சுற்றுலாத்துறையில் இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய நாடாக உருவெடுக்கும் – ஆய்வாளர்கள் கணிப்பு!.
சுற்றுலா என்பது பணக்காரர்களுக்கானது என்ற ஒரு தவறான புரிதல் நிலவுகிறது. உண்மை அது இல்லை. காலம் காலமாக நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக சுற்றுலா உள்ளது. கையில் பணமில்லாத போதிலும், யாத்திரை செல்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.கடற்கரை சுற்றுலா, இமயமலை சுற்றுலா, பசுமை சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, விளையாட்டுச் சுற்றுலா என பலதளங்களில் சுற்றுலா வாய்ப்புகள் இந்தியாவில் உள்ளன. அந்த வகையில் உலகின் மிகப் பெரிய சுற்றுலா மையமாக இந்தியா உருவெடுத்து வருவதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. சுற்றுலாவுக்கான மிக பெரிய சந்தைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் பெர்ன்ஸ்டெய்ன் (Bernstein) நிறுவனம் இந்திய சுற்றுலாத்துறையின் எதிர்காலம் குறித்த ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் பாலைவனங்கள், வனப்பகுதிகள், மலைகள், கடற்கரைகள், மாநகரங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியம் ஆகியவை சுற்றுலா பயணிகளை இந்தியா நோக்கி கவர்ந்து இழுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் பயணிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் உத்தரபிரதேசம், ஆந்திரா , கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த இடமான 3வது இடத்தை நோக்கி இந்தியா முன்னேறும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாய் சுமார் 10.5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 14.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாய் 3 லட்சத்து 16ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து சுமார் 7 அரை லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் Bernstein கணக்கிட்டுள்ளது. 2019 முதல் 2027 வரையிலான காலகட்டத்தில் சுற்றுலாத்துறையின் வருவாய் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செலவிடும் தொகை சுமார் 16 சதவீதமாக உள்ள நிலையில் இந்தியாவில் 17 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணிப்போரில் 66 சதவீதத்தினர் ஆசிய நாடுகளுக்கும் 9அரை சதவீதத்தினர் வட அமெரிக்க நாடுகளுக்கும் 8 அரை சதவீதத்தினர் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர். உறவினர்களையோ, நண்பர்களையோ சந்திக்க ஓரிரு வாரங்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.