போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் 7 ஆண்டு வரை சிறை

போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் 7 ஆண்டு வரை சிறை

மது அருந்திவிட்டு போதையுடன் வாகனம் ஒட்டுபவர்களால் நிகழக்கூடிய விபத்துகள் எக்கச்சக்கம் என்றாலும் அதை குறைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடாமல் இருந்தது அரசு. இதனிடையே போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதைய நிலையில், போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் (இந்திய தண்டனைச் சட்டம் 304 ஏ பிரிவின் கீழ் கவனக்குறைவால் மரணம் ஏற்படுத்தியதற்கு) இரண்டு ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இத்தகைய குற்றத்திற்கு இது போதுமான தண்டனையா? என சுப்ரீம் கோர்ட் ஏற்கெனவே கேள்வி எழுப்பி உள்ளது.

ஆம்.. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி உயிரிழப்புகளை ஏற்படுத்துபவர்கள் மீது 304(2) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தால்தான் குற்றவாளியால் ஜாமீனில் வர முடியாது. குறைந்தது 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். இது கொலை வழக்கிற்கு இணையானது. இனி போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவோருக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு, போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது. இஅதையடுத்து போக்குவரத்து அமைச்சகம், உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசித்து நிலைக்குழுவிற்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. இந்த அறிக்கை மாநிலங்களவையில் நேற்று (டிசம்பர் 22) தாக்கல் செய்யப்பட்டது.

இதில், போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான 15 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம், அனைத்து வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் கட்டாயம், வாகன பதிவின் போது இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டியது அவசியம் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது..