அளவுக்கு மீறி வேலை பார்த்தால் ஆளை காலி செய்யும் காலமிது!
மனிதரொருவர் அதிகமான நேரம் வேலை பார்ப்பதற்கும் அவருக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக ஆய்வொன்று முன்னரே சுட்டிக் காட்டி இருந்தது. ஐரோப்பா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஆகிய நாடுகளில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் வேலை நேர மற்றும் உடல் நலத் தரவுகளை ஆராய்ந்த போது வாரத்திற்கு 55 மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை பார்ப்பவர்களுக்கு மூளை யில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து 03 மடங்கு அதிகமாக உள்ளதாக தெரிய வந்தது நினைவிருக்கும். இந்நிலையில் ஜப்பானில் பெண் செய்தியாளர் ஒருவர் அலுவலகத்தில் கூடுதல் நேர வேலை பார்த்ததால் பலியான சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஜப்பானில் உள்ள என்.எச்.கே. தொலைக்காட்சி நிறுவனத்தில் அரசியல் செய்திகளை அளிக்கும் நிருபராக வேலை செய்த மிவா சாடோ (வயது 31), என்பவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி உயிரிழந்தார். தன் வீட்டுப் படுக்கையில் ஒரு கையில் தொலைபேசியை பிடித்தவாறு அவர் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனையில் அவர், அதாவது கூடுதல் நேர வேலை செய்ததால் உயிரிழந்தது தெரிய வந்தது. கூடுதல் நேர வேலை பார்த்ததால் அவரது இதயம் பாதிக்கப்பட்டு உயிர்நீத்துள்ளார். அவர் உயிரிழந்த மாதம், ஊராட்சி மற்றும் தேசிய தேர்தல் குறித்த செய்திகளை அவர் தொடர்ந்து வழங்கி வந்துள்ளார். அவர் ஒரு மாதத்தில் 159 மணிநேரம் கூடுதல் நேர வேலை பார்த்துள்ளார்.’வேலைப்பளு அதிகமாக உள்ளது, ராஜினாமா செய்துவிடலாமா? என்று தினமும் யோசனையாக உள்ளது’ என்று அவர் இறக்கும் முன்பு தனது தந்தைக்கு மின்னலில் அனுப்பி இருந்தார் என்ற செய்தி ஜப்பானிய மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மிவாவின் மரணம் குறித்து இப்போதுதான் உண்மை நிலவரம் வெளியாகியுள்ளது. மேலும் மிகை பணியால் நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் கரோஷி என்னும் வேலைப்பளுவினால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் தற்கொலை போன்றவற்றால் உரிழப்பு அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே வேலைப்பளுவால் மக்கள் அவதிப்படுவதற்குத் தீர்வு காண ஜப்பான் அரசு தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.