அச்சிதழ்களுக்கு அச்சமூட்டுகிறார்கள். இது போதாதென்று பெரிய பெரிய எழுத்தாளர்களின் நாவல்கள், கட்டுரைகள் புத்தக வடிவில் பி.டி.எஃப். ஆகப் பகிரப்படுகின்றன.

இன்னொருபுறம் யூ டியூபர்கள் கலவரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சிலர் லட்சக் கணக்கில் சப்ஸ்கிரைபர்களை வைத்துக்கொண்டு தெறிக்க விடுகிறார்கள். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், டிக் டாக், ஸ்னாப் ஷாட், கிளப் ஹவுஸ் என்று கிடைத்த செயலிகளில் எல்லாம் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் அந்த சைபர் ஜர்னலிஸ்ட்கள். இதனால் அதனைத் துய்க்கும் பலருக்கு நேரப் பற்றக்குறை. மொபைல் பார்த்தே அசந்து போகிறார்கள். தொலைக்காட்சி பார்க்கும் நேயர்களின் சதவிகிதமும் இதனால் குறைந்துவிட்டது என்கிறது புள்ளிவிவரம். “முன்பெல்லாம் ஆறு நியூஸ் பேப்பர்கள் படிப்பேன். இப்போ டைம்ஸ் ஆஃப் இந்தியா புரட்டுறதோடு (?) சரி…” என்று ஊடக நண்பர் ஒருவரே என்னிடம் கூறினார்.

எனவே யாருக்கும் நேரமில்லை. நொறுக்குத் தீனி அதிகம் உண்ணும் குழந்தை வீட்டில் சாப்பாடு சாப்பிடாது. அதே பிரச்னைதான் இங்கும். தவிர, இதழ்கள் வாங்க பணம் செலவு செய்ய வேண்டும். செலவு செய்து வாங்கினாலும் அந்த இதழை மட்டுமே படிக்க முடியும். இணையத்தில் ஒரே ரீசார்ஜில் நம் விருப்பத்துக்கு எதை வேண்டுமானாலும் நுகரலாம். மிகப் பெரிய களம் அது. இவையெல்லாம் ஒரே நாளில் நிகழ்ந்தவையல்ல. படிப்படியாய் நிகழ்ந்தன. இவற்றை எதிர்கொண்டு வெல்வது எப்படி என்று மீட்டிங் போட்டு ஆலோசிக்காத இதழ்களே இல்லை.

இந்தப் பிரச்னைகள் ஒருபுறமிருக்க, அச்சுப்பொருட்களின் விலையேற்றம், காகிதத்தின் மீதான வரிவிதிப்புகள், அச்சுக்கூலி அதிகரிப்பு, ஊழியர்கள் சம்பள உயர்வு என்று ஒருபுறம் இதழ்களின் தயாரிப்புச் செலவுகள் நிறுவனங்களின் முதுகில் கூடுதல் அழுத்தம் கொடுத்தன. ஒளி ஊடகத்தின் எழுச்சியால் அச்சிதழ்களுக்கு விளம்பர வரத்தும் குறைந்தது. 20 விளம்பரங்களை வெளியிட்ட இதழ்கள் இரண்டு மூன்று விளம்பரங்கள் பெறுவதற்கே போராடின. கொரோனாவுக்குப் பிறகு, பணப்புழக்கம் குறைந்த நிலையில் வணிக நிறுவனங்கள் விளம்பரங்கள் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டன. சில நிறுத்தியும் கொண்டன. இதனால், விளம்பர வருவாய் மூலம் தயாரிப்புச் செலவுகளை சமாளித்து வந்த அச்சிதழ்களுக்குப் பேரிடி.இதழ் விற்பனையின் வருவாய் மூலம் மட்டுமே நிறுவனத்தை நடத்த முடியும் என்ற நிலை. பத்திரிகையின் விலையை ஏற்றவும் முடியாது. விலையை மேலும் உயர்த்தினால் விற்பனையில் இன்னும் சரிவைச் சந்திக்க வேண்டியிருக்கும். விற்பனை வருமானம் தயாரிப்புச் செலவுக்கே போதுமானதாக இல்லை. இந்த நஷ்டத்தைச் சமாளிக்க முடியாமல்தான் தமிழின் மிகப்பெரும் நிறுவனங்கள் பல தங்கள் அச்சிதழ் வெளியீடுகளை நிறுத்திக் கொண்டன.

பெ.கருணாகரன்

error: Content is protected !!