‘குபேரா’ படத்துக்காக திருப்பதியில் பிச்சை எடுத்தேன் – தனுஷ் நெகிழ்ச்சி!

‘குபேரா’ படத்துக்காக திருப்பதியில் பிச்சை எடுத்தேன் – தனுஷ் நெகிழ்ச்சி!

கோலிவுட்டில் மட்டுமின்றி டோலிவுட்டிலும் பெரிது எதிர்பார்க்கப்படும் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான ‘குபேரா’வின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் திரைத்துறையைச் சார்ந்த பிரமுகர்களால் நிரம்பி வழிந்ததால் சென்னை ஒரு பிரகாசமான மாலைப்பொழுதைக் கண்டது. இந்நிகழ்ச்சியில் முன்னணி நட்சத்திரங்களான நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா, இயக்குனர் சேகர் கம்முலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர்கள் சுனில் நாரங் மற்றும் ஜான்வி நாரங், பரத் நாரங், சிம்ரன் நாரங், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, தயாரிப்பு வடிவமைப்பாளர் தோட்டா தரணி மற்றும் பாடலாசிரியர்கள் விவேகா, சந்திரபோஸ் மற்றும் நந்தா கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் உற்சாகத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

நடிகை ரஷ்மிகா மந்தனா

ரசிகர்களின் அதீத ஆரவாரங்களுக்கு குறும்புத்தனமாக பதிலளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா, “நானும் உங்களை காதலிக்கிறேன்!” தன்னை அவரது சினிமா உலகிற்கு அழைத்ததற்காக சேகர் கம்முலாவுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த அவர், மீண்டும் தனுஷ் உடன் இணைந்து பணியாற்றுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்திய அவர், இந்த முறை ஒரு முழு நீள காதல் படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார்.

தேவி ஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் அசைக்க முடியாத அன்பிற்கும், ‘குபேரா’வின் பாடல்களான ‘போய் வா நண்பா’ மற்றும் ‘டிரான்ஸ் ஆஃப் குபேரா’வுக்கு கொடுத்த மகத்தான வரவேற்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். குட்டி திரைப்படம் முதல் வேங்கை வரையிலும், தற்போது ‘குபேரா’விலும் தனுஷுடன் தனது இசைப் பயணத்தை நினைவு கூர்ந்த அவர், இந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினார்.

இயக்குனர் சேகர் கம்முலா

இயக்குனர் சேகர் கம்முலா பேசும்பொழுது, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தனுஷை “அற்புதமான ஆளுமை” என்று பாராட்டினார். படத்தின் வெற்றி குறித்து நம்பிக்கை தெரிவித்த அவர், “குபேரா ஒரு அற்புதமான படம். குபேரா மிகவும் அற்புதமான படம். குபேரா மிக மிக அற்புதமான படம்” என்றார். தனது தொழில்நுட்ப மற்றும் படைப்பாற்றல் குழுவின் அயராத முயற்சிக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார், குறிப்பாக ஆடை வடிவமைப்பாளர் காவ்யா ஸ்ரீராமைப் பாராட்டினார், அவர் தனது தலைசிறந்த பணிக்காக உண்மையிலேயே விருது பெறுவதற்கு தகுதியானவர் என்று கூறினார்.

நடிகர் நாகார்ஜுனா

மூத்த நடிகர் நாகார்ஜுனா சென்னை பற்றிய பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார், அடையாறில் பிறந்தது, கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தது, சென்னையைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு இங்கு தனது வாழ்க்கையைத் தொடங்கியது பற்றி நினைவு கூர்ந்தார். சென்னை ரசிகர்கள் தனக்குக் காட்டிய தொடர்ச்சியான அன்புக்கு தனது நன்றியைத் தெரிவித்த அவர்,” ‘குபேரா’வுக்குப் பிறகு, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘கூலி’ ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த காத்திருக்கிறது!”

நடிகர் தனுஷ்

இந்த நிகழ்ச்சி அதன் உணர்ச்சிகரமான உச்சக் கட்டத்தை நெருங்கியதும், தனுஷ் மேடையில் ஏறி, “ஓம் நம சிவாய” என்று தனது பேச்சை தொடங்கினார். “எனக்கு எதிராக எப்படியான எதிர்மறையான விஷயங்களையும் நீங்கள் கிளப்பலாம். ஆனால், என்னுடைய படத்தின் ரிலீஸுக்கு முன்னால் எதையும் தடுக்க முடியாது.
எங்களோடு என்னுடைய ரசிகர்கள் இருக்கிறார்கள்! என்னைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்களைச் சொல்லும் நீங்கள் கொஞ்சம் தள்ளிப் போய் விளையாடுங்கள். இந்த சர்க்கஸ் இங்கே வேண்டாம்.இங்கே இருப்பவர்கள் என்னுடைய ரசிகர்கள் மட்டுமல்ல, 23 வருடங்களாக என்னுடனே இருக்கும் என்னுடைய கம்பேனியன்ஸ், என்னுடைய வழித்துணை. நீங்கள் சும்மா நான்கு வதந்திகளை கிளப்பி என்னை முடித்துவிடலாம் என்று நினைத்தால், அது மாதிரி முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது.உங்களால் ஒரு செங்கலைக் கூட எடுக்கமுடியாது.” என்றவர், ரசிகர்களை நோக்கி, “எண்ணம் போல் வாழ்க்கை. சந்தோஷத்தை வெளியில் தேடாதீர்கள்.உங்களுக்குள் சந்தோஷம் இருக்கிறது. நான் ஒரு வேளை சாப்பாடு இல்லாமலும் இருந்திருக்கிறேன். இன்று ஒரு நல்ல நிலையிலும் இருக்கிறேன். எந்த நிலையில் இருந்தாலும் நான் சந்தோஷமாகத்தான் இருப்பேன்.’குபேரா’ மாதிரியான திரைப்படம் இந்த உலகத்திற்குத் தேவை. என்னை நம்புங்கள், இந்தப் படம் ரொம்ப முக்கியம். எனக்கு இந்தப் படத்தில் முழு நம்பிக்கை இருக்கிறது.மேலும் அடிக்கடி’வடசென்னை – 2′ படத்தைப் பற்றி 2018-லிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அடுத்த வருடம் நடக்கும்…” என்று பேசினார்.

உலகின் நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் அவர் பேசும்பொழுது, “இது கலிகாலம்-வெறுப்பு, எதிர்மறை மற்றும் பொறாமை செழித்து வளரும் காலம்; தீமை நன்மையை விட மேலோங்கி வளர்கிறது. பரலோகத்திலிருந்து வந்த தெய்வீக தேவதை போல தூய்மையான ஆன்மாவான சேகர் கம்முலாவுடன் பணியாற்றியதற்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். தயாரிப்பாளர்கள் சுனில் நரங் மற்றும் ஜான்வி நரங் ஆகியோரின் ‘குபேரா’ திரைப்படத்தின் கதை மீதான நிரந்தமான நம்பிக்கை மற்றும் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு அவர்கள் அளிக்கும் ஆதரவு காலம் கடந்து நிற்கும் “.

தனுஷ், தனது முதல் காட்சியின் படப்பிடிப்பை பற்றி நினைவு கூர்ந்தபோது, குபேரா’வில் கொளுத்தும் வெயிலில், வெறுங்காலுடன், கிழிந்த ஆடைகளில் திருப்பதி மண்ணில், ஒரு பிச்சைக்காரனாக நடித்தது, தனது வாழ்க்கையின் ஆழமான அர்த்தங்களை நினைவூட்டிய ஒரு பாத்திரம். ராஞ்சானாவின் போது பனாரஸில் தனது கடந்தகால அனுபவத்துடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், “பேராசை, பணம், உலக இன்பங்கள்-அவை ஒன்றுமில்லை, தூய்மையான ஆன்மா மட்டுமே முக்கியம்” என்பதை உணர்ந்ததாக கூறினார். “இந்த படம் உங்கள் அனைவருக்கும் அதை கண்டிப்பாக உணர்த்தும். ‘குபேரா’வின் வெற்றி எப்படி இருக்கும் என்பதில் எனக்கு 2000 மடங்கு நம்பிக்கை உள்ளது” என தனுஷ் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

நடிகர்கள் மற்றும் குழுவினர் தங்கள் உழைப்பை பற்றி மிகுந்த ஆர்வத்துடன், ‘குபேரா’ ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் மட்டுமல்ல, ஒரு ஆழமான சினிமா அனுபவத்தையும் வழங்கும் என்று உறுதி பட தெரிவித்தார்.

error: Content is protected !!