June 9, 2023

இந்தியர்களின் கல்வியறிவு ரொம்ப மோசம்- உலக வங்கி அப்செட்!

நம் நாடு சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டில் 18 சதவீத மக்களுக்கே எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது. தற்போது அடிப்படை கல்வி அறிவை 74 சதவீத மக்கள் பெற்றுள்ளனர். 95 சதவீத குழந்தைகள் பள்ளிகளில் கல்வி கற்கின்றனர். 86 சதவீத இளைஞர்கள் கல்வி அறிவு பெற்று பணியாற்றி வருகின்றனர். இது ஒரு சாதாரண சாதனை அல்ல. கடந்த காலங்களில் பெற்ற வெற்றிகளில் இருந்து கிடைக்கும் ஊக்கத்தை வைத்து எதிர்காலத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இன்னும் நாம் போகவேண்டிய தூரம் அதிகம். ஆனால், ஒரு உண்மையை நாம் மறுத்துவிட முடியாது. அதாவது, 35 கோடி இளைஞர்கள் மற்றும் வயது வந்தோர் இன்னும் கல்வி அறிவு இல்லாத நிலையில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் பங்கெடுக்க முடியாதபடி உள்ளனர். மேலும், தொடக்கக் கல்வியை முடித்த பிறகும்கூட 40 சதவீத பள்ளிக்குழந்தைகள், தேவையான அளவில் அடிப்படை கல்வித்திறனை பெறவில்லை. இது கவனிக்கப்பட வேண்டிய மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில் மாணவர்களுக்கு புரியாத கல்வி தரும் பள்ளிக்கூடங்கள் ஒரு வீணான வளர்ச்சி மட்டுமல்ல, அது குழந்தைகளுக்கு இழைக்கப்படும் ஒரு பெரிய அநீதி என  உலக வங்கி தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது..
உலக வங்கி  ‘உலக வளர்ச்சி அறிக்கை 2018’ என்ற அறிக்கையை செவ்வாய்கிழமை அன்று வெளியிட்டது. அதில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள், வேலை வாய்ப்பு இழப்பு மற்றும் குறைந்த ஊதிய உயர்வு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரலாம் என எச்சரித்துள்ளது.அதற்கு முக்கிய காரணம் அவர்கள் ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிகள் வாழ்க்கையில் வெற்றி பெற தேவையான கல்வியை கற்பதில் தோல்வியடைந்துள்ளனர் என உலக வங்கி அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
அந்த அறிக்கையின்படி, ஒரு வார்த்தை கூட படிக்க முடியாத நிலையில் உள்ள இரண்டாம் வகுப்பு மாணவர்கள் 12 நாடுகளில் உள்ளனர். இப் பட்டியலில் மணிலாவிற்கு அடுத்ததாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும் கணக்கு பாடத்தில் இரண்டு இலக்க கழித்தல் தெரியாத மாணவர்கள் கொண்ட ஏழு நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ‘‘கிராமப்புற இந்தியாவில் மூன்றாவது படிக்கும் மாணவர்களில் மூன்று பங்கு மாணவர்களுக்கு 47 -17 போன்ற இரண்டு இலக்க கழித்தல் கணக்குகளைப் போட முடியவில்லை. ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பாதி பேரின் நிலை இதுதான்’’ என உலக வங்கி கூறியுள்ளது.
புரிந்து கொண்டு கற்கும் ஆற்றலை வளர்க்காத கல்வி, தீவிரமான வறுமையை ஒழிப்பதிலும் அனைவருக்கும் சமமான வாய்ப்பையும், வளத்தையும் உருவாக்குதிலும் தோல்வி அடைந்துவிடும் என உலக வங்கியின் அறிக்கை வாதிடுகிறது. “பள்ளியில் பல ஆண்டுகள் படித்தும் லட்சக்கணக்கான குழந்தைகள் எழுதவோ, படிக்கவோ அல்லது அடிப்படை கணிதத்தை செய்யவோ முடியாத நிலையில் உள்ளனர். இந்த கற்றல் நெருக்கடி, அவர்களது சமூக இடைவெளிகளை மேலும் விரிவுபடுத்துகிறது”, என்று உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் கூறியுள்ளார்.
“கல்வி நல்லமுறையில் வழங்கப்படும் போது வேலைவாய்ப்பு, சிறந்த வருமானம், நல்ல உடல்நலம் மற்றும் வறுமை இல்லாத வாழ்க்கை ஆகியவை இளைஞர்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது” என்றும் ஜிம் யோங் கிம் தெரிவித்துள்ளார்.ஆந்திராவில் செய்யப்பட்ட ஒரு பரிசோதனையில், கணிதத்திலும் மொழி  பாடங்களிலும்  மாணவர்களின் கற்றல் ஆற்றலுக்கேற்ப  ஆசிரியர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது. அதன் பயனாக அந்த பாடங்களில் மட்டுமல்லாமல் அறிவியல் மற்றும் சமூகவியல் பாடங்களிலும்  மாணவர்களின் கற்றல் திறன் அதிகரித்தது.
இந்த முடிவு, மொழி மற்றும் கணிதம் இரண்டும் கல்விக்கான பொது நுழைவாயில்கள் என்பதை உணர்த்துகிறது என்று உலக வங்கி அறிக்கை கூறுகிறது. மேலும் குஜராத்தில் கணினி உதவியுடன் செயல்படுத்தப்பட்ட திட்டத்தால் கல்வித் திறன் குறைந்த மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்பட்டது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே வளரும் நாடுகளில் கற்றல் நெருக்கடியை நிவர்த்தி செய்யவும் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவும் ஒரு வலுவான சமூக இயக்கத்தை ஒருங்கிணைத்து, கல்விமுறை மாற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.