ரயில்களை இயக்க தனியார்களுக்கு உரிமை!- மோடி அரசு முடிவு?

ரயில்களை இயக்க தனியார்களுக்கு உரிமை!- மோடி அரசு முடிவு?

நாட்டின் வருவாயில் 60 சதவீததுக்கும் மேலாக விழுங்கும்  அரசு துறைகளின் போக்கை மாற்ற  தனியார் மயமாக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் மோடி அரசு, பாரம்பரியம் மிக்க,  நம் நாட்டில் அதிகமான தொழிலாளர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறை யையும் சீரழிக்க முடிவு செய்துள்ளது.

இந்திய ரயில்வேயில் 7,600 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில், 75 ரயில் நிலையங்கள் அனைத்து வசதிகளுடன் கூடிய ஏ-1 பிரிவைச் சேர்ந்ததாகவும், 322 ரயில் நிலையங்கள் ஏ பிரிவைச் சேர்ந்த தாகவும் உள்ளது. இதே போன்று தென்னக ரயில்வேயில் கிட்டத்தட்ட 608 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில், 8 ரயில் நிலையங்கள் ஏ1 பிரிவைச் சேர்ந்ததாகவும், 42 ரயில் நிலையங்கள் ஏ பிரிவைச் சேர்ந்ததாகவும் உள்ளது. இந்த ஏ பிரிவைச் சேர்ந்த 42 ரயில் நிலையங்கள் தனியாருக்கு கொடுக்கப்பட தயார் நிலையில் உள்ளது. அதோடு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் கேரளாவின் கோழிக்கூடு ரயில் நிலையங்களும் தனியாருக்கு கொடுக்கப்பட இருக்கின்றன. ரயில் நிலைய வளர்ச்சித் திட்டத்தின் படி கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே ரயில் டிக்கெட் முன்பதிவு, ரயிலில் வழங்கப்படும் உணவு போன்றவற்றை, ஐஆர்சிடிசியிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலையில், மேலும் சில பணிகளை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளது. அதன்படி சில வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களை இயக்க தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளது. இதற்கான டென்டர் விரைவில் வெளியிட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, நெரிசல் குறைந்த பகுதிகளிலும், சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள பகுதிகளி லும், தனியார் மூலம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இதுபோன்ற வழித் தடங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. தனியாருக்கு ரயில்களை குத்தகைக்கு விட்டு, அதன்மூலம் அவர்களிடமிருந்து பணம் வசூலிக் கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.