மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி ரூ.6,000 – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
மக்கள் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துவது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சேகர்பாபு, டி.ஆர்.பி.ராஜா, மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து, மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6,000 ரொக்கமாக வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை அந்ததந்த பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூ.4 லட்சத்திலிருந்து, ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கவும், சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூ.5,000-ஐ, ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500ல் இருந்து, ரூ.17,000 உயர்த்தி வழங்க்கப்படும். பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.18,000ல் இருந்து ரூ.22,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மேலும், மழையினால் பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410ல் இருந்து, ரூ.8,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய பயிர்களின் பாதிப்பு என்பது 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் வெள்ளத்தில் கால்நடை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கான நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000 என்றிருந்ததை, ரூ.37,500 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணத்தொகை ரூ.3,000ல் இருந்து ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. அதேபோல், சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு, ரூ.32,000ல் இருந்து, ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ.10,000 இருந்து, ரூ.15,000 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும்.
சேதமடைந்த படகுகளுக்கான அதிகபட்ச மானியத் தொகை ரூ.75 ஆயிரத்திலிருந்து, ரூ.1 லட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச மானியத் தொகை ரூ,5 லட்சத்திலிருந்து, ரூ.7.50 லட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.