கேரளாவில் அதிகரிக்கும் “மஞ்சள் காமாலை”: நமக்கான எச்சரிக்கை!

கேரளாவில் அதிகரிக்கும் “மஞ்சள் காமாலை”: நமக்கான எச்சரிக்கை!

கேரளாவில், குறிப்பாக ஆவோலி பஞ்சாயத்தில் உள்ள நடுக்கர கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்வு, மஞ்சள் காமாலை தொற்றின் அபாயத்தை நமக்கு உணர்த்துகிறது. மே 3 ஆம் தேதி நடைபெற்ற விருந்தில் பங்கேற்ற அக்கம்பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட நபர்களில், சுமார் 50க்கும் அதிகமானோருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. விருந்து நடந்த சரியாக நான்கு வாரங்களுக்குப் பிறகு, மே 30 ஆம் தேதி முதல் இந்த தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது, மேலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கேரளாவில் மஞ்சள் காமாலை பரவலின் தீவிரம் இந்த புள்ளிவிவரங்களில் தெளிவாகிறது:

  • 2025 ஏப்ரல் 16 வரை: 3227 பேருக்கு மஞ்சள் காமாலை, அவர்களுள் 16 பேர் மரணம்.
  • சென்ற ஆண்டு (2024): 7943 பேருக்கு மஞ்சள் காமாலை, அதில் 81 பேர் மரணம். இப்படிப் பரவி கேரளாவை அச்சுறுத்தும் மஞ்சள் காமாலைக்கான காரணம் என்ன?

மஞ்சள் காமாலை என்றால் என்ன? அதன் காரணம் என்ன?

மஞ்சள் காமாலை என்பது ஒரு அறிகுறி மட்டுமே. அதாவது, கல்லீரல் பாதிக்கப்படும்போது ரத்தத்தில் பித்தம் அதிகமாகி, சிறுநீரில் வெளியேறுவதாலும், கண்கள் மற்றும் தோலில் பித்தம் படிவதாலும், சிறுநீர், கண்கள் மற்றும் தோல் மஞ்சள் நிறமாக மாறும்.

இந்த பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணி ஹெப்பாடைட்டிஸ் வைரஸ் ஆகும். ஹெப்பாடைட்டிஸ் வைரஸ் குடும்பத்தில் A, B, C, D, E என பல வகைகள் உள்ளன.

கேரளாவில் தற்போது பரவி வரும் மஞ்சள் காமாலைக்கு முக்கிய காரணம் ஹெப்பாடைட்டிஸ் A வகை வைரஸ் தான்.

ஹெப்பாடைட்டிஸ் A எப்படி பரவுகிறது?

ஹெப்பாடைட்டிஸ் A மற்றும் E வைரஸ்கள் பிரதானமாக நீர் மற்றும் உணவு மூலம் பரவக்கூடியவை.

  • கழிவுநீர் கலப்பு: பாதிக்கப்பட்ட நபர்களின் மலத்தில் இந்த வைரஸ் இருக்கும். கழிந்த மலம் பருகும் நீரில் கலக்கும்போது, அந்த நீரைப் பருகுபவர்களுக்கு தொற்று பரவும்.
  • நெருங்கிய தொடர்பு: தொற்றுக்குள்ளான நபருடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கும், பாதுகாப்பற்ற உடலுறவு கொள்பவர்களுக்கும் இது பரவலாம்.

கேரளாவில் பரவல் அதிகரிப்பதற்கான காரணங்கள்

கேரளாவில் ஹெப்பாடைட்டிஸ் A தொற்று பரவல் அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்:

  • குடிநீர்ப் பஞ்சம்: கோடை நாட்களில் ஏற்படும் குடிநீர்ப் பற்றாக்குறையால், நீரை முறையாகக் காய்ச்சிப் பருகாமல் இருப்பது அல்லது அதிக நாட்கள் நீரை சேமித்து வைத்துப் பருகும் நிலை.
  • மழைநீர் கலப்பு: அடிக்கடி மழை பொழியும் கேரளாவில், சாக்கடை, மலக்குழி போன்ற அசுத்தமான நீர், குடிநீர் கிணறுகள் மற்றும் குளங்களில் கலப்பது.
  • குழாய் கசிவுகள்: நிலத்தடி குடிநீர் குழாய்களில் கசிவு ஏற்பட்டு, மேற்பரப்பில் உள்ள சாக்கடை நீருடன் கலந்துவிடும் நிலை.
  • கூட்ட நிகழ்வுகளில் கவனம் இன்மை: மக்கள் பலரும் ஒன்றுகூடி விருந்துண்ணும் நிகழ்வுகளில், உணவு தயாரிப்பு, உணவு பரிமாறுதல், நீர் சுத்தம் போன்றவற்றில் ஏற்படும் கவனக்குறைவால் தொற்றுப் பரவல் நடக்கலாம்.
  • குளோரினேற்றம் சுணக்கம்: மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரை முறையாக குளோரினேற்றம் செய்து கிருமி நீக்கம் செய்வதில் ஏற்படும் சுணக்கம்.

ஹெப்பாடைட்டிஸ் A தொற்றின் அறிகுறிகள்

கிருமித் தொற்றுக்கு உள்ளாகி 15 நாட்கள் முதல் 50 நாட்களுக்குள் அறிகுறிகள் தோன்றத் தொடங்கும். அவை:

  • காய்ச்சல்
  • பசியின்மை
  • வயிற்றுப்போக்கு
  • உடல் சோர்வு
  • வயிற்று வலி
  • மஞ்சள் காமாலை
  • மூட்டு வலி
  • அரிப்பு

பெரும்பாலானவர்களுக்கு இந்த நோய் அச்சுறுத்தல் இல்லாத சாதாரண நோயாக, எந்த மருத்துவ சிகிச்சையின் தேவையுமின்றி தானாகவே குணமாகிவிடும். நோய் அறிகுறி ஆரம்பித்ததிலிருந்து சில வாரங்களுக்கு இருந்துவிட்டு தானாகவே சரியாகிவிடும். எனினும், ஒரு சிலருக்கு தொற்று சற்று தீவிர தன்மையுடன் வெளிப்பட்டு, சில மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை தொடரலாம். அரிதினும் அரிதாக, தீவிர கல்லீரல் அழற்சி நிலைக்குக் கொண்டு சென்று மரணம் சம்பவிக்கலாம்.

தொற்று ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?

இந்த ஹெப்பாடைட்டிஸ் A தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சில அத்தியாவசிய நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டும்:

  1. பாதுகாப்பான நீர் பருகுதலை உறுதி செய்தல்:

    • நாம் பருகும் நீரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சுத்தமான நீரை நன்றாகக் காய்ச்சிப் பருக வேண்டும்.
    • நிலத்தடி குடிநீர் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.
    • குடிநீரும் சாக்கடை மற்றும் மலக்குழி நீரும் கலந்துவிடாத வண்ணம் பாதுகாக்க வேண்டும்.
    • மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சேமிக்கும் தொட்டிகளை முறையாக காலத்தே சுத்தம் செய்து குளோரினேற்றம் செய்து நீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
    • வீட்டு சுப நிகழ்வுகளில் விருந்தினர்களுக்கு தண்ணீர் வழங்கும் போது, பெரிய பிளாஸ்டிக் டிரம் அல்லது குடலை அடிக்கடி உள்ளே அமிழ்த்தி நீர் எடுத்து பரிமாறும் வழக்கம் தவறு. இயன்றவரை 300 மி.லி, 500 மி.லி நீர்க் குடுவைகளில் நீர் வழங்கலாம். அல்லது, நீரை மூடி போட்ட ஸ்டீல் டிரம்/பாத்திரங்களில் சேமித்து வைத்து, குழாய் மூலம் நீர் பிடித்துப் பரிமாறுவது சுத்தத்தை உறுதி செய்யும்.
  2. பாதுகாப்பான உணவை உறுதி செய்தல்:

    • காய்கறிகள் மற்றும் பழங்களை முறையாகக் கழுவி சுத்தம் செய்து பின்னரே உண்ண வேண்டும்.
    • சமைக்காத / அரைகுறையாக சமைத்த உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக முறையாக சமைக்கப்படாத மாமிசம், மீன், முட்டை உள்ளிட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
    • நன்றாக சமைத்து உண்ண வேண்டும். குறிப்பாக தேக்கி வைக்கப்பட்ட நீரில் வளர்க்கப்படும் இறால், நண்டு உள்ளிட்ட ஓடுள்ள நீர்வாழ் உயிரினங்களை நன்றாக சமைத்து உண்ண வேண்டும்.
    • சுப நிகழ்வுகளில் உணவு சமைக்கப்படும் போதும் பரிமாறும் போதும், அதை சமைப்பவர்கள் மற்றும் பரிமாறுபவர்கள் கைகளை சுத்தமாகக் கழுவி, தேவையான கையுறைகளை அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  3. தன் சுத்தம் பேணல்:

    • நாம் உணவு உண்ணும் முன் கைகளை நன்றாக சோப் போட்டுக் கழுவ வேண்டும்.
    • மலம் கழித்துவிட்டு வந்த பின் கைகளை சோப் போட்டு நன்றாக கழுவ வேண்டும்.
    • பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்க்கவும்.

ஹெப்பாடைட்டிஸ் A பாதிக்கப்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை

  • தொற்றின் தீவிரம் குறையும் வரை, கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளான எண்ணெய், நெய், வெண்ணெய், முட்டை மஞ்சள் கரு, கொழுப்புள்ள கறி போன்றவற்றை சில வாரங்கள் தவிர்க்கலாம்.
  • கண்டிப்பாக மதுவைத் தவிர்க்க வேண்டும்.
  • காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து நிரம்பிய கோழிக்கறி/மட்டன்/மீன் போன்றவற்றை அளவுடன் உண்ணலாம். கொழுப்பு அடங்கிய பகுதிகளைத் தவிர்க்க வேண்டும்.
  • உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளவும்.

தடுப்பூசிகள்

ஹெப்பாடைட்டிஸ் A ஏற்படாமல் தடுப்பதற்கு தடுப்பூசிகள் சந்தையில் உள்ளன.

  • குழந்தைகளுக்கு 12 முதல் 23 மாதங்களுக்குள் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும். முதல் டோஸ் போட்டு ஆறு மாதங்கள் கழித்து இரண்டாவது டோஸ் போட வேண்டும்.
  • சிறார், வளர் இளம் பருவத்தினர், முதியோர் வரை அனைத்து வயதினரும் இரண்டு டோஸ் தடுப்பூசியை ஆறு மாத இடைவெளியில் பெற்றுக் கொள்ளலாம்.

கேரளாவில் ஏற்படும் ஹெப்பாடைட்டிஸ் A தொற்றுப் பரவல் குறித்து நாம் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருந்தால், நிச்சயம் நம்மை அசுத்தமான நீர் மற்றும் உணவினால் பரவும் நோய்களில் இருந்து காத்துக் கொள்ள முடியும்.

டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா

CLOSE
CLOSE
error: Content is protected !!